தேவர் திருமகன் – வைகோ உரை -1

தேவர் புகழ் வாழ்க :எனவே, பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்!வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில், தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில், ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என உரைக்க ஒரு புலவனால் இயலும்; திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளையும் எதிர்க்க இயலும் என்ற நக்கீரன் பெருமை பேசுகின்ற இம்மாசிவீதியில், எத்தனையோ கூட்டங்கள் நான் பங்கேற்று இருந்தாலும், இன்றைய நாளில், 2007 அக்டோபர் திங்கள் 30 ஆம் நாளில், தேவர் திருமகனாரின் புகழ் பாடுகின்ற மேடையில் உரை ஆற்றுகின்ற நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கின்ற பார்வார்டு பிளாக் கட்சிக்கும், நான் மதிக்கும் அருமைச் சகோதரர் சந்தானம் அவர்களுக்கும், என் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவிப்பது தலையாய கடமை ஆகும்.


எல்லாச் சாலைகளும் பசும்பொன்னை நோக்கி…

இலட்சோப இலட்சம் மக்கள் இன்றைக்குப் பசும்பொன்னில் குவிந்தார்கள். நான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே படித்த, ‘எல்லாச் சாலைகளும் ரோமபுரியை நோக்கி..’ All the roads lead to Rome. என்ற ஆங்கில வரிகளை எண்ணிப் பார்க்கிறேன். இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியைப் பார்க்கிறபோது, ‘All the roads lead to Pasumpon. ‘எல்லாச் சாலைகளும் பசும்பொன்னை நோக்கி..’ என்று சொல்கிற அளவுக்கு, இலட்சோப இலட்சம் தமிழ் மக்கள், இன்றைக்குப் பசும்பொன்னில் குவிந்தனர்.

தேவர் திருமகனாருக்குப் புகழ் மகுடம் சூட்டுவதற்கு, மரியாதை செலுத்துவதற்கு பக்திப் பரவசத்தோடு உலவியதையும் கண்டு, பதவி மகுடங்களைத் தேடாமல், வந்த பதவிகளையும்கூட நாடாமல், அதிகார பீடங்களை அலங்கரிக்காமல், இன்றைக்குச் சரித்திரத்தில் கோடிக்கணக்கான மக்கள் போற்றுகின்ற ஒரு தலைவனாக தேவர் திருமகனார் திகழ்கிறார்!

30 ஆண்டுகளாக..

அவருடைய பெருமை பேசுவது, நமது பாதையைச் சரி செய்வதற்காக! ஜாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் தலைவனை மதித்து. 31 ஆவது ஆண்டாக பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன். நான் முதன்முதலாக 1974 ஆம் ஆண்டு பசும்பொன்னுக்குச் சென்றேன். அதன்பின்னர் 1976 ஆம் ஆண்டிலும், 2002, 2003 இந்த மூன்று ஆண்டுகள் தவிர்த்து, ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்கள் 30 ஆம் நாள், பசும்பொன்னுக்குச் சென்று வந்து இருக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னாலே நான் பசும்பொன்னுக்குச் சென்று கொண்டு இருந்த காலகட்டத்தில், வேறு அரசியல் தலைவர்கள் எவரும் வராத அந்தக் காலத்தில், வீர மறவர் குல மக்களும், முக்குலத்து சமுதாயத்து மக்களும், தங்கள் குலதெய்வத்தை வழிபடப்போவதைப்போல வந்து கொண்டு இருந்த அந்தக் காலகட்டத்தில், நான் அவர் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அடக்கமான இடத்துக்குச் சென்றதற்குக் காரணம், நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல, அவர் இலட்சியங்களுக்காக அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஒழுக்கம் நிறைந்த தலைவர்,

தனிமனித ஒழுக்கம் வாய்ந்த தலைவர்; பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்த தலைவர்; விவேகானந்தரைப்போல வாழ்ந்த தலைவர்; வடலூர் வள்ளலாரைப்போல துறவு மனப்பான்மையோடு இயங்கிய தலைவர்; அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சிங்கமாகத் திகழ்ந்த தலைவர்; ஆகவேதான், அந்தத் தலைவனை மதித்து, அவருக்குப் போற்றுதலும் மரியாதையும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே சென்று வந்து இருக்கிறேன்.

உயரம் பெற..உள்ளம் உறுதி கொள்ள.. :

எத்தனை சோதனைகள் வந்தாலும் உள்ளத்தில் இருக்கின்ற உரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, நெஞ்சில் தேங்கி இருக்கக்கூடிய துணிச்சலை வளர்த்துக் கொள்வதற்காக, பசும்பொன் தேவர் திருமகனாரின் திருவிடத்துக்குச் சென்று வந்து இருக்கிறேன். நான் மிகச்சிறிய வயதில், அரைக்கால் சட்டை அணிந்த பள்ளிக்கூட மாணவனாக என்கிராமத்தில் என் பாட்டன் கட்டிய வீட்டில் பசும்பொன் தேவர் திருமகனார் திருவடி படுகிற பேறு பெற்ற வீட்டில் அவரைப்பார்த்தேன்.

This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged . Bookmark the permalink.

One Response to தேவர் திருமகன் – வைகோ உரை -1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *