தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரிவர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய (ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் வெளியிட்ட வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் தம் “சோழர் வரலாறு” (The Cholas) எனும் நூலில் மேற்குறித்த உடையார்குடி சாசனத்தின் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய செய்திகளை விவரித்துள்ளார். அப்பகுதியில் சுந்தரச் சோழனின் தலைமகனும் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலனின் கொலை நிகழ்வின் பின்புலத்தில் மதுராந்தக உத்தம சோழனின் துரோகம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தே மதுராந்தக உத்தமச் சோழன் மீது ஏற்றப்பெற்ற களங்கமாக அமைந்தது.
வரலாற்று அறிஞர்களின் கருத்துக்கள்
பிற்காலச் சோழர் வரலாறு எனும் நூலினை எழுதிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்துக்கு மாறுபட்டு ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வில் உத்தமச் சோழன் பங்களிப்பு இருந்திருக்க இயலாதென்பதை வலியுறுத்துகிறார். இருப்பினும் சாஸ்திரியாரின் கருத்துக்களை மறுத்துரைப்பதற்கான தௌ¤வான சான்றுகள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை. 1971ம் ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை விவாகானந்தா கல்லூரி மலரில் இராஜராஜ சோழன் பற்றிய கட்டுரை ஒன்றினை வரைந்த ஆர்.வி.சீனிவாசன் என்பார் ஆதித்த கரிகாலன் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் அருண்மொழியும் (இராஜராஜனும்) அவனது தமக்கை குந்தவையும்தான் என்பதை வலியுறுத்துவதோடு பல கேள்விக் கணைகளையும் எழுப்பி தன் கருத்துக்களை மறுப்பவர்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். சீனிவாசன் அவர்களின் கருத்துக்களை வன்மையாக மறுக்கும் டாக்டர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் அருண்மொழி ஆய்வுத்தொகுதி எனும் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றில் உத்தம சோழனுக்கு எந்த விதத்திலும் இக்கொலையில் தொடர்பு இல்லை என்றும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் கண்டுபிடிக்க இயன்றது என்றும் பிராமணர்களாகிய கொலையாளிகளை மனுதரும சாத்திரத்தின் அடிப்படையில் அரசன் தண்டனை கொடுத்திருப்பானேயன்றி கொலை தண்டனை அளித்திருக்க இயலாது என்றும் தன் கருத்துக்களை பல சான்றுகளின் அடிப்படையில் கூறியுள்ளார். இவ்வறிஞர்களைத் தவிர மேலும் பல வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மதுராந்தக உத்தம சோழனைக் குற்றவாளி என்றும் இல்லை என்றும் தங்கள் தங்கள் கோணங்களில் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் தௌ¤ந்த சான்றுகளோடு தங்கள் கருத்துக்களை மெய்ப்பிக்க இயலவில்லை.
புதின ஆசிரியர்கள் பார்வையில்..
“பொன்னியின் செல்வன்” என்ற வரலாற்றுப் புதினத்தால் தமிழகத்தில் தணியாத ஒரு வரலாற்று தாகத்தை ஏற்படுத்தித அமரரான கல்கி (இரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை மையமாக அமைத்து புதினத்தைப் படைத்துக் காட்டியதோடு அதில் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் என ஊகிக்கத் தக்கவர்களாக வரலாற்றுப் பாத்திரங்கள் சிலரையும் கற்பனைப் பாத்திரங்கள் சிலரையும் உலவவிட்டு உண்மையான குற்றவாளி யார் என்பதை வாசகர்களே ஊகித்து அறிவார்களாக என்று தன் முடிவையும் கூறிச் சென்றுள்ளார். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையினையே முடிவாகக் கொண்டு கடிகை என்ற பெயரில் புதினமொன்றினைப் படைத்த போதும் கொலையாளிகளான பிராமணர்களுக்கு பின்புலத்தில் செயல்பட்டவன் மதுராந்தக உத்தமச் சோழன்தான் என்பதை தன் எழுத்தின் வன்மையினால் நிறுவியுள்ளார். புதினங்கள் வரலாற்று ஆய்வுக்குத் துணைநிற்கமாட்டாவெனினும் ஆதித்த கரிகாலன் கொலையைப் பொறுத்தவரை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கண்ட முடிவு புதினப் படைப்பாளர்களுக்கு அடித்தளமாய் அமைந்தது என்பது மட்டுமல்லாமல் மதுராந்தக உத்தமச் சோழனை குற்றவாளியாகவே முன்னிருத்தினர் என்பதுதான் உண்மை.
உடையார்குடிக் கல்வெட்டு
ஆதித்த கரிகாலன் கொலைபற்றிக் குறிப்பிடும் வரலாற்றுச் சாசனமான உடையார்குடி கல்வெட்டின் வாசகத்தினை இனி காண்போம்.
“ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ
வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி
ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ……………………ராமத்தம்
பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ
ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி
ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச
தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன்
அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”
உடையார்குடி கல்வெட்டு குறிப்பிடும் கோ இராஜகேசரிவர்மர் யார்?
சோழப் பெருமன்னர்கள் மாறிமாறி புனைந்து கொள்ளும் இராஜகேசரி, பரகேசரி எனும் பட்டங்களில் ஒன்றான கோஇராஜகேசரி எனத் தொடங்கும் இக்கல்வெட்டுச் சாசனத்தில் மன்னன் பெயரோ, மெய்க்கீர்த்தியோ இல்லாத காரணத்தால் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வுக்குப் பின்பு இராஜகேசரி எனப் பட்டம் பூண்ட சோழ மன்னர்கள் பலரில் யாருடைய சாசனமாகவும் இது இருக்கலாம் என்ற முடிவினை நாம் கொள்ள முடிந்தாலும், இக்கல்வெட்டில் குறிக்கப்பெறும் குருகாடி கிழான் என்ற சோழப் பெருந்தரத்து அலுவலன் மாமன்னன் இராஜராஜ சோழனின் அலுவலன் என்பதைப் பிற சாசனங்கள் எடுத்துரைப்பதால் இச்சாசனம் முதலாம் இராஜராஜ சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற சாசனமே என்பது தௌ¤வு. மேலும் இச்சாசனத்தின் 7 ஆம் வரியில் குறிக்கப்பெறும் இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி நாள் என்ற வானிலைக் குறிப்பு இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த குறிப்பு என்பதால், இச்சாசனம் முதலாம் இராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பெற்றது என்பது ஐயம் திரிபுற உறுதியாகின்றது.
சாசனம் குறிப்பிடும் இரண்டு ஆண்டுகள்
மேலே கண்ட இக்கல்வெட்டுச் சாசனத்தில் குறிக்கப்பெறும் ‘ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேசரிவர்மனுக்கு யாண்டு 2 ஆவது . . . ‘ என்ற ஸ்ரீமுகம் அனுப்பப்பெற்ற தொடக்கப்பகுதி குறிப்பிடும் ஆண்டும், ஏழாவது வரியில் உள்ள ‘இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி ஞான்று’ என்ற வியாழ கஜமல்லன் என்பான் அறக்கட்டளை வைத்த நாளைக் குறிப்பிடும் ஆண்டும் ஒரே ஆண்டு அல்ல. பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் இவ்விரு நிகழ்வுகளும் ஒரே ஆண்டில் நிகழ்ந்தவை என்ற கருத்தில் தம் கட்டுரையினை வரைந்துள்ளார்.
கல்வெட்டில் குறிக்கப்பெறும் மேஷ நாயற்று (சித்திரை மாதத்து) பூரட்டாதி விண்மீன் கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது ஒப்பீட்டு ஆண்டுக் கணக்கீட்டின்படி (Indian Epimeries) கி.பி 986 ஏப்ரல் 23 ஆம் நாளினைக் குறிப்பதாகும். எனவே முதலாம் இராஜராஜனின் ஸ்ரீமுகம் கி.பி 986 அல்லது 987 இல் உடையார்குடி சபையோருக்கு அனுப்பப்பெற்று, பின்பே கி.பி 988 இல் வியாழ கஜமல்லன் என்ற தனியாரின் இச்சாசனம் பதிவு பெற்றுள்ளது.
இராஜராஜனின் சாசனமன்று
இக்கல்வெட்டுச் சாசனத்தை முதன்முறையாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சாஸ்திரியார் அவர்களும், பின்பு இச்சாசனத்தைப் பற்றிப் பேசிய அறிஞர்கள் அனைவரும் இது இராஜராஜ சோழனின் நேரிடையான ஆணையை வெளியிடும் சாசனம் என்றும், இச்சாசனம் பதிவு பெற்றபோதுதான் ஆதித்த கரிகாலன் கொலை கண்டுபிடிக்கப் பெற்று குற்றவாளிகளின் உடைமைகள் கைப்பற்றப் பெற்றன என்றும் கருதி, கொலை பற்றிய தங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இது தவறாகும். உடையார்குடி கல்வெட்டுச் சாசனத்தில் காணப்பெறும் முதல் நான்கு வரிகள் கி.பி.986 அல்லது 987 இல் (இராஜராஜ சோழனின் இரண்டாம் ஆண்டில்) வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் (உடையார்குடி) சபையோருக்கு மன்னனிடமிருந்து அனுப்பப் பெற்ற ஒரு அனுமதிக் கடிதமே ஆகும். அக்கடிதம் ஒரு நில விற்பனை ஆவணத்தில் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளதேயன்றி, அதுவே குற்றவாளிகள் பற்றி அரசு எடுத்த முடிவு பற்றிய ஆணையன்று. கி.பி 988இல் தனிநபர் ஒருவர் உடையார்குடி கோயிலுக்கு வைத்த அறக்கட்டளையைப் பற்றியும், அதற்காக வாங்கப் பெற்ற நிலங்கள் பற்றியும் விவரிப்பதே இச்சாசனம் என்பதால் இதனை இராஜராஜ சோழனின் நேரிடையான அரசுச் சாசனம் எனக் கொள்ளல் தவறாகும்.
கல்வெட்டைப் பொறித்தவர் யார்?
‘வெண்ணையூர் நாட்டு வெண்ணை யூருடையான் நக்கன் அரவனையானான பல்லவ முத்தரையன் மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்திரு கழஞ்சு பொன்குடுத்து விலை கொண்டு இவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் முன்பு மூவாயிரத்து அறுநூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காசும், நிசதம் மதினைவர் பிராமணர் உண்பதற்கும், ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையனேன், தர்மம் ரக்ஷ¤க்கின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலைமேலன’ என்ற கல்வெட்டுச் சாசனப் பகுதியில், ‘வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரை யனேன்’, ‘தர்மம் ரக்ஷ¤க்கின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலைமேலன’ எனக் காணப்பெறும் வரிகள் மிகத் தௌ¤வாக தனிநபர் ஒருவரால் இச்சாசனம் பதிவு செய்யப்பெற்றது என்பதைக் காட்டி நிற்கின்றன.
திருவெண்ணை நல்லூரினைச் சார்ந்த அரவனையான் பல்லவமுத்தரையன் மகன் பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையன் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீஸ்வரம் எனும் கோயிலில் தண்ணீர் பந்தலுக்காகவும் பதினைந்து பேர் சிவயோகிகள் உட்பட்ட சிவபிராமணர் உண்பதற்காகவும் 2 1/4 வேலி 2 மா நிலத்தையும் ஆறு மனைகளையும் 112 கழஞ்சு பொன் குடுத்து வாங்கி அறக்கொடையாக அளித்தான். அதற்காகத் திருக்கோயிலில் கல்வெட்டாகப் பதிவு செய்யப் பெற்றதே இச்சாசனமாகும். இச்சாசனத்திற்குரிய கர்த்தா திருவெண்ணைநல்லூர் பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையனே அன்றி மாமன்னன் இராஜராஜன் அல்ல என்பதை ஈண்டு நோக்குதல் வேண்டும்.
சாசனம் குறிப்பிடும் நிலம்
இச்சாசனம் இரண்டே முக்கால் வேலி 1 மா நிலத்தையும், அகமனை ஆறையும் வாங்கியதாகக் குறிக்கின்றது. வியாழ கஜமல்லனால் இவையனைத்தும் ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோரிடமிருந்து வாங்கப் பெற்றது என்பதை இச்சாசனத்தின் ஆறாம் வரி ‘சபையார் பக்கல்’ என்று தௌ¤வாக உரைக்கின்றது. பக்கல் எனும் ஏழாம் வேற்றுமை உருபு பற்றி சோழர் கல்வெட்டொன்று (SII, VI, 356) “யானிவர் பக்கல் விலைக்குக் கொண்டுடையன” என்று கூறுவதை நோக்கும்போது இங்கு நிலத்தை விற்றது பெருங்குறி சபையே என்பது உறுதியாகின்றது. ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலம் பிரமதேயமாகவும், அது பெருங்குறி பெருமக்கள் நிருவாகத்திற்குரிய ஒரு சதுர்வேதிமங்கலமாகவும் திகழ்ந்தது என்பதை இச்சாசனத்தின் முதல்வரி தௌ¢ளத் தௌ¤வாக உரைக்கின்றது.
நிலத்தைத் தனிநபர் ஒருவரின் அறக்கட்டளைக்காக விற்ற பெருங்குறி மகாசபையோர் அந்நிலத்தின் முன்னைய வரலாற்றை மேற்படி விற்பனைச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆதித்த கரிகாலனைக் கொன்ற இராஜ துரோகிகள், அவர்களின் தாயத்தார்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோருடைய நிலங்கள் முழுவதும் முன்பு அரசு ஆணைக்கு ஏற்ப ஸ்ரீபராந்தக வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையால் கையகப்படுத்தப் பெற்று, அவர்கள் பொறுப்பில் அந்நிலங்கள் முழுவதும் இருந்துள்ளது. இது எந்த சோழ அரசரின் ஆணையின் பேரில் எப்போது கையகப்படுத்தப் பெற்றது, அந்த நிலங்களின் அளவு எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் இச்சாசனத்தில் குறிக்கப்படவில்லை. அச்செய்திகள் சபையோர் ஆவணத்திலும், அரசு ஆவணங்களிலும் பதிவு பெற்ற செய்திகளாகும்.
கொலைக் குற்றம் புரிந்தவர்கள், தாயத்தார், உறவினர் எனப் பலரிடமிருந்தும் கையகப்படுத்தப் பெற்று சபையின் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ஒரு பகுதியாக இருந்த மலையனூரான் ரேவதாச கிரம வித்தன், அவன் மகன், அவன் தாய் பெரிய நங்கைச் சானி என்ற மூவரின் உடைமையான 2 1/4 வேலி 1 மா நிலம், அகமனை ஆகியவற்றை மட்டுமே 112 கழஞ்சு பொன் விலையாகப் பெற்றுக் கொண்டு வியாழ கஜமல்லனுக்கு விற்றனர். எனவேதான் அந்நிலத்தின் முந்தைய உரிமையாளர் பற்றிய விவரங்களை இக்கல்வெட்டுச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவாளிகளின் உடமை என அரசு கையகப்படுத்திய நிலங்களை சபையோர் விற்பனை செய்வதற்காக இரு கண்கானிப்பாளர்களை மாமன்னன் முதலாம் இராஜராஜன் தன் இரண்டாம் ஆட்சியாண்டில் நியமித்தான். கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகிய இருவரும் அப்பணியை மேற்கொள்ளவும், ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி மகாசபையோர் அந்நிலங்களை விற்று அவ்வூர் நிதியில் சேர்க்க வேண்டும் (தலத்திடுக) என்றும் ஸ்ரீமுகம் (ஆனைக்கடிதம்) அனுப்பியிருந்ததைத்தான் இச்சாசனம் முற்பகுதியில் முந்தைய அனுமதியாகவும், மேற்கோளாகவும் சுட்டுகின்றது.
இவ்வாறு குறிப்பிடப் பெற்றுள்ள ஸ்ரீமுகத்தினை சாஸ்திரியார் அவர்கள் இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் குற்றம் கண்டுபிடிக்கப் பெற்றதாகவும், குற்றவாளிகளின் நிலங்கள் கையகப்படுத்தப் பெற்றதாகவும் கருதுவது ஏற்புடையதன்று. இச்சாசனத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பெற்றது பற்றியோ, அவர்களிடமிருந்து கையகப்படுத்தப் பெற்ற நிலங்களின் முழு விவரங்களோ பதிவு செய்யப் பெறவில்லை என்பதை நோக்குதல் வேண்டும். சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்திலோ, மதுராந்தக உத்தம சோழரின் ஆட்சிக் காலத்திலோ கையகப் படுத்தப் பெற்ற நிலங்களைப் பின்னாளில் சபையோர் இருவர் கண்காணிப்பில் விற்பதற்குரிய உரிமையை இராஜராஜன் வழங்கியதைத்தான் இச்சாசனம் குறிப்பிடுகின்றது. அவ்வாணையை பெற்ற ஊர் சபையோர் அதன்பின்பு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து விற்பனை செய்த ஒரு சிறு கூறு நிலம் பற்றியே இச்சாசனம் பேசுகின்றது. குற்றவாளிகளின் நிலங்களைக் கையகப்படுத்த இராஜராஜன் வழங்கிய மூல ஆணையாக இந்த ஸ்ரீமுகத்தைக் கருதியதால்தான் பல வரலாற்றுக் குழப்பங்களை ஆய்வாளர்கள் சந்திக்க நேர்ந்தது.
கொலையாளிகளும் சுற்றத்தாரும்
உடையார்குடிக் (ஸ்ரீபராந்தக சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீஸ்வரத்துக்) கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் மற்றும் அவர்தம் உறவினர்கள் பற்றி பின்வருமாறு குறிக்கின்றது.
“பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன் . . . . றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜனும், இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும், இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிலும், இவர் பிரமாணிமார் பெற்றாளும், இ . . . . . ராமத்தம் பேரப்பம் மாரிடும், இவகள் மக்களிடும், தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும், இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் முடைமையும் . . . ” என்று கூறும் கல்வெட்டுச் செய்தியினை ஆழ்ந்து நோக்கும்போது சோமன், அவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவர் மட்டுமே ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் என்பதும், மற்ற அனைவரையும் இக்கல்வெட்டு கூறும்போது இவகள் (இவர்கள்) என்ற சொல்லோடு தொடர்வதால் அவர்கள் குற்றவாளிகளோடு உறவின்முறையில் தொடர்புடையவர்கள் மட்டுமே என்பதும் புலனாகின்றது.
இச்சாசனத்தில் விற்கப்பெற்ற நிலத்திற்குரியவனான மலையனூரானான பாப்பனச்சேரி ரேவதாச கிரம வித்தன் என்பான் கொலையாளிகள் மூவருடைய தம்பி என்பதும், அவன் கொலையில் ஈடுபட்டவன் அல்லன் என்பதும் நன்கு விளங்கும். தாயத்தார் அனைவரும் குற்றமுடையவர்களே என்ற அடிப்படையில்தான் அவனது நிலமும் அவன் குடும்பத்தார் நிலமும் இங்கு விற்பனைக்குள்ளானது, எனவே கொலையில் நேரடித் தொடர்புடையவர்களான சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகிய மூவருடைய நிலம் பற்றியோ அல்லது அகமனைகள் பற்றியோ இக்கல்வெட்டில் விற்பனை நிலமாகப் பேசப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் (பெருந்தரத்து அலுவலர்) அந்தணர்களுக்கு மட்டுமே வழங்கப் பெறுவதாகும். இங்குக் கொலைக் குற்றவாளியாகக் கூறப் பெற்றிருக்கும் மூவரில் சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. இரண்டாமவன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்; மூன்றாமவன் பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன். பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும்.
ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம். கொலையுண்ட ஆதித்த கரிகாலன் தன் கல்வெட்டுக்களில் “வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்” எனக் கூறிக் கொள்வதை ஆராய்ந்த நீலகண்ட சாஸ்திரியார் கரிகாலன் வீரபாண்டியனின் தலையைத் துண்டித்திருக்க மாட்டான் என்றும். அவனை வெற்றி கொண்டதையே இவ்வாறு குறிப்பிட்டிருப்பான் என்றும் கூறுகிறார் (6). ஆனால் நீலகண்ட சாஸ்திரியார் மறைவிற்குப் பின்பு அண்மையில் எசாலம் (விழுப்புரம் வட்டம்) எனும் ஊரில் புதையுண்டு வெளிப்பட முதலாம் இராஜேந்திர சோழனின் செப்பேட்டுத் தொகுதியில் ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக் கொய்து, ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான் என்று கூறுகிறது (7), போர்த் தர்மத்தையும் மீறி ஆதித்த கரிகாலன் செய்த அடாத செயலுக்குப் பழி தீர்க்கும் வகையில்தான் இக்கொலை நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தில் (உடையார்குடியில்) பிறந்து பாண்டிய மன்னர்களிடமும் சோழப் பேரரசர்களிடமும் உயர்நிலை அலுவலர்களாக விளங்கிய உடன்பிறந்தோர் மூவரும் தங்கள் திட்டம் நிறைவுற்ற பிறகு, அவர்கள் நிச்சயம் சோழ நாட்டில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் பாண்டிய அரசுக்காக இச்செயலைச் செய்ய முன்வந்தவர்கள் பாண்டிய நாட்டில் அல்லது அவர்களுக்குச் சார்புடைய கேரள நாட்டிற்குச் சென்று சிறிது காலமாவது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களது தாயத்தாரும், நெருங்கிய உறவினர்களும் புலம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும். அதனால்தான் சோழ அரசு அவர்களுடைய நிலத்தையும் அகமனைகளையும் கையகப்படுத்தி இருந்திருக்கிறது. இந்நிகழ்வு சுந்தர சோழரின் இறுதி நாட்களிலோ அல்லது மதுராந்தக உத்தம சோழன் முடிசூடிய சின்னாட்களிலோ நிகழ்ந்த செயலாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
மதுராந்தக உத்தம சோழனின் ஆட்சிமுறை, அவன்பால் மாமன்னன் இராஜராஜசோழன் கொண்ட பெருமதிப்பு, தன் புதல்வன் இராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் எனப் பெயர் சூட்டி அழைத்தது, செம்பியன் மாதேவியார் இராஜராஜ சோழன்பால் பேரன்பு கொண்டு அவனுடன் வாழ்ந்தது ஆகிய வரலாற்று நிகழ்வுகளின் சான்றாதாரங்களை ஆழ்ந்தும் கூர்ந்தும் நோக்குவோமாயின் அவன்மீது கொலைப்பழி கொள்ளல் எவ்வகையிலும் ஏற்புடையதாகாது.
இராஜராஜ சோழன் குற்றம் செய்த பிராமணர்களை கொல்லாது விடுத்தான் என்பதும் சான்றுகள் இன்றி கூறப்பெறும் கூற்றாகும். அவனது தாணைத் தலைவனான கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழ பிரம்மராயன் போர்க்களத்தில் போரிட்டவனே, இராஜராஜன் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டதைக் கூறும் சாளுக்கிய நாட்டு கல்வெட்டுக்கள் அவன் அந்நாட்டில் பிராமணர்களைக் கொன்றவன் என்று குறிப்பிடுகின்றன. எனவே அவன் காலத்தில் பிராமணர்கள் வாளெடுத்துப் போர் செய்வதும், பிராமணர்களைப் போரில் கொல்வதும் இயல்பாக நடைபெற்ற செயல்களாகவே இருந்துள்ளன. அவ்வகையில் நோக்கும்போது இராஜராஜ சோழன் மீது வீண்பழி சுமத்துவது வரலாற்று அடிப்படையில் ஏற்புடையதாகாது.
உடையார்குடி கல்வெட்டுச் சாசனம் என்பது ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யாவர் என்பதை ஒரு வரியில் கூறும் ஒரு கல்வெட்டேயன்றி அக்கொலை பற்றிய பிற செய்திகளையோ அல்லது அவர்களுக்கு கொடுக்கப் பெற்ற தண்டனை பற்றியோ விவரிக்கும் சாசனமாகாது. தனி நபர் ஒருவர் (வெண்ணையூருடையார் பரதன் எனும் வியாழ கஜ மல்லன்) தான் வாங்கிய நிலம் பற்றியும், வைத்த அறக்கொடை பற்றியும் பதிவு செய்த சாசனமேயாகும்.
thanks:
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
……