சோழர்கலை

சோழர்கலை :

பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது.


சோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூல். 1966ல் அன்றைய சென்னை பல்கலை துணைவேந்தர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்த நூல் இது. பல அடிப்படையான கருத்துகக்ளை முதலிலேயே நம் மனதில் தெளிவு படுத்தும் இந்தநூலின் முக்கியமான சிறப்பே மிகையோ அலங்காரமோ இல்லாத தெளிவான கச்சிதமான கூறுமுறையும் நிதானமான அணுகுமுறையும்தான்.

தஞ்சை பெரியகோயில்

தமிழ்நாட்டுச் சிற்பக்கலை இன்றுள்ள வளர்ச்சியை பல்லவர் காலத்தில் இருந்து பெறத்தொடங்கியதாகச் சொல்வது மரபு. மாமண்டூர் போன்ற இடங்களில் உள்ள குடைவரைக்கோயில்கல் முதல்கட்ட சிற்பக்கலைக்கு உதாரணங்கள். பின்னர் மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள ஒற்றைக்கல் குடைவுக் கோயில்கள். பின்னர் கைலாசநாதர் ஆலயம் போன்ற தனிப்பெரும் கோயில்கள் உருவாயின.
பல்லவர்கள் விட்ட இடத்திலிருந்து சோழர்களின் கலைப்பாணி வளர்ச்சி கொள்கிறது.

சோழர்காலக்கலையை முதற்காலம் இடைக்காலம் நடுக்காலம் என்று ஆசிரியர் பகுக்கிறார். முதற்காலம் முதலாம் ராஜராச சோழனுக்கு முற்பட்டது. கிபி 985 வரையிலானது. இடைக்காலம் 1070 வரையிலானது. அதாவது குலோத்துங்கசோழனின் காலத்துக்கு சற்று முன்புவரை. கடைக்காலம் இரண்டாம் ராஜ ராஜ சோழன் முதல் 1270 வரை பிற்காலச்சோழர்களின் ஆட்சி முடியும்காலம் வரையிலானது.
முதற்காலகட்டத்தில் பல்லவர்களின் கோயில்களின் மாதிரியை பின்பற்றி உருவாக்கப்பட்ட சிறியகோயில்கள் ஏராளமாக உருவாயின. கருவறைமீது சிறிய கோபுரமும் முன்பக்கம் ஒரு அர்த்தமண்டபமும் கொ¡ண்ட கற்கோயில்கள் இவை. இடைக்காலகட்டத்தில் சோழர்களின் கோயில்கட்டும்கலை உச்சத்தை அடைந்து தமிழ்ப்பண்பாட்டின் பெரும் சாதனைகளை உருவாக்கியது. தஞ்சை பெருவுடையார் ஆலயம், கங்கைகொண்டசோழபுரம் ஆகியவை இக்காலகட்டக் கலையின் மிகச்சிறந்த உதாரணங்கள். கடைக்காலத்தின் மிகப்பெரிய சாதனை தாராசுரம் கோயில்.
இந்நூலில் மன்னர்களின் கலைச்சேவைகளைப் பற்றி மட்டும் பேசப்படவில்லை. சிதம்பரம் கோயிலை எடுத்துக்கட்டிய நரலோகசிங்கன் என்ற சோழர் அமைச்சரின் சாதனை விரிவாக எடுத்துச் சொல்லபப்டுகிறது. திரிபுவனம், சூரியனார் கோயில் போன்ற சோழர்காலக் கோயில்களின் தனிச்சிறப்பை நாம் இந்நூலில் வாசித்தே புரிந்துகொள்ள முடிகிறது.


கங்கை கொண்ட சோழபுரம்

தமிழகத்தின் பண்டைய கோயில்கள் அமைந்த விதம் அது பல்லவர் காலத்தில் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை தனி அத்தியாயங்களில் விளக்கிவிட்டு சோழர் கலையின் தனித்தன்மைகளை விளக்க ஆரம்பிக்கிறார் ஆசிரியர். சோழர் கோயில்கள் விரிவான சுற்றுமதில், வெளிப்பிராகாரங்கள், துணைச்சன்னிதிகள் ஆகியவற்றுடன் அமைந்தவை. சோழர்கள் செங்கற்றளிகளை கற்றளிகளாக ஆக்கினார்கள். பின்னர் அவற்றை பெருங்கோயில்களாக அமைத்து அவற்றுக்கு திருக்கட்டளைகள் என்று பெயரிட்டனர்.

சோழர்களின் முதற்காலகட்டத்தில் பரகேசரி விஜயாலயன் முதலே ஆலயத்திருப்பணிகள் தொடங்கிவிட்டன. இக்கால கட்டத்து கோயில்களில் தஞ்சை நிதம்பசூதனி கோயிலும் திருவெள்ளறை திருமாணிக்கப்பெருமாள் கோயிலும் நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரமும் முக்கியமானவை என்று சொல்லப்பட்டு அவற்றின் தனிச்ச்சிறப்பு விளக்கப்படுகிறது. ஆதித்த சோழன், முதலாம் பராந்தக சோழன், சுந்தர சோழன் என்னும் இரண்டாம் பராந்தகன் ஆகியோரின் காலகட்டத்து கோயில்களை விரிவாக எடுத்து பேசுகிறார்

முதலாம் ராஜராஜ சோழனின் கோயில்களில் மைய இடம் வகிக்கும் தஞ்சை பெரிய கோயிலின் அமைப்பு சிற்பச்சிறப்பு ஆகியவற்றை விரிவான தகவல்களுடன் ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். ஒப்புநோக்க மிகக் குறுகிய காலகட்டத்தில் கட்டபப்ட்ட கோயில் அது என்பது அவரது எண்ணம். அதற்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் பேசப்படுகின்றன.

தாராசுரம்

பொதுவாக தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம் , தாராசுரம் ஆகிய மூன்று பெருங்கோயில்கள் மட்டுமே சோழர் காலகலையின் வெற்றியையும் சிறப்பையும் சொல்லிவிடக்கூடியவை. இக்கோயில்களின் புறச்சுவர்களில் உள்ள சிற்பங்களில்தான் உணர்ச்சிவெளிப்பாடு மிகச்சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. விரிவான புகைப்படங்கள் கொண்ட இந்த நூல் ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித்தன்மையை சிறப்பாக எடுத்துச் சொல்கிறது
சோழர்களின் கோயில்களில் கோபுரங்கள் மிகச்சிறப்பானவை. கருவறைக்குமேல் எழுந்து நிற்கக்கூடிய பிரம்மாண்டமான கற்கோபுரங்கள். சிறு சிறு சிகரங்களை அடுக்கி எழுப்பப்பட்வை. நுண்மையான கணக்குகளுடன் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. சோழர் காலக்கோபுரங்களின் வளர்ச்சி பின்னர் நாயக்கர் காலத்தில் மேலும் முழுமை பெற்றது

கோபுரங்களில் சுதைச்சிற்பங்கள் அமைப்பது சோழர்காலத்தில் ஆரம்பித்து பின்னர் மேலும் வளர்ச்சி பெற்றது. சுதைச்சிற்பங்கள் கற்சிற்பங்கள் போல அல்லாமல் முற்றிலும் வேறுவகையான காட்சிச்சிறப்பு கொண்டவை.

சோழர்களின் காலத்தில் உலோகச்சிற்பங்கள் செய்யும் கலை அதன் உச்சத்தை அடைந்தது. சோழர்கால உலோகச்சிற்பங்களின் முழுமை அதன்பின் இன்றுவரை அடையப்படவில்லை. சோழர்கால உலோகச் சிற்பங்களின் முழுமுதல் உதாரணம் என நடராஜர் சிலைகளைத்தான் சொல்லவேண்டும். பத்தூர் நடராஜர் அதற்குச் சிறந்த உதாரணம். சிவகாமசுந்தரர், பிட்சாடனர் போன்ற சிலைகளும் முக்கியமானவை. சிலைகளின் நுண்ணிய முகபாவனைகளில் பேரழகுகளை உருவாக்கினர் சோழர் காலச் சிற்பிகள்.
சோழர்காலக் கலையைப்பற்றிய எளிய முதல் அறிமுகத்துக்கான அழகிய நூல் இது. எஸ்.ஆர் பாலசுப்ரமணியன் சோழர்காலக் கலை குறித்து ஆங்கிலத்தில் Early Chola Art , Early Chola Art and Architecture போன்ற நூல்களை எழுதியவர்.
_

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

One Response to சோழர்கலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *