ஆங்கில காலனீய ஏகாதிபத்தியம் இந்தியாவில் தனது கட்டளைக்கும்; உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள் , பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு 1871 ஆம் ஆண்டு „குற்றப் பரம்பரைச் சட்டம்“ (Crimainal Tribes Act) என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160 இனக்குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும் 1876 ஆம் ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப் பட்டது. பின்னர் 1911 ம் ஆண்டே தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக „கீழக்குயில்குடி“ என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
.
கீழக் குயில்குடி என்ற அந்தச் சிற்றூர் மதுரையின் வடகீழ்திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் சமண(அமண) மலை என்ற ஒரு குன்றின் சாரலில் இருக்கின்றது. அதிகமாக பிரான்மலைக் கள்ளர் இனத்தவர்கள் வாழும் இந்த ஊர் மதுரையின் காலனிய எதிர்ப்புச் சரித்திரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. மதுரையில் எது நடந்தாலும் உடனே கீழக்குயில்குடிக்கு காவல்துறை விரைந்து வருவதற்கு வெலிங்கடன் வீதி என்ற பெயருள்ள வீதியே மதுரைப் பகுதியில் முதலில் போடப்பட்ட சீரான வீதியாகும். எந்த்க் குற்றச் செயல் நடந்தாலும் இந்தக் கீழக்குயில் குடி மக்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் பெற்றோரிடமிருந்த் பிரித்தெடுக்கப் பட்டனர். குழந்தைகளுக்குக்கான கட்டாயப் பாடசாலை பிரசன்னம், அவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்காகவல்ல, மாறாக கண்காணிப்புக்கு மிக உகந்ததாக இருந்தது. கணக்கெடுப்புக்கு மிக உதவியளித்தது.அன்று அந்தச் சட்டத்தை எதிர்த்து தம்மீதான அடக்குமுறைக்கு எதிராகக் கிழம்பி மரணித்தவர்களை, தமது முன்னோர்களின் அவ்வகை எதிர்க்கும் பண்பினை இன்றும் கீழக்குடி மக்கள் நினைவு கூருகின்றனர். அவர்களது பெயர்களை மனங்களில் வைத்துப் பூசிக்கின்றனர். திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் புகுந்து வெற்றிகரமாகத் திருடிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற இறுமாப்பு அவர்களிடம் இன்றும் உண்டு
திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறைத் திருட்டு ஒரு பெரிய அத்தியாயம் அதை நான் பின் எப்போதாவது எழுதலாம். ஆதி மதுரையின் முக்கிய காவல் துறையாகச் செயற்பட்ட இந்த மக்கள் காலனித்துவ ஆட்சியில் அந்தப் பரம்பரைப் பணி அற்றுப் போனது. அதனால் எழுந்த சமூகப் பிரச்சினைகள் பலகாலம் தொடந்தது சமுகவியல் வரலாறு. பலத்த காவலுக்கு மத்தியிலும் ஒரு சவாலுக்காக திருமலை நாயகர் அரண்மனையின் படுக்கையறையில் திருடுவது ஒன்றும் அவர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை என்பதையே நிரூபணமாக்க முயன்றதன் விழைவுதான் இத் திருட்டு. திருடியவனைப் பிடிக்க முடியவில்லை. பகிரங்க மன்னிப்பு வழங்கப்படும், சரணடையுமாறு அறிவித்து, அதனால் சரணடைந்தவனை பின்னர் சிரச்சேதம் செய்தனராம். அந்தமான் தீவுக்குக் கடத்தப் பட்டுச் சிறைவைக்கப் பட்டபோதும் தப்பி வந்த கிழவர் இன்றும் உயிருடன் அங்கே வாழ்கிறார் கீழக்குயில் குடியில். இப்படியாக இந்த ஊரினதும் ஊரின் புதல்வர்களினதும் பெருமைசால் வரலாறுகளை எழுதிவைக்க நிறையவே உண்டு.
நிற்க.
…