இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள்.
வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, செழுமை, இயற்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் உடையது தமிழகம். இத்தகைய பெருமைமிகு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மாநிலத்தில் மத்தியில் உள்ள திருச்சி மாவட்டம் என்றால் அதுமிகையாகாது. திருச்சி மாவட்டம் சுற்றுலாச் சிறப்புகள் பெற்ற தனிப்பெருமை கொண்டதாகும். தமிழகத்தின் சுற்றுலா பெருமைகளில் தனித்தன்மை வாய்ந்த திருச்சி மாவட்டம் புனிதநதி காவிரிக்கரையில் அமைந்த தொன்மையான நகரம். பல்லவ மற்றும்சோழ மன்னர்கள் திருச்சியை ஆட்சிபுரிந்துள்ளனர். இங்கு கோயில் கட்டிடக்கலையும், எழில் நிறைந்த கோபுரங்களும், சிற்பங்களும், இயற்கை வனப்பும் நிறைந்துள்ளது.
கி.மு. 300ம் ஆண்டு முதல் உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. உறையூர், தற்போதைய திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். கி.பி. 300 முதல் 575 வரை உறையூர் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கி.பி. 590ம் ஆண்டில் உறையூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முதலாம் மகேந்திர வர்ம பல்லவரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. கி.பி. 880ம் ஆண்டு வரை உறையூர் பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் கையில் இருந்தது. கி.பி. 880க்கு பின் ஆதித்ய சோழர் பல்லவர்களை வீழ்த்தி உறையூரை மீட்டார்.
அதன் பின்னர் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற பகுதிகளும் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1225ல் இந்த பகுதி மீண்டும் ஹொய்சாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்ந்து முகலாயர் வருகை வரை பாண்டியர்கள் வசம் இருந்தது.
திருச்சிராபள்ளி சிலகாலம் முகலாயர்கள் வசமும் இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசர்கள் வசம் மாறியது. கி.பி.1736 வரை விஜயநகர பேரரசின் பாதுகாவலர்களான நாயக்கர்கள் இந்த பகுதியை ஆண்டனர். தற்போது திருச்சியில் <உள்ள தெப்பகுளம் மற்றும் கோட்டை விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர்களின் உதவியோடு முஸ்லிம்கள் திருச்சியில் ஆட்சி செலுத்தினர். சந்தா சாகிப், முகமது அலி ஆகியோர் சில காலம் திருச்சியை ஆண்டனர். இறுதியில் திருச்சி முழுமையாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. சுமார் 150 ஆண்டுகள் அதாவது சுதந்திரம் கிடைக்கும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி செலுத்தினர்.
திருச்சி நகரம் சோழர்களின் அரணாக விளங்கியது. திருச்சி பல்லவர்கள் கையில் இருந்த போது அதை தக்க வைக்க கடும் முயற்சி செய்தனர். இருந்தும் பாண்டியர்கள் பலமுறை திருச்சியை கைப்பற்றினர். இறுதியில் 10ம் நூற்றாண்டில் திருச்சி சோழர்கள் வசம் வந்தது. விஜயநகர பேரரசிற்கு பின் திருச்சி, மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து மராட்டியர்கள், கர்நாடக நவாப்கள், பிரெஞ்ச் ஆதிக்கம், மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் நாயக்கர்கள் ஆட்சியின் போது திருச்சி நல்ல முன்னேற்றம் அடைந்தது. திருச்சி மாநகரம் மலை கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. மலை கோட்டையை தவிர சர்ச்கள், கல்லூரிகள், மற்றும் சமுதாய நல அமைப்புகள் பல 1760ம் ஆண்டுகளிலேயே அமைப்பட்டுள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட நகரமான திருச்சி தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது.
திருச்சி நகரம் காவிரி கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாக திருச்சி விளங்குகிறது. திருச்சி தமிழகத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது. திருச்சி மாநகராட்சி திருச்சி நகரை மையமாக கொண்டு செயல்படுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் இங்கு தான் உள்ளது. திருவானைக்காவல் நீருக்கான ஸ்தலமாகும். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் திருவானைக்காவலில் தான் பிறந்தார். அவருடைய வீடு அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் உள்ளன. கரிகால சோழ மன்னனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றும் சோழர்களின் பெருமையை பறைசாற்றி கொண்டிருக்கிறது. திருச்சியின் முக்கிய இடமாக மலை கோட்டை கருதப்படுகிறது. 83 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இதனால் திருச்சி மலை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மீது உச்சி பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் நாயக்கமன்னர்களின் ராணுவ அரணாகவும் விளங்கியது. பல்லவர்கள் ஆட்சியின் போது இந்த மலையை குடைந்து குகை கோயில்களை அமைத்தனர். இந்த மலைகோயில் தற்போது சத்திரம் என அழைக்கப்படும் பரபரப்பான வர்த்தக இடமாக மாறிவிட்டது. இந்தியாவிலேயே திருச்சியில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்கள் உள்ளன. ஹோலி ரீடீமெர்ஸ் சர்ச், லூர்து சர்ச், தி கதீட்ரல் சர்ச் ஆகியவை மிக முக்கியமானதாகும்.
பெயர் காரணம்:
திருச்சிராபள்ளி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. திரு என்பது தமிழில் மரியாதையை குறிக்கும் சொல். சிரா என்பது ஜைன துறவியின் பெயராகும். இதனால் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், மூன்று தலை கொண்ட திரிசிரா (ராவணனின் மகன்) சிவனை வழிபட்டு தன் பாவத்தை போக்கிய தலம் என்பதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. திரு செவ்வந்திபுரம் என்ற பெயர் நாளடைவில் மருவி திருச்சி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.
thanks :dinamalar