சங்க காலப் பாண்டிய மன்னன் “செழியன்’ நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவரும், “தினமலர்’ நாளிதழின் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். அந்த நாணயத்தைக் கண்டறிந்தது தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் கிருஷ்ணமூர்த்தி கூறியது:
திருநெல்வேலி கீழ ரத வீதியில் உள்ள பாத்திரக் கடையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பழைய நாணயங்கள் வாங்கினேன். அந்த நாணயங்களை ஆய்வு செய்ய கடினமாக இருந்தது. அதனால் ஒரு கண்ணாடிக் குவளையில் போட்டு வைத்திருந்தேன். பத்து தினங்களுக்கு முன்பு அந்தக் குவளையைச் சுத்தம் செய்ய எடுத்தபோது, வடிவமைப்பில் வித்தியாசமான நாணயம் ஒன்றைக் கண்டேன்.
200 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நாணயம் தாமிரபரணி ஆற்றில் புதையுண்டு கிடந்திருக்கலாம். அதனால் நாணயத்தின் மேல் கடினமான பூச்சு இருந்தது. அந்தப் பூச்சை எளிதில் அகற்ற முடியவில்லை. ஒரு வாரத்துக்கும் மேலாக எந்த வகையிலும் நாணயம் சிதையாதளவு மெதுவாகச் சுத்தம் செய்தேன். அப்போது சில எழுத்துகள் தெரிந்தன.
செழியன் பெயர்: நாணயத்தின் முன் பகுதியில் தமிழ் – பிராமி எழுத்து முறையில் “செழியன்’ என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயத்தின் பின்புறம் தேய்ந்து போயிருப்பதால் ஒன்றும் தெரியவில்லை. மிகச் சிறிய நாணயமான அதன் எடை 0.900 கிராம். அகலம் கூடிய பகுதியில் அதன் அளவு 8 மி.மீ. ரசாயனக் கலப்படம் இல்லாத பகுதியில் புதையுண்டு கிடந்ததாலே அந்த நாணயம் ரசயானக் கலவைகளால் அரிக்காமல் கிடந்துள்ளது.
நாணயத்தின் சிறப்பு: சங்க கால தமிழக வரலாற்றுக்கு ஓர் அணிகலனாகத் திகழக்கூடியது அந்த நாணயம், கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மதுரையில் சங்க காலப் பாண்டிய மன்னன் “பெருவழுதி’ பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தை 1984-ம் ஆண்டு கண்டுபிடித்தேன். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாணயத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன். சங்க காலச் சேரர்கள் வெளியிட்ட “மாக்கோதை’, “குட்டுவன் கோதை’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை 1990 மற்றும் 1994-ம் ஆண்டுகளில் கரூர் அமராவதி ஆற்றில் கண்டுபிடித்தேன். இப்படி நாணயங்கள் கிடைப்பது புறநூனூற்று மன்னர்கள் பெயர்கள் கற்பனை இல்லை என்பது நிரூபணமாகிறது என்றார் அவர்.
thanks :தினமலர்
One Response to பாண்டிய மன்னர் நாணயம் கண்டுபிடிப்பு