தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

pandian012

நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் 6-7 வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தான்.

பொருளடக்கம்:
  • 1 காலம்
  • 2 நெடுஞ்செழியனைக் குறிக்கும் அடைமொழித் தொடர்கள்
  • 3 நெடுஞ்செழியன் வெற்றிகள்
    • 3.1 வெற்றிக் குறிப்புகள்
    • 3.2 நெடுஞ்செழியனுக்கு அறிவுரை
    • 3.3 அடிமைகொள் வேள்வி
    • 3.4 வள்ளண்மை
    • 3.5 முன்னோர்
    • 3.6 ஆட்சி
  • 4 நாட்டுப் பரப்பு
  • 5 பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன்
  • 6 புலவனாக
  • 7 பாடிய புலவர் பட்டியல்
  • 8 ஒப்பு நோக்குக
  • 9 மேற்கோள்

காலம் :

பொதுவாக சங்ககால வேந்தர்களின் காலக்கணிப்புகளில் பல கறுத்து வேறுபாடுகள் காணப்படினும் இம்மன்னனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாக கணிக்கின்றனர். ஒன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து.

மற்றொன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்ற கருத்து. இதற்கு மேலும் வழு சேர்க்கும் விதமாக “இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின்” என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை புகழும் சிலம்பின் வரியை எடுத்துக்காட்டி இளமையிலேயே பகைவரை பொருது வென்ற பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்றவனே என எடுத்துக்காட்டுவார் முனைவர் வ. குருநாதன். இவர் கூற்றின் படி ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இளமையிலேயே இறந்ததும் அவனின் மனைவியான பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறினாள். இந்த தலையாலங்கானத்து செருவென்றவனை குறிக்கும் பாடல்களும் இவன் இளமையிலேயே அரியணை ஏறியதாக சுட்டுகின்றன. அதன்படி இவன் பெற்றொரும் 30 வயதுக்குள்ளேயே மறைந்திருக்க வேண்டும். அதனால் இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்று கூறுகிறார்.

நெடுஞ்செழியனைக் குறிக்கும் அடைமொழித் தொடர்கள் :

அடுபோர்ச் செழியன்
மறப்போர்ச் செழியன்
வெம்போர் செழியன்
இயல்தேர்ச் செழியன்
திண்டேர்ச் செழியன்
பொற்றேர்ச் செழியன்
கல்லாயானை கடுந்தேர்ச் செழியன்
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்
கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஒளிறுவாள் தானை கொற்றச் செழியன்
வேல்கெழு தானைச் செழியன்
கைவண் செழியன்
முசிறி முற்றிய செழியன்

நெடுஞ்செழியன் வெற்றிகள் :

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்பது வரலாறு இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக் குறிப்புகள் :

  • கூடல் பறந்தலையில் இருபெரு வேந்தரை வென்றது
இருபெரு வேந்தரும் வேளிரும் சாயப் போரிட்டு வென்றவன்
தன்னைத் தாக்கிய ஒன்றுமொழி வேந்தரின் முரசுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.
  • பகைவர் நாட்டுக்கே துரத்திச் சென்று வென்றான்.
  • சேரநாட்டு முசிறியில் சேரரை வென்றது
குட்டுவர் (சேரர்) பலரை வென்றவன். “பல்குட்டுவர் வெல்கோவே”
  • ஆலங்கானம் என்னும் தலையாலங்கானத்தில் எழுவரை ஓட்டியது

இயல்தேர்ச் செழியன் ஆலங்கானத்து எழுவரை வென்றான்.

எழுவரை வென்றோன் – புலவர் இவனைத் தழுவினார் குடபுலவியனார்
நாடுகெழு திருவின் பசும்பூண் செழியன் – எழுவரைத் தனியனாக வென்றான்.
இளமையிலேயே வென்றான்.
செழியன் பாசறையில் வாள் மின்னியது
கொடித்தேர்ச் செழியன் எழுவரை வென்றான்
இவனைத் தாக்கியவர்கள் பலர்.
  • மிழலை நாட்டு எவ்வியை வென்றது, முத்தூறு வேளிரை வென்றது
  • ஆய் குலத்தவரின் கீழிருந்த குற்றாலத்தை வென்றான்
  • நெல்லின் ஊர் பகுதியை வென்றான்
  • முதுமலைப் பகுதியை வென்றது
  • பலர் மதில்களை அழித்தது
  • தென்பரதவர் என்ற நெய்தல் மன்னர்களை வென்றான்.
  • முதுவெள்ளிலை வென்றான். இந்நக்ரம் நெய்தல் நில வளமும் மருதம் நில வளமும் மிக்கதாகும்.

நெடுஞ்செழியனுக்கு அறிவுரை :

அடுபோர்ச் செழியன் – நீர்நிலைகளைப் பெருக்கவேண்டும் என இவனைப் புலவர் வேண்டுகிறார்

அடிமைகொள் வேள்வி :

மன்னர் இவனுக்கு ஏவல் செய்யும் புதுமையான வேள்வியை இவன் செய்தான். புறம் 26,

வள்ளண்மை :

வாள் விரர்களுக்கு
கொற்றச் செழியன் வாள்வீரர்களுடன் சென்று போரிட்டு வென்றபோதெல்லாம் பாணர்கள் களிறுகளைப் பரிசாகப் பெற்றனர்.
சாகும்போது (கன்னன் போல்)
புலவர் ஒருவர் இவன் சாகக் கிடந்த போர்க்களத்தில் கண்டு பாடி இவன் கழுத்திலிருந்த முத்தாரத்தையும், இவன் ஏறிவந்த யானையையும் பரிசிலாகப் பெற்றார்.
பாணர்க்கும் பாட்டியர்க்கும் தேரும் யானைகளும் வழங்கியவன்
கருணை உள்ளம்
போர்ப் பாசறையில் இவனது படை காயம் பட்டுக் கிடந்ததைக் கருணை உள்ளத்தோடி இரவெல்லாம் தூங்காமல் தேற்றினான்.

முன்னோர் :

  • கடல்வெள்ளம் கொண்ட முன்னோரின் வழிவந்தவன் “நல்லூழி அடி படர பல்வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக”
  • நிலந்தரு திருவின் பாண்டியன் வழியில் வந்து ஆண்டவர்களில் போர்யானை போன்றவன்

ஆட்சி :

  • உழவர்க்குக் ‘காவுதி’ என்னும் பட்டம் வழங்கியவன்
  • சிறந்த போர் விரர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூ (இக்காலப் பத்மஸ்ரீ போன்றது) சூட்டிப் பாராட்டியவன்
  • பழிக்கு அஞ்சுபவன். ஈகையால் வரும் புகழை விரும்புபவன்.
  • அறங்கூறு அவையம் நிறுவி நீதி வழங்கியவன்
  • ஆட்சிக்கு உதவியாக ‘நாற்பெருங்குழு’ வைத்திருந்தவன்
  • ஐம்பெருங்குழுவாக ஐந்து அரசர்களை வைத்துக்கொண்டு அரசாண்டவன்
  • கண்ணுள் வினைஞர் (ஓவியர்), கம்மியர் முதலான கலைஞர்களைப் போற்றியவன்
  • மதுரையில் ‘ஓண நன்னாள்’ (திருவோணத் திருநாள்) கொண்டாடியவன்

நாட்டுப் பரப்பு :

  • பண்டைய தமிழகம் முழுவதும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
  • தந்தை மதுரையிலிருந்து ஆண்டபோது இவன் கொற்கையில் இளவரசனாக இருந்து தந்தைக்குப் பின் மதுரையில் முடிசூடிக்கொண்டான்.
  • இவனது நாட்டுப் பரப்பில் இருந்தன எனச் சில ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதுவெள்ளில்  பெருங்குளம்  நெல்லின் அள்ளூர்  சிறுமலை பொதியில்  முதலானவை.

பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன் :

பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சிக்கும் [48],மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் பாடிய நெடுநல்வாடைக்கும் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியனான இவனே என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்செழியனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்த மாங்குடி மருதனார் வீடு அடைய வேண்டிய அறநெறி கூறுவதற்காகவே இப்பாடலை நெடுஞ்செழியன் மீது பாடினார். நிலையாமையை எடுத்துச் சொல்லும் இந்நூல் இவனது முன்னோர்களின் சிறப்பும் செங்கோல் சிறப்பும், பாண்டிய நாட்டின் வளமும், மதுரையின் அழகும் கூறப்பட்டுள்ளன.

புலவனாக :

இவன் புலவனாகவும் விளங்கினான். இவனது ஒரே ஒரு பாடல் புறநானூறு 72 எண்ணுள்ள பாடலாக உள்ளது.

அதில் அவன் வஞ்சினம் கூறுகிறான். இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும் என்று பலர் முன் கூறுவது வஞ்சினம்.

நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால்,

  • என் குடிமக்கள் என்னைக் கொடியன் என்று தூற்றுவார்களாக!
  • மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட என் புலவர்-சங்கம் என்னைப் பாடாது போகட்டும்!
  • என்னைப் பாதுகாப்போர் துன்பம் கொள்ள, இரவலர்களுக்கு வழங்கமுடியாத வறுமை என்னை வந்தடையட்டும்!

-இவ்வாறு இவன் கூறுவதில் இவனது நற்பண்புகள் வெளிப்படுகின்றன.

பாடிய புலவர் பட்டியல் :

இவனை

  • அள்ளூர் நன்முல்லையார் – அகம் 46
  • ஆலங்குடி வங்கனார் – அகம் 106
  • ஆலம்பேரி சாத்தனார் – அகம் 47, 145
  • இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் – சிறு 62,65
  • இடைக்குன்றூர் கிழார் – புறம் 76, 79
  • உறையூர் முதுகூத்தனார் – அகம் 137
  • எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் – அகம் 149
  • கல்லாடனார் – புறம் 23, 25, 371, அகம் 209
  • குடபுலவியனார் – புறம் 18, 19
  • குறுங்கோழியூர் கிழார் – புறம் 17
  • பரணர் – அகம் 116, 162, குறு 393
  • பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் – நற் 387
  • மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் – அகம் 231
  • மதுரைக் கணக்காயனார் – அகம் 338
  • மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் – அகம் 36, 57, 253, நற் 340, 358, நெடுநல்வாடை
  • மதுரைத் தத்தங்கண்ணனார் – அகம் 335
  • மதுரை பேராலவாயார் – அகம் 296
  • மதுரை மருதன் இளநாகனார் – நற் 39
  • மாங்குடி மருதனார் – புறம் 24, 26, 372, மதுரைக் காஞ்சி
  • விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் – நற் 298

ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

ஒப்பு நோக்குக :

  1. பசும்பூண் பாண்டியன் – இப்பெயருடன் சங்க இலக்கியங்களில் ஐந்து பாடல்களும் (அகம் 162, 231, 253, 338 குறு 393) தொல்காப்பிய பொருளதிகாரக் களவியலுக்கு நச்சினார்க்கினியார் உரையும் (நூற்பா 11), பசும்பூண் வழுதி என்னும் பெயருடன் நக்கீரர் பாடலிலும் குறிப்புகள் உண்டு. தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலேயே இவ்வெற்றியை பெற்றதால் அவனுக்கு பசும்பூண் பாண்டியன் என பெயர் அமைந்திருக்கலாம்.
  2. மேலும் தலையாலங்கானத்துச் செழியனை பாடிய இடைக்குன்றூர் கிழார் இவனை பசும்பூண் செழியன் எனப் பாடியுள்ளார். தலையாலங்கானத்துச் செழியனைப் பற்றி பல பாடல்கள் இயற்றிய நக்கீரர் இவனை பசும்பூண் பாண்டியன் (அகம் 253), பசும்பூண் வழுதி (நற் 358) என்றும் பாடியுள்ளார். நக்கீரர் தந்தையான மதுரை கணக்காயனார் (அகம் 253), பரணர் (அகம் 162, குறு 393) மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (அகம் 231) இவனை பசும்பூண் பாண்டியன் எனப் பாடியுள்ளனர்.
  3. மேற்கண்டவற்றிலும் பரணர் செழியன் பெயரைக் குறித்து இவன் கூடற்பறந்தலை போரில் பெற்ற வெற்றியை பாடியதால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் முனைவர் வ. குருநாதன்.
  4. பசும்பூண் பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு மட்டும் இவனை வேறு மன்னன் என்பது கூடாது எனவும் மதுரையை இவன் சிறப்பாக ஆட்சி செய்தும் இவனைப் பற்றி புலவர்கள் புறப்பாடல்கள் பாடவில்லை என்றும் எனவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி.
  5. மேலும் பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்ப்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி. (அகம் 231)

 

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *