இவ்வூர் அருப்புக்கோட்டை வட்டத்துப் பந்தல்குடி உள்வட்டத்தில் அருப்புக்கோட்டை எட்டையபுரம் சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து 9கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. பந்தல் என்பது உயரமான தூண்களைக் கொண்ட கல் மண்டபத்தைக் குறிப்பதாக அமையும். இத்தகைய மண்டபம் பழங்காலத்தில் கோயில் திருவிழாக்களில்,இறைவன் எழுந்தருளுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.நாளடைவில் இங்கு குடியிருப்பு தோன்றியதால் இஃது பந்தல்குடி ஆயிற்று எனலாம்.
மேலும் பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பெறப்போராடிக் கொண்டிருந்த சமயம் பல குறுநில மன்னர்கள் சிற்றூர்கள் பலவற்றை அழித்தார்கள். அச்சிற்றூர்களில் இதுவும் ஒன்று. அவர்கள் அழிவு ஏற்படுத்திய பின்பு அமைதி ஏற்பட்டது. அவ்வமைதிக்குப் பின்னர் கோயில் மண்டபத்தைச் சுற்றி தற்போதைய கிராமம் ஏற்பட்ட காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் செவிவழிக் கதை ஒன்று கூறுகின்றது.
இவ்வூர் ஒரு பாளையத்தினுடைய சிறு பிரிவாக விளங்கியுள்ளது. இராமநாதபுரம் சேதுபதியின் ஆளுகையின் கீழிருந்தது. நத்தத்தைச் சேர்ந்த ‘துபாஷ் காதர் சாகிப்’ என்பவர் இராமநாதபுரம் மன்னரிடமிருந்து ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கொடுத்து இவ்வூர் ஜமீன் பகுதியை 1905-இல் வாங்கினார். அதிலிருந்து அவர் பந்தல்குடி ஜமீன்தார் என்று அழைக்கப்பட்டார். இந்த ஊரில் ஒரு சிறப்பான அமைப்பு காணப்படுகிறது. ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு ஊரின் பெயரைக் கொண்டு விளங்குகின்றது. சான்றாக அழகாபுரி, வெள்ளையாபுரம், மேட்டுப்பட்டி, நெடுங்கரைப்பட்டி, ரெட்டியபட்டி எனத் தெருப் பெயர்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வூரில் தற்போது நான்கு கோயில்கள் காணப்படுகின்றன. ஊரின் பல பகுதிகளில் பழைய கிராமத்தினுடைய எச்சங்களும், கோயிலின் எச்சங்களும் உள்ளன. ஒரு கோட்டையும் இங்குள்ளது. தற்போதுள்ள பெருமாள் கோயிலில் பழைய கோயிலின் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு இவ்வூரின் பழமையைக் கணிக்க இயலும்.கோயில் மணி ஒன்றில் காணப்படும் கல்வெட்டொன்று நாயக்கர் ஆட்சி இப்பகுதியில் விளங்கியதைக் காட்டுகின்றது.பழைய சிவன் கோயில் இறைவன் பெயர் ‘பாதாள ஈசுவரர்’ என்பதாகும்.
இவ்வூரில் சமணச்சிலை ஒன்றும் காணப்படுகின்றது. இது இங்கு ஒரு சமணப்பள்ளி இருந்ததற்கு ஆதாரமாகிறது. எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூரில் சமண மதம் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.