கோட்டூர் (திருக்கோட்டூர்)

ko117

கல்வெட்டு:

இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சோழர்களுடையன. இவைகளுள் விளக்குத்தானம், விளக்குப்பணதானம், கோயிலுக்கு நிலதானம், முதலியவைபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்ற ஒரு பெருமகனார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சேக்கிழார் தம்பியாரது பெயர் வருதல் காண்க. திருத்தருப்பூண்டி மடாதிபதி திருமாளிகைப் பிச்சர் பெயர் காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் பெயர் குறிப்பிடப்பெறாத பரகேசரி வர்மன் காலத்தது ஒன்று, முதலாம் இராஜராஜ சோழன் காலத்தது ஒன்று, முதற்குலோத்துங்கசோழன் காலத்தன நான்கு, இரண்டாம் இராஜாதி ராஜன் காலத்தன ஐந்து, மூன்றாங் குலோத்துங்கன் காலத்தன நான்கு, மூன்றாம் இராஜராஜன் காலத்தன நான்கு, ஆக சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள் பத்தொன்பதும், ஒருவயலில் நட்டுவைத்துள்ள தஞ்சை மராட்டிய மன்னருடைய கல்வெட்டு ஒன்றும்,

மற்றொரு வயலில் நட்டு வைத்துள்ள தளவாய் அனந்தராயர் சாஹேப் கல்வெட்டு ஒன்றும் , ஒரு தோப்பில் நட்டு வைத்துள்ள தஞ்சை இரகுநாத நாயக்கர் காலத்தது ஒன்றும், மற்றொரு தோப்பில் நட்டு வைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக மொத்தத்தில் 23 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டில், கொழுந்தாண்டார் என்றும் மூன்றாம் இராஜராஜதேவன் காலத்தில் மூலஸ்தானம் உடையார் என்றும், தஞ்சை மராட்டிய மன்னர் (மகாராஜா சாஹேப்) கல்வெட்டில் கொழுந்தீசுவர சுவாமி என்றும் கூறப்பெற்றுள்ளனர்.

முதலாம் இராஜராஜ சோழதேவர் காலத்தில் இவ்வூர், அருண்மொழித் தேவவளநாட்டு நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் முதல் குலோத்துங்கன் கல்வெட்டில் இராஜேந்திர சோழவள நாட்டுத் நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே அருண்மொழித்தேவ வளநாடு என்றும் பெயர் பெற்ற செய்தி புலனாகின்று.

மேலும் இக்கோயிலிலுள்ள முதற் குலோத்துங்க சோழ மன்னனது 27-ஆம் ஆண்டுக்கல்வெட்டு, இவ்வூர், அருண்மொழித் தேவவள நாட்டிற்கு உட்பட்டிருந்ததையும், அம்மன்னனது 50ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு இவ்வூர் இராஜேந்திர சோழ வளநாட்டிற்கு உட்பட்டிருந்ததையும் உணர்த்துவதால் இராஜேந்திர சோழ வளநாடு என்னும் பெயர் முதற் குலோத்துங்க சோழனது ஆட்சி யின் பிற்பகுதியில் ஏற்பட்டது என்பது உறுதியாகும். (இராஜேந்திர சோழன் என்பது முதற் குலோத்துங்கனுடைய பெயர்களுள் ஒன்றாகும்.)

மூன்றாங் குலோத்துங்க சோழதேவரின் இரண்டாம் ஆண்டில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் பல்லவ அரையன் களப்பாளராயர் ஒரு நுந்தாவிளக்கினுக்குப் பணம் உதவி யுள்ளார். இரகுநாத நாயக்கர் பத்து வேலி நிலத்தைக் கொடுத்துள்ளார்.

இத்திருக்கோயிலில் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருளுவித்தவர் நாகமங்கலமுடையான் அம்பலங் கோயில் கொண்டவர் ஆவர். இச்செய்தி மூன்றாம் இராஜராஜசோழ தேவரின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்ததாகும்.

இவ்வம்பலங் கோவில் கொண்டவர், இம்மன்னனது 18ஆம் ஆண்டில் இப்பிள்ளையார்க்குத் திருவமுது உள்ளிட்டவைகளுக்கு நிலம் அளித்துள்ளார். அதில் இப்பிள்ளையார், திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளையார் எனக்குறிக்கப் பெற்றுள்ளனர்.

இராஜேந்திரசோழ வளநாட்டு வெண்டாழை வேளிர்க் கூற்றத்துத் திருத்தருப்பூண்டியில், திருமாளிகைப் பிச்சர் என்ற மடபதியைப்பற்றி மூன்றாங் குலோத்துங்கசோழதேவரது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது.

This entry was posted in கல்வெட்டு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *