திருக்கோவில் கல்வெட்டுக்கள்:
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலின் மூலவர் சுவாமி சன்னிதியின் மேற்கு, வடக்கு தெற்குபுற வெளி சுவர்களில் மொத்தம் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. 1914 ஆம் ஆண்டு தொல் பொருள் துறையினர் இக்கல்வெட்டுக்களை படியெடுத்து வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒன்பது கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தவைகளாகும்.
இது தவிர சூரிய புஷ்கரணி தெப்பக்குளத்தின் தண்ணீர் வந்து விழும் மடையின் இரு பக்கங்களிலும் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டு விபரங்களை தென்னிந்திய கல்வெட்டு சாசன 1914 ஆம் ஆண்டிற்கான அறிக்கை 1962-63 ல் கடித எண் 203/1463/1511 நாள் 11-4-62 ல் இக்கல்வெட்டுக்கள் வ.எ.402 முதல் 412 முடிய எண்ணிடப் பட்டதாக கூறுகிறது. தெப்பக்குள கல்வெட்டிற்கு எண்.510 என்று எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்கள் விபரங்கள் வருமாறு:
1. கல்வெட்டு எண்.402:
இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. சோழநாடு கொண்டவன், திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் என்ற சுந்தரபாண்டியத் தேவர் தனது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1221 ல் இதை பொறித்துள்ளான்.
செய்தி
“செங்காட்டிருக்கை இடத்துவளியில் உள்ள குறள் மணீஸ்வரமுடையார் கோயிலில் மூன்று நந்தா விளக்கெரிக்க கொடை கொடுத்தது. ”
2.கல்வெட்டு எண்.403:
இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. மன்னன் சடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவன் தனது பதினெட்டாவது(13+5) ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1208 ல் இதை பொறித்துள்ளான்.
செய்தி
“வெண்பில் நாட்டு செங்காட்டிருக்கை இடத்துவளியில் உள்ள குறள்மணீஸ்வரமுடைய நாயனார் கோயில் அர்த்த மண்டப நுழைவு வாயிலுக்கு ஒரு கல் தானமாக கொடுத்தது.”
3. கல்வெட்டு எண்.404:
இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளி சுவரில் உள்ளது. திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியத் தேவர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1219ல் இதை பொறித்துள்ளான்.
செய்தி
“இது பிறந்த தின சதாபிசேக நாளன்று சொக்கநாதருக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி தெரிவிக்கிறது. இக் கல்வெட்டு முழுமையடையாமல் அரைகுறையாக உள்ளது”
4. கல்வெட்டு எண். 405:
இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. காலம் எதுவும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. மன்னன் சுந்தரபாண்டியத் தேவன் காலத்தில் பொறிக்கப்பட்டது.
செய்தி
“குறள் மணீஸ்வரமுடைய நாயனார் கோயிலுக்கு இரண்டு மாலைகள் கொடுத்து வர நிலமும் நந்தவனமும் கொடை கொடுத்த விபரத்தை இது தெரிவிக்கிறது.
5. கல்வெட்டு எண்.406:
இது மூலவர் சுவாமி கருவறையின் தெற்கு பக்க வெளிசுவரில் உள்ளது. மன்னன் சுந்தரபாண்டியத் தேவர் காலத்தில் பொறிக்கப்பட்டது. சோழ நாட்டை பகிர்ந்தளித்தவன் என்ற சிறப்பு பெயர் பெற்ற இவன் தனது எட்டாவது ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1224ல் பொறித்தது.
செய்தி
“தென்னிலங்கை வளஞ்சியர்களில் ஒருவரான செகல் சேவகத் தேவன் ‘அருந்தவ நாச்சியார்’ எனப்படும் ‘பார்வதி’ சிலையை பிரதிஷ்டை செய்தான்.”
6.கல்வெட்டு எண். 407:
இது மூலவர் சுவாமி கருவறையின் மேற்கு பக்க வெளி சுவரில் மன்னன் சுந்தரபாண்டியத் தேவன் தனது எட்டாவது ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1227ல் பொறித்தது.
செய்தி
“செகல் சேவகத் தேவன் ‘லிங்கபுராணத் தேவர்’ எனப்படும் ‘லிங்கோத்பவர்’ சிலையை பிரதிஷ்டை செய்தான்.”
7. கல்வெட்டு எண் 408:
இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு வெளி சுவரில் மன்னன் “முடிகொண்ட சோழபுரத்தில் சோழரை வென்றவன்” என்ற சிறப்பு பெயர் பெற்ற சுந்தரபாண்டியத் தேவர் தனது நான்காவது(3+1) ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி.1220ல் பொறித்தது.
செய்தி
“அழகன் அருளாள பெருமாள் என்ற உலக நாராயண சக்கரவர்த்தியால் உலக நாராயண சந்தி பூசை என்ற சிறப்பு பூசைக்கு நிலம் கொடுத்தது குறித்து தெரிவிக்கிறது. முதலாம் ஆண்டு தனுசு தேதி 3 சிரவண புதன்கிழமை என்று கல்வெட்டு பழுதுடன் உள்ளது”
8.கல்வெட்டு எண்.409:
இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு பக்க வெளி சுவரில் உள்ளது. ‘சோழநாடு கொண்ட’ சுந்தர பாண்டியத் தேவரின் பதினொன்றாவது ஆட்சி ஆண்டில் மார்கழி ஐந்தாம் நாள் இக்கல்வெட்டு பொறிக்கப் பட்டுள்ளது.
செய்தி
“சோழகங்க தேவனின் ஆணைப்படி சோழகங்கம் என்ற இடத்திலிருந்து ‘இணக்கு நல்ல பெருமாள்’ கல் சிலையையும் உற்சவர் பெண் (உலோக ) சிலையையும் கொடுத்தான்”
கல்வெட்டு எண்.410:
இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு வெளி சுவரில் உள்ளது. குலசேகர தேவன் கி.பி.1286ல் பொறித்தது.
செய்தி
“பல நாடு கொண்ட குலசேகரனின் பதினெட்டாவது ஆட்சி ஆண்டில் சோழகங்க தேவனின் ஆணைப்படி இடத்துவளி பிள்ளையார் கோயிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டது”
10. கல்வெட்டு எண். 411:
இது மூலவர் கருவறையின் வடக்கு பக்க வெளி சுவரில் உள்ளது. முடிகொண்ட சோழபுரத்தில் பகைவரை வென்ற திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் தனது பதினைந்தாவது ஆட்சியாண்டில் அதாவது 1231ல் இக்கல்வெட்டை பொறித்துள்ளான்.
செய்தி
“இது துர்க்கையார் பிரதிஷ்டை செய்யப்பட்டது குறித்த ஆவணம்”
11) கல்வெட்டு எண் 412:
இது மூலவர் சுவாமி கருவறையின் வடக்கு பக்க வெளிசுவரில் உள்ளது. சோழ நாட்டை பகிர்ந்தளித்தவன் என்ற சிறப்பு பெயர் கொண்ட திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவன் தனது 14 வது ஆட்சி ஆண்டில் அதாவது கி.பி. 1230(மிதுனம் மாதம் அதாவது ஆனி மாதத்தில் தேதி 13 ஞாயிற்றுக்கிழமை ரோகிணி நட்சத்திர தினத்தில்) இக்கல்வெட்டை பொறித்தது.
செய்தி
“குளம் விற்பனை குறித்தும் இடத்துவளியில் உள்ள இடத்துவளி பிள்ளையார் கோயிலுக்கு நிலம் கொடை கொடுத்தது குறித்தும் கூறுகிறது”
12. கல்வெட்டு எண்.510:
இது சூரிய புஷ்கரணி தெப்பக்குளத்தின் நீர் வரத்து மடையான பிரமடை கண்மாயின் பிரமடையின் இரு பக்கங்களிலும் உள்ளது. இது(சக-7) கி.பி.1115 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்டுள்ளது அரசன் பெயர் இதில் இல்லை.
செய்தி
” ஊருணி நிறுவப்பட்டுள்ளது குறித்த ஆவணமிது. செங்காட்டிருக்கை இடத்துவளியில் உள்ள திருவாளராய உதயன் சோழகங்கன் மகன் அருளாரழகப் பெருமாள் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது”.