அறிவுடை நம்பி

pandian012

அரசன் அறிவுடை நம்பி :

அறிவுடை நம்பி கி.பி. 130 முதல் 145 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் கேள்விச் செல்வம், பொருட்செல்வம் உடையவனாகவும், கொடை வள்ளலாகவும், செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும், அறிஞர் பலர் போற்றுதற்கேற்ற புகழ் மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான். இவன் காலத்தில் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள் வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பேறு, இம்மை, மறுமை இன்பம் நல்கும் என்பவன் அறிவுடை நம்பி.இம்மன்னனைப் பற்றி புறம்-188,அகம்-28,குறுந்தொகை-230, நற்றிணை-15 போன்ற பாடல்களில் பாடப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புடையன.

புலவர் அறிவுடை நம்பி :

புறநானூறு 188 :

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே ! “

—(புறம்-188)

“எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்”.

அகநானூறு 28 :

அறிவுடை நம்பி பாடியது தலைவன் வீட்டுப் பக்கத்தில் காத்திருக்கிறான். தினைப்புனம் காக்கச் செல்வோம் என்று தோழி தலைவியை அழைப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

‘நாம் செல்லாவிட்டால் அன்னை நம்மைக் கிளியோட்டத் தெரியாதவர் என்று வீட்டிலேயே வைத்துவிடுவாள். உன்னைத் தழுவிய அவர் மார்பு வேறொருத்திக்கு ஆகிவிடக் கூடும்’ என்கிறாள்.

குறுந்தொகை 230 :

அறிவுடை நம்பி பாடியது நான் என் பேதைமையால் அவனை நோகச் செய்துவிட்டேனோ? அவன் திருமணத்தைப் பற்றி நினைக்காமலேயே இருக்கிறானே! – என்கிறாள் தலைவி.

நற்றிணை 15 :

அறிவுடை நம்பி பாடியது

இதில் உள்ள அரிய உவமைகள்

  • அன்னம் தாமரையை நுகர்வது போல அவன் அவளை நுகர்ந்தான்.
  • கற்புக்கரசி ஒருத்தியின் குழந்தையைப் பேய் வாங்கிக்கொண்டது போல அவன் அவளது நாணத்தை வாங்கிக்கொண்டான்.

அரசன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார் :

அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்

நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே

வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்

அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே

கோடியாத்து நாடு பெரிது நந்தும்

மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்

வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம் போல

தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! “

—(புறம்-184)

இப்பாடல் வரிகள் மூலம் பிசிராந்தையார் “அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு செய்து இட்டால் பலநாட்கு உணவாகும். யானையை நெல்வயலில் விட்டால் காலால் மிதித்துச் சிதைப்பது மிகையாகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்” என விளக்குகின்றார்.

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *