சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர்.
மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது.