திருவண்ணாமலை கல்வெட்டு

பதிவுசெய்யப்பெற்ற மொத்தக் கல்வெட்டுக்கள் 119. இவைகளில் பெரும்பாலன சோழர்காலத்தன. திருவிளக்கேற்றல், திருமஞ்சனம், திருநந்தனவனம், திருவமுது, திருவெழுச்சி, அடியார்க்கு அமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம், பொன், கால்நடை முதலியனவற்றை அளித்தமையை அறிவிக்கின்றன. பாண்டியர், பல்லவர், ஹொய்சளமன்னரான வீரவல்லாளதேவர், விஜயநகரத்து ராயர், தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர், வேளாளர் முதலியவர்கள் கல்வெட்டுக்களும் காணக்கிடக்கின்றன.

முதல் இராஜேந்திரனுடைய காலத்தில் (கி.பி. 1038.) திருவண்ணாமலை, மதுராந்தகவளநாட்டுப் பெண்ணை வடகரைத் திருவண்ணாமலை என்றும், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1179.) காலத்தில் இராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும், மேற்படி சோழனுடைய 27-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1204) வாணகோப்பாடிப் பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும், விஜயநகர இராயர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்குன்றக் கோட்டத்துப் பெண்ணைவடகரை வாணகோப்பாடி அண்ணாநாட்டுத் தனியூர் திருவண்ணாமலை என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. இதனால் திருவண்ணாமலையின் உள்ளடங்கிய வள நாட்டுப் பெயர் முதலில் மதுராந்தகவளநாடு என்றிருந்து, பிறகு இராஜ ராஜ வளநாடு என்று மாறி, இறுதியில் ஜெயங்கொண்ட சோழ மண்டலம் ஆயிற்றென்றும், இம்மண்டலத்தின் உட்பிரிவாகிய செங்குன்றக் கோட்டத்தினுள் அண்ணாநாட்டுத் தனியூராகக் குறிக்கப்பட்டதென்றும் அறியக்கிடக்கும்.

பல்லவர் காலத்திற்கு முந்திய கல்வெட்டொன்றும் இல்லாமையால், கோயில் செங்கற்சுதை மாடமாக இருந்ததென்றும், மலையின் மேல் அண்ணாமலையார் கோயில்கொண்டிருந்திருக்க வேண்டுமென்றும் யூகிக்க வேண்டியுள்ளது. முதற்பிராகாரத்துச் சுவரில் கங்கை கொண்ட இராஜேந்திரன் கல்வெட்டு (கி.பி.1028) காணப்பெறுவதால், இதற்கு முன்பே கருங்கல் திருப்பணி நடந்திருக்க வேண்டும், முதற் பிராகாரத்து விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில், சிதம்பரேசர் கோயில் ஆகிய இரண்டின் சுவர்களிலும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சாஸனங்கள் காணப்படுகின்றன. கிளிக்கோபுரத்து 33 கல்வெட்டில் பழைமையுடைய வீரராஜேந்திர சோழனது இரண்டாவது ஆட்சியாண்டின் (கி.பி,1063) முன்பே கருங்கல் திருப்பணியாயிருக்க வேண்டும். திருக்காமக்கோட்டமுடைய உண்ணாமுலைநாச்சியார் கோட்டம் தனியாக கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றது. கல்வெட்டுகளில் திருக்காமக் கோட்டம் எனக் குறிக்கப்பெறும்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுந்த கல்வெட்டுக்களில் வீரராகவன் திருமதில், வாணாதிராயன் திருமதில், திருவேகம்பமுடையான் திருமதில் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. அம்மையப்பன் சந்நிதிக்கு இடையில் மேற்பக்கத்தில் நங்கையாழ் வீசுவரம் என்னுங் கோயில் பல்லவகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரசியால் (கி.பி.1269) எடுப்பிக்கப் பதினாலடிக் கோலால் பதின்மூன்றரைகுழி விற்றுப் பதினாயிரம் பொற்காசு பெற்றுக் கட்டியபகுதி இன்று இல்லை.

கிருஷ்ணதேவராயர் (கி.பி.1516) ஆயிரங்கால் மண்டபத்தையும், எதிரிலுள்ள திருக்குளத்தையும், பதினொரு நிலையிலுள்ள கோபுரத்தையும், வேறுபல திருப்பணிகளையும் அமைத்தமை அறியப்படுகிறது.

பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனும், அவன் மகன் வேணாவுடையானும் செய்த திருப்பணிகள் மிகப்பல. பூஜைக்கும் திருப்பணிக்குமாக `அண்ணாமலைநாதர் தேவதானப்பற்றுக்களும், அண்ணாநாட்டு நாற்பாக் கெல்லைக் குட்பட்ட நன்செய் புன்செய் ஆக உள்ள நிலத்திற்கு ஆயம்பாடி காவலால் வந்த நெல்லும் காசாயமும் மற்றும் எப்பேர்ப்பட்ட பல்லாயங்களும்` இவன் தானமாக ஈந்தான்.

கல்வெட்டுக்களில் காணப்பெறும் கோயில் அதிகாரிகள் ஸ்ரீருத்திரர், ஸ்ரீமாகேசுரர், ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார், தானத்தார், தானபதி மாகேசுரர், தேவகன்மிகள், கோயிற்கணக்கர், ஸ்ரீகாரியஞ்செய்வார் எனப் பலராவர். இவரில் ஸ்ரீமாகேசுரர், தர்மசாசனங்கள் ஒழுங்காக நடைபெறக் காரியம் பார்ப்பவராவர்.

அண்ணாமலைநாதருக்கும் உண்ணாமுலை அம்மைக்கும் பிச்சதேவர் முதலிய மூர்த்திகட்கும் திருப்பள்ளி எழுச்சி, சிறுகாலை சந்தி, உச்சிப்போது, இரவை, அர்த்தசாமம் முதலியகாலங்களில் அமுது முதலியவற்றிற்கு நிலம் அளித்தமை அறியலாம்.

சில சாஸனங்களில் பிரமநாயனார் பெரியமடத்து முதலியார், வையந் தொழுவார் பெரியமடத்து முதலியார், ஊருக்குப் பெரிய மடத்து முதலியார், திருவண்ணாமலை உடையார் திருமுற்றத்தே இராஜேந்திரசோழன் சாலை, காங்கேயன்மடம், அம்மைமடம் முதலியன அறியப்படும் செய்திகள்.

நெய், மிளகு, உப்பு, தயிர், அடைக்காய், வெற்றிலை, சீரகம், வாழைப்பழம், வாழையிலை முதலியன நெல்லளந்து பெறப்பட்டவை. மங்கையர்க்கரசி என்னும் நங்கை தன்னாபரணங்களை விற்ற பொருள்கொண்டும், நெல்லைக்கொண்டும் ஏரிபுதுக்கி உதவினாள் என்ற செய்தி கல்வெட்டால் அறியப்படுகிறது.

……

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *