இராமேஸ்வரம் செல்பவர்கள் “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” என்ற இரண்டு ஊர்களைக் கடந்துதான் செல்லவேண்டும். செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் இந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள், கடந்த காலத்தில் யாத்ரீகர்களின்பாலும் , வழிப்போக்கர்களின் பாலும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. முதல் செவிவழிச் செய்தியானது, மன்னர் சேதுபதிக்கு முன்னாள் ஆண்ட பாண்டியன் (சரியான வரலாற்றுக் குறிப்பு இல்லை) பிள்ளை வரம் வேண்டி, எங்கெல்லாம் தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைகிறதோ, அங்கெல்லாம் சத்திரம் (வழிப்போக்கர்கள் தங்கி, குளித்து உணவருந்திச் செல்லும் மடம்) கட்டுவதாக வேண்டிக் கொண்டு கடற்கரையோரமாக இராமேஸ்வரம் பயணப்பட, தேங்காய் சரிபாதியாக உடைந்த பதினேழு இடங்களில் (புதுமடம், தொண்டி நம்புதளை, அக்காள் மடம், தங்கச்சிமடம், இராமேஸ்வர கடற்கரை நேர் எதிரே போன்ற இடங்களில்) சத்திரங்களைக் கட்டியதாகச் சொல்லப்பட்டாலும், இதிலிருந்து அக்காள் மற்றும் தங்கச்சி மடங்களின் பெயர் காரணங்களைத் தெரிந்து கொள்ளமுடியவில்லை. மாற்றாக இன்னொரு செவிவழிச் செய்தியானது பெயர் காரணத்தை எடுத்துச் சொல்கின்றது.
இப்பகுதியை ஆண்டுவந்த சேதுபதி மன்னருக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், அவர்கள் இருவரையும் ஒருவருக்கே திருமணம் செய்து கொடுத்து, மருமகன் கட்டுபாட்டிலே இப்பகுதியை மன்னர் விட்டிருந்ததாராம். அப்பொழுது இராமேஸ்வரம் இராமநாத சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்கள், வத்தையில் ஏறித்தான் பாம்பன் கடலைக் கடந்து இராமேஸ்வரம் செல்ல முடியும். சேதுபதி மன்னரின் ஆணைக்கிணங்க, கட்டணம் செலுத்தாமல் இலவசமாக வத்தையில் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, நீண்ட காலம் இவ்வாறே தொடர்ந்து நடந்து வந்தது.
அரசவையில் பணி செய்த நபர் ஒருவர், பயணிகளை இலவசமாக ஏற்றிக் கொண்டு செல்வதற்குப் பதிலாக கட்டணம் வசூல் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று மன்னரின் மருமகனிடம் ஆலோசனை கொடுக்க. அதன்படி பயணம் செய்யும் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த முறையில், இராமநாத சுவாமியைத் தரிசிக்கச் செல்லும் போதும், திரும்பும் போதும், இரண்டு முறை கட்டணம் வசூல் செய்திருக்கிறார்கள். இவ்விஷயம் மன்னருக்கு தெரியாமலே நடந்து வந்துள்ளது.
கையில் பொருளற்று, இராமேஸ்வரம் யாத்திரை வந்த முனிவர் ஒருவரிடம் கட்டண வசூல் என்ற பெயரில் அடாவடி செய்ய, ஆத்திரமடைந்த முனிவர் சேதுபதி மன்னரிடம் முறையிட்டுள்ளார். கட்டண வசூலுக்குத் தன் மருமகனே காரணமாக இருந்ததை அறிந்து, மன்னரும் மனவேதனைப் பட்டுள்ளார். தன்னுடைய இரண்டு மகள்களையும் அழைத்து, யாத்ரீகர்களிடம் நடக்கும் அடாவடியைப் பற்றிக்கூறி, அவ்வாறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்க, மகள்களும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டுமென்று பரிந்துரைக்க, “யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்கலாமா”? என்று மன்னர் பூடகமாகக் கேட்க, “யாராக இருந்தாலும் பரவாயில்லை, பக்தர்களிடம் அடாவடியாக நடந்தவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனை வழங்கலாம்” என்று மகள்கள் இருவரும் உறுதிபடக் கூறிவிட்டனர்.
மகள்களின் உறுதியை மெச்சிய மன்னரும், “தவறு செய்தது வேறுயாருமில்லை, உங்கள் கணவர்தான்” என்று கூற, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின் அதிர்ச்சி நீங்கி, மருமகனாக இருந்தாலும் தண்டனையைக் கொடுங்கள் என்று கூறிவிட்டு, தங்கள் கணவர் பக்தர்களுக்கு இழைத்த அநீதியிலிருந்து பிராயச்சித்தம் பெறவேண்டி மன்னரிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தனர். அதன்படி அவர்களின் கணவரைத் தூக்கில் போட்டவுடன் அவர்களும் உடன்கட்டை ஏறி விடுவதாகவும், அவர்கள் கணவர் செய்த பாவத்தைப் போக்குவதற்காக, அவர்களின் நினைவாக இரண்டு மடங்கள் கட்டி, இராமேஸ்வரம் செல்லும் பக்தர்களின் பசியைப் போக்குவதற்கு வயிறார சாப்பாடு போட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, தன் மகள்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சேதுபதி மன்னரும், சகோதரிகள் நினைவாக அக்காள்மடமென்றும், தங்கச்சிமடமென்றும் இரு மடங்களைக் கட்டியதாகச் சொல்லும் செவிவழிச் செய்தி ஊர்ப் பெயர் காரணத்தை நம்பும்படிச் சொல்கின்றது. சமீப காலம் வரை சேதுபதி மன்னர் கட்டிய மடம், அக்காள் மடத்திலிருந்ததாகவும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் அம்மடம் இடிக்கப்பட்டதாகவும், தங்கச்சி மடத்தில் கட்டப்பட்ட மடம் இப்பொழுது வரைக்கும் பள்ளியாகப் பயன்பட்டுவருவதையும் பார்க்கும் போது இந்த செவிவழிச் செய்தியும் வரலாற்று ஆதாரத்துடன் சொல்லப்பட்டு வருவதை அறியலாம்.
அக்காள்மடம் கிராமம் உருவாகி நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இக் கிராமத்தில் 1960க்கு முன்பு நூறு குடும்பங்கள்தான் இருந்தது. இந்த நூறு குடும்பத்திற்கும் மீன்பிடித் தொழில்தான் பிரதானம். கடந்த காலங்களில் தள்ளுவலை வைத்து மீன் பிடித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் ஓலையால் “சூந்துகட்டி” தீ கொழுத்தி, கரையோரமாக ஒருவர் பிடித்துக் கொண்டு செல்ல, அந்த தீ வெளிச்சத்தைக் கண்டு மீன்கள் கரைபக்கம் வந்து ஒதுங்குகையில், பின்னாலே வருபவர் பெரிய மீன்களை இரும்புக் கம்பியால் குத்தியும், சின்ன மீன்களைத் துணியால் வாரியும் பிடிப்பார்களாம். அதன்பிறகு நாட்டு உடைமரத்தின் பட்டையை உரித்து நன்றாகத் தண்ணீரில் ஊறப்போட்டு வலை செய்து அவற்றால் மீன் பிடித்திருகின்றார்கள். சிறிய மீன்களுக்கு சின்னக் கன்னியாகவும், பெரியமீன்களுக்கு ஏற்றவாறு கன்னியை பெரிதாக்கி கொள்வார்களாம். எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் வலை கிழியாமல் நீண்ட நாள் வரைக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அதற்கு பிறகு நூல்வலை, நைலான் வலை வந்துள்ளது. 1960 வரை கடலாமை, கடற்பசு, கடல் அட்டை, சங்கு, மட்டி இவையெல்லாம் பிடித்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் பதிமூன்று கூடைவரை (மடங்கு) மீன் பிடித்திருக்கிறார்கள். ஒரு கூடையென்பது இருபத்தைந்து கிலோ கொண்டது. தற்பொழுது கூடையைக் கணக்காக எடுத்துக் கொள்ளாமல் “டன்” கணக்காக கணக்கிடுகிறார்கள். தற்போது மீன்பிடித் தொழில் மட்டும் செய்யாமல் எலுமிச்சை தோட்டம், வெற்றிலைக் கொடிக்கால், கறிவேப்பிலைத் தோட்டம், முருங்கைக்காய் தோட்டம், மல்லிகைச்செடி பதியம் பேன்ற பல தொழில்களைச் செய்கின்றார்கள்.
அக்காள்மடம் ஆரம்பத்தில் இரண்டு பகுதியாக – தெற்குவலசை, வடக்குவலசை என்று இருந்தது. காலப் போக்கில் இடம் வாங்கி ‘பட்டா’ போடும் அலுவலகத்திலேயே “அக்காள்மடம் தெற்கு”, “அக்காள்மடம் வடக்கு” என்று எழுதி கொடுத்ததினால் நாளடைவில் அக்காள்மடம் தெற்கு, வடக்கு என்று மாறியுள்ளது. இங்கு மல்லிகைச் செடியை பதியமிடும் தொழில் முக்கிய தொழிலாகிக் கொண்டு வருகின்றது.