கொடு மணல்:
திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களின் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள கொடுமணல் கிராமம் ஒரு தொல் பழங்கால தகவல் சுரங்க கொத்து.இந்த தொல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகள்,ஆராய்ச்சிகள்,அதன் அடிப்படையிலான கருது கோள்கள்,முடிவுகள் நமக்கு ஒரு உவப்பான மேலும் தகவல்பூர்வமான பழந்தமிழர் நாகரீகம் பற்றிய சித்திரத்தை அளிக்கின்றன.இந்த தொல் நகரம் நமக்கு சொல்லும் செய்திகளையும்,அது வரலாற்றின் பக்கங்களில் பதிந்துள்ள அதன் தடங்களையும் நமக்காக மீள் உருவாக்கம் செய்து அதன் வரலாற்று பக்கங்களை நாம் தரிசிக்க அனுமதிக்கிறது.இங்கு மேலும் விரிவான தொல்லியல் துறையின் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஏராளமான புதிய வெளிச்சங்கள் நம் சங்க கால வரலாற்றில் கிடைக்கும்.
சங்க சித்திரங்களில் கொடுமணல் :
கொடுமணல் தொல்லியல் களம் இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் வட கரையில், ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில்காணப்படுகின்றன.
பதிற்றுப்பத்தில் கொடுமணம் என்ற பெயரில் கொடுமணல்
கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபிற் கைவல் பாண தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை (67) உரை: கொடுமணம் – கொடுமணமென்னு மூரிடத்தும் ; பந்தர்ப்பெயரிய பேரிசை மூதூர் – பந்தரென்னும் பெயரையுடைய பெரிய புகழையுடைய பழையவூரிடத்தும் ; பட்ட – பெறப்படுவனவாகிய; தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுவை – தென்கடலில் எடுக்கப்படும் முத்துக்களோடு நல்ல அணிகலங்களையும் பெறுவாய் எ – று.
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப; சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல், வேறு படு திருவின் நின் வழி வாழியர், கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம்,(74) கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டு ஊர்களும் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் இணையாகவே குறிப்பிடப்படுகின்றன. இவை இரண்டுமே அரபிக் கடலோரத் துறைமுகங்கள்.
கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் பந்தர் துறைமுகத்தை Balita எனக் குறிப்பிடுகிறார்.[1] சங்ககாலத்து அரபிக்கடலோரத் துறைமுகங்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரிசைப்படுத்தினால் முசிறி, தொண்டி, (கொடுமணம்), பந்தர், குமரி என அமையும் எனப் பெரிப்ளஸ் குறிப்பு காட்டுகிறது.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்,சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்,காலத்திலும், அவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை,காலத்திலும் கொடுமணம் துறைமுகத்தைப் பகுதியாகக் கொண்ட பந்தர் துறைமுகம் செல்வாக்கினைப் பெற்றிருந்தது. இவர்களது முன்னோனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்ஆட்சிக் காலத்தில் தொண்டித் துறைமுகம் செல்வாக்குடன் திகழ்ந்தது.]பாண்டிய நாட்டுக் கிழக்குக் கடற்கரை கொற்கை முத்தும், சேரநாட்டு மேற்குக் கடற்கரைப் பந்தர் முத்தும் பெரிதும் போற்றப்பட்டன.
பந்தர் என்னும் ஊரில் விலை உயர்ந்த அணிகலன்கள் அணியப்படாமல் துஞ்சிக் கிடந்தனவாம்.
கொடுமணம் துறைமுகத்தில் இறக்கப்பட்ட வேலைப்பாடு மிக்க அரிய கலைப்பொருள்கள் பாண்டில் என்னும் வண்டிகளில் ஏற்றி மேற்குத் தொடர்ச்சிமலை வழியாக உள்நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
பாணர்கள் பலர் கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்தனராம். அவர்கள் அவ்வூரிலிருந்த செல்வப் பெருமக்களிடம் கடன் பெற்றுத் திருப்பித் தர முடியாமல் நெடுமொழி (சாக்குப்போக்கு) கூறிவந்தனராம். அவர்கள் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பந்தர் என்னும் ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் தென்கடல் முத்தும் சிறந்த அணிகலன்களும் பரிசாகப் பெற்றுவந்து தம் கடும்பு என்னும் கூட்டுக் குடும்ப உறவினர்களின் கடன்களையும் தீர்த்துவிட்டு மகிழ்வாக வாழலாமாம். இவ்வாறு பாணரை ஆற்றுப்படுத்தும் பாடல் ஒன்றைக் கபிலர் பாடியுள்ளார். என்று விக்கி சுட்டுகிறது(http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E
அரிசல் கிழாரை பாட்டுடை தலைவனாக கொண்ட 6ம்பதிற்றுப்பத்தில் கொடுமணல் இடம் பெற்றுள்ளது.இந்த தொல் நகரத்தின் உச்சம் கி.மு.2ம் நூற்றாணடை சேர்ந்த்து என கணிக்கப்பட்டுள்ளது.
சங்கச்சித்திரங்களில் கொடு மணலின் நகர்ச்சிறப்பு,அங்குள்ள பாணர்கள்,கலங்கள்,முத்துக்கள்,ஆபரணங்கள்,அணிகலன்கள் பற்றிய சித்தரிப்புகளை நீங்கள்படித்திருக்கலாம்.அகழ்வின் போது இந்த நகரம் அதன் சங்க கால இருப்பை,அதன் புராதானத்தை, நாகரீக மேன்மையை,அந்தரங்க தரிசனத்தை நமக்காக மிக மெதுவாக திறந்து காண்பிக்க விழைகிறது.
அகழ்வில் அகப்பட்ட அரியவைகள்:
கடந்த 22 ஆண்டுகளாக விட்டு விட்டு நிகழும் அகழ்வில் இங்கு கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்கள்,வேறுபட்ட வடிவிலான நாணயங்கள்,வேற்று நாட்டு நாணயங்கள்,முதுமக்கள் தாழி.கோர்க்கும் வகையிலான மணிகள்,அணிகலன்கள்,ஆபரணங்கள்,மண்சட்டிகள்,இசைக்கருவிகள், நெசவு தொழில் உபயோகிக்கப்படும் தக்களி,சுடு மண்ணால் செய்யப்பட்ட தொழிற்கருவிகள்,பண்டைய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள்,இலக்கணப்பிழையின்றி எழுதி சுடப்பட்ட பானை ஓடுகள்,கத்தி,கேடயம்,அம்பு முனைகள்,அரிவாள்,இரும்பு கேடயம் உள்ளிட்ட போர்க்கருவிகள், நெசவு தொழிற்சாலை இடம்,மணிகள் கோர்க்கும் தொழிற்சாலைகள்,சங்கை அறுக்கும் தொழிற்கூடங்கள்,இரும்பு உலைகளன்,மற்றும் சுடு மண்ணால் செய்யப்பட்ட துருத்தி,அச்சு முத்திரைகள், நாணய பரிமாற்றம் நிகழ்ந்த மிக முக்கியமான தொழில் மற்றும் வணிக நகரமாகவும், நாகரீகத்தின் தொட்டிலாகவும் விளங்கி இருக்கிறது.
மறைந்துள்ள சித்திரம்:
கொடுமணலில் கிடைத்துள்ள அகழ்வு பொருட்களில் இருந்து அதன் நகர மாண்பை,விரிவை,அதன் வியாபார,கலாசார, நாகரீக தொன்மையை அதன் பன்முகத்தையும் அது நமக்கு சித்தரிக்க முயல்கிறது.இந்த இடம் மக்கள் குடியிருப்பைச் சார்ந்த தொழிற்கூடம் அமைந்திருந்த இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் நான்கு வகையான தொழில்கள் தொடர்பான பொருட்கள் கிடைத்திருக்கின்றன. (1) மணிகள் செய்யும் தொழிற்கூடம் (2) சங்கு அறுத்தல் பணியை செய்யும் தொழிற்கூடம் (3) நெசவு தொடர்பான பணிகளை செய்யும் தொழிற்கூடம் (4) இரும்பு எஃகு பொருட்களை செய்யும் தொழிற்கூடம் தொழிற் கூடமாக மட்டுமின்றி கல்வி அறிவு மிக்கவர்கள் வாழ்ந்த இடமாகவும் தெரிகிறது. அவர்களுடைய தொழில் நுட்ப அறிவு நம்மை வியப்படையச் செய்கிறது. நெசவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் தக்களி ஒன்று கண்டடையப்பட்டுள்ளது.அதன் மத்தியில் உள்ள தண்டு இரும்பாலும், தக்களி வட்டம் சுடுமண்ணாலும் செய்யப்பட்டிருக்கிறது. அங்குள்ள தொழிற்கூடங்களின் காட்சிகள் நமக்கு ஒரு புராதனமான உற்பத்திமையத்தையும்,தொழில் நுட்ப விரிவையும்,கலை மற்றும் தொழில் நுணுக்க ஆழத்தையும் காட்ட முனைகிறது.
இதுவரை கிடைத்தது போன்ற மணிகள் ஏராளமாக இப்போதும் கிடைத்திருக்கின்றன. அவை தவிர ஓனெக்ஸ் (onyx) என்ற மணி கிடைத்திருக்கிறது. இது நாவற் பழம்போல கறுப்பு நிறமாக இருக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்த மணி இங்கே தருவிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. பட்டை தீட்டப்பட்ட பவளம்,மாணிக்கப்பரல்கள்,கோர்க்கப்பட்ட ஆபரணக்கற்கள்,பாதி செய்து முடிக்கப்பட்ட வளையல்கள்,கை வளைகள்,ரோமிலிருந்தும்,சுமேரியாவிலிருந்தும்,பெர்ஷியா,இலங்கையிலிருந்தும் தருவிக்கப்பட்ட மரகத, அலங்காரக்கற்கள்,சங்குகளால் கோர்க்கப்பட்ட ஆபரணங்கள்,தாமிரத்தில் கற்கள் பதித்து செய்யப்பட்ட புலி நகக்கொன்றை போன்ற ஆபரணம்,பட்டை தீட்டப்பட்டதும்,இயற்கையானதுமான 2260 கற்கள் கணடறியப்பட்டது ஆகியவை சங்க தமிழரின் கலை நுணுக்கத்தையும்,கலாச்சார வளர்ச்சி மற்றும் வணிக பரவலை நமக்கு சுட்டுவதாக கொள்ளலாம்.
இரும்பு எக்கு தொழிற்கூடங்களும்,உலைகள்,துருத்திகள்,அருகில் உள்ள (15கி,மீ)இரும்பு தாது வளம் கொண்ட சென்னிமலை பிரதேசம்,கொடுமணலில் பதிந்துள்ள இரும்பு தாது துருவல்கள்,மற்றும் எச்சங்கள்,எகிப்திற்கும்,ரோமிற்கும் ஒரு வகையான சிறப்பு இரும்பு தாதுவை மெருகேற்றி கிடைக்கப்பெற்றதான ஆவணங்கள் ரோமானிய இலக்கியங்களில் காணக்கிடைப்பதாக இருக்கிறது.
சேர நாட்டின் வளமான வணிக நகராக இது விளங்கியதற்கான ஆதாரங்களாகவே இவற்றை கொள்ளலாம்.கிழக்கு ஐரோப்பிய நகரங்களில் தொல்லியல் ஆய்வில் காணக்கிடைக்கும் ஆபரணக்கற்கள் இங்கிருந்து பெருமளவில் கண்டறியப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு ஆவணமாகும்.இது சேர ஆபரணக்கலையின் ஏற்றுமதி திறனை நமக்கு சித்தரிக்கிறது.
சேர நாட்டின் பொருள்களும்,வணிகர்களும்,முசிறி,தொண்டியிலிருந்து காவிரிக்கரையை நோக்கி பயணப்பட்டு அங்கிருந்து பெருமளவிலான கடல் வணிகம் மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கபட்டுகிறது.
அதன் வழி கொடுமணலாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.இங்கு காணக்கிடைக்கும் வேறுபட்ட நாணயங்கள்,ரோமானிய நாணயங்கள்,அச்சு முத்திரகள்,விலைஉயர்ந்த மதிப்பு கூட்டப்பட்ட கற்கள், நெசவுக்கு பயன்படும் கற்றளி ஆகியவை நமக்கு சொல்வது இந்த நகரத்தின் அயல் வணிக சிறப்பை தான்.
ஈமக்குழிகள்,முதுமக்கள் தாளி: இங்கு பெருமளவிலான ஈமக்குழிகளும்,முதுமக்கள் தாளியும்,கண்டடையப்பட்டுள்ளன.அவற்றில் சிறிய அளவிலான எலும்புக்கூடுகளும்,எலும்புக்குவியல்களும் காணக்கிடைக்கின்றது.இங்குள்ள ஈமக்குழிகள் இரண்டாவதாக புதைத்ததாகக்கூட இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.170 வேறு,வேறு வகையான பெயர்களும், இலச்சினைகளும் பொறிக்கப்பட்ட தமிழ்பிராமி மற்றும் பிராகிருத மொழியில் ஆன சுடுமண் பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன.இரும்பினால் ஆன கத்திகள், கேடயம், அம்பு முனைகள், உழவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கொழு, அரிவாள், போன்ற பொருட்கள் இங்கே கிடைத்துள்ளன. ஈமக் குழி ஒன்றில் இரண்டு கத்திகள், ஒரு இரும்புக் கேடயம், அம்பு முனைகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரிய கல்மணிகள், அவற்றை செய்வதற்கான உலைகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. வீட்டுத் தரை, அடுப்பு ஆகியவை அந்த மக்களின் மேம்பட்ட வாழ் நிலையை சொல்வதாக இருக்கின்றன.
சம்பன்,ஸுமநன், ஊரணன், சந்துவன், மாத்தன், ஆதன் முதலான பெயர்கள் இந்தப்பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொழி பிராகிருதம் கலந்து காணப்படுகிறது. ஒரே பொறிப்பில் “ச” என்பது தமிழிலும், “ஸு” என்ற எழுத்து பிராகிருதத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. திஸன் என்ற பெயர் ஒரு பானை ஓட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் ஒரு வணிக மையமாக இருந்ததால் இங்கு சமண மதத்தைச் சார்ந்த பல வணிகர்களும் வந்து போயிருக்க வேண்டும் அவர்களுடைய பெயர்களை இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு சூட்டிக் கொண்டிருக்க வேண்டும். தூய தமிழ்ப் பெயர்களோடு பிராகிருதமும் கலந்த பெயர்கள் இங்கே காணப்படுவது மேலாய்வுக்கு உரியதாகும்.
அந்தை என்ற ஒரு பொறிப்பை பேராசிரியர் ராஜன் தலைமையிலான குழு கண்டெடுத்து உள்ளார்கள். இதை ஒரு பெண் பெயராகவும் கருதலாம். தந்தை என்பதன் மூல வடிவம் தான் அந்தை என்று தமிழ் அறிஞர்கள் சிலர் சொல்கின்றனர். அது மட்டுமன்றி இது மரியாதைக்குரிய முறையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இது தவிர பெண்களுடைய பெயர் இங்கு எங்கும் பொறிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த இடம் தொழிற் கூடம் என்பதால் இங்கு கிடைக்கிற பொருட்களில் ஆண்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம்.
ஈமக் குழிகளிலும் கூட பெண் பெயர் பொறித்த பானை ஓடுகள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இதையே நாம் இறுதி முடிவாக சொல்லமுடியாது. இன்னும் அகழ்வாய்வுகளை மேற்கொண்டால் இந்த செய்தி மாறவும் கூடும். இந்த அகழ்வாய்வுப் பகுதி ஏழு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தற்போது முதல் அடுக்கைத்தான் அவர்கள் ஆராய்ந்ததாக சொல்லப்படுகிறது.தாழி போன்ற பெரிய பானை ஒன்று இங்கே கிடைத்திருக்கிறது. அதில் பொறிக்கப்பட்டுள்ளள பிராமி எழுத்து ஒவ்வொன்றும் 20 செ.மீ. அளவுக்கு பெரியதாக இருக்கிறது.
கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளைப் போல தெளிவாக இந்த எழுத்துகள் உள்ளன. இந்த தாழிக்குள் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் இன்னும் திறந்து பார்க்கவில்லை. பொருந்தலில் கிடைத்தது போல ஒருவேளை தானியம் கூட இதில் கிடைக்கலாம் இந்த எழுத்துப் பொறிப்புகள் யாவும் இலக்கணப் பிழையின்றி தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 300 பானை ஓடுகள் தமிழ் பிராமி பொறிப்புகளோடு கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி-.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.மு. நான்காம் நூற்றாண்டு வரை இருக்கலாம். இந்த பிராமி பொறிப்புகளில் காணப்படும் பெயர்கள் பெரும்பாலும் சங்க இலக்கியங்களில் காணப்படாத பெயர்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த பாரம்பரியமான தொல் நகரம் அதன் சிறப்பு மிகுந்த வரலாற்று பக்கங்களை,பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய சங்கத்தமிழர் வழ்வை , நாகரீகத்தை,கலை நுணுக்கத்தை,தொழில் நுட்ப அறிவை ,மொழியியல் கூறுகளை,பண்பாட்டு அடிச்சுவட்டை,வணிக பரவலை,நமக்காக பாதுகாத்து வைத்துக்கொண்டு நமக்கு பழந்தமிழர் வரலாற்றை சித்தரிக்க ஆவலோடும்,கடமையுணர்வோடும் இருக்கிறது.ஆனால் நாம் நம் கருத்துக்குருட்டுத்தனத்துடனும்,வேறு புறக்காரணங்களாலும் வரலாற்றையும் , நாகரீக அறிதலையும் புறந்தள்ளிவிட்டு இன்று வரை மேலதிக ஆய்வுகள் செய்யாது வாளாவிருக்கிறோம்.வரலாறு நம்மை மன்னிக்குமா?
அடிக்குறிப்பு:
1961 ஆம் ஆண்டு முதல் அகழ்வு v.s.சீனிவாஸ தேசிகன்,இந்திய தொல்லியல் துறையால் நிகழ்த்தப்பட்டது.
1980 ஆம் ஆண்டு இரண்டாவது அகழ்வு தமிழக தொல்லியல் துறையால் செய்யப்பட்டது.
1985,86,89,1990 ஆம் ஆண்டுகளில் தமிழ் மொழியியல் துறையாலும்,தொல்லியல் துறையாலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
1990ல் 170க்கும் மேற்பட்ட சுட்ட மண்பாண்ட உடைசல்களும்,தட்டுகளும் கிடைக்கின்றன.
2012ல் மேற்கொள்ளப்பட்ட புதுவை பேராசிரியர் ராசனும்,அவரின் ஆய்வு மாணவர்களும் சேர்ந்து மேற்கொண்டு வரும் ஆய்வுகள் சிற்ப்பான திசையில் பயனளிக்க கூடும்