பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது.
இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது.
அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.
பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர். முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
கொற்கை துறைமுகம்:
இந்த கொற்கைநகர் பொ.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது. பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது. அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் பெரிப்ளூஸ், டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெருஞ்சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்.
அழகன்குளம் துறைமுகம்:
இங்கு கிடைத்த ரோமானியர் காசுகள், மட்கலன்கள், பானை ஓடுகள் போன்றவை இந்த அழகன்குளத்தின் தொடர்ச்சியான வரலாறுகளை கி.மு. 4 – கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையிலும் அறிய உதவுகிறது. அதன்படி இதுவும் ஒரு சங்ககாலத் துறைமுகம். இதன் பெயர் நேரடியாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை ஆயினும் தாலமி குறிப்பிடும் அர்கெய்ரு என்ற நகரம் இதுவாக இருக்கலாம். ஆனாலும் இந்த ஆர்கெய்ரு சோழரின் உறையூர் என்பது நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் கருத்து.
மருங்கூர் துறைமுகம்:
இம்மருங்கூர் மருங்கூர்ப் பட்டினம் மற்றும் ஊணூர் என்று இரண்டு துறைமுகப்பட்டினங்களை அடக்கியது. தாலமி இதை சாலூர் எனக்குறிக்கிறார்.
நீலகண்ட நகரம் துறைமுகம்:
இந்நகரம் சேர நாட்டிலிருந்தாலும் பிளைனி காலத்தில் மட்டும் இது பாண்டியர் துறைமுகமாக திகழ்ந்தது. இங்கிருந்தே செங்கடல் துறைமுகங்களுக்கு மிளகு ஏற்றுமதி அதிகளவு நடந்ததாகத் தெரிகிறது.
சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளர காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின.
செங்கடல் செலவு குறிப்பிடும் துறைமுகங்கள்
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன.
இந்த துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.
இத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,
மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் :
காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்த செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.
நகரத்தார் :
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.
மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் :
இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தை கவனிப்பவர்கள்.
நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் :
இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.
தென்னிலங்கை வளஞ்சியர் :
இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.
சோனகரர் :
இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்..
அஞ்சுவண்ணம் :
இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.
திருப்புடைமருதூர் ஓவியங்கள், புன்னைக்காயலில் அரபிய வணிகர்கள் உலாவுவது போல் காட்டப்பட்டுள்ளது .
மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரிலுள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.
காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.