பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் படைகளை அனுப்பி முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த ஆட்சி கி.பி 1070 வரை நீடித்தது.
…