•~•°•~•°•~•°•~•°•~•°•~•°~•°•~•
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப்சிங்கின் காலத்தில்({1758 } மன்னவர்குடி என முன்பு வழங்கப்பட்ட இன்றைய மன்னார்குடி ஜெயங்கொண்டநாத ஸ்வாமி கோயிலுக்கு இறையிலியாக கொடைகள் அளித்த செய்திக்குறிப்புகள் உள்ளன.அக்கோயிலின் இறைவனுக்கு காலைச்சந்திக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு பணம் வீதம் ஆண்டிற்கு 720 பணம் என்ற கணக்கின் கீழ் 72 பொன் ராசகோபால சக்கரமும், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிரவாரகட்டளைக்காக மாதமொன்றிற்கு 6- பணம், 1-பொன், ஆகமொத்தம் வருடமொன்றிற்கு 19 பொன், இரண்டு பணமும் அளித்துள்ளார், இதே மன்னரின் மற்றொரு 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேட்டில் சாயரட்சை வழிபாட்டிற்காக {மாலைநேர பூஜை} ஆண்டிற்கு 40 பொன் வழங்கியமையையும் அறியமுடிகிறது. இந்த கோயிலில்தான் பாப்பாக்குடி நாடு ஜமீன்தார் “நல்லவன் விசையாத்தேவர்” அவர்களின் சிலையும் வழிபாட்டில் இருக்கிறது.
மேலும் சிங்கவனம் பாளையக்காரர் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நிலக்கொடை அளித்த செய்தியை அந்த ஆதீனத்தின் செப்பேடு மூலமாக அறியமுடிகிறது. அதன் விபரத்தையும் கீழே தந்துள்ளேன்.
திருவாவடுதுறை ஆதீனச்செப்பேடு.
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
ஊர் – திருவாவடுதுறை
வட்டம் – குத்தாலம்
மாவட்டம் – நாகப்பட்டினம்
மொழியும் எழுத்தும் – தமிழ்-தமிழ்
அரசு / ஆட்சியாளர் – தஞ்சை மராட்டியர் / முதலாம் துளசா
வரலாற்று ஆண்டு – 13.4.1729
விளக்கம் –
“இராசராச வளநாடு, இராசேந்திர சோழ வளநாட்டில் பொய்யூர்க் கூற்றத்தில் சிறுநெல்லிக் கோட்டையில் இருக்கும் காணியுடைய அரையர்களில் சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர்” மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
“ஸ்ரீசவ்வாயி விசைய ரகுநாத வாளோசி கிருட்டிண கோபாலர்” தஞ்சை மராட்டியர் காலத்திலிருந்த பத்து கள்ளர் பாளையக்காரருள் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் சிங்கவனம் என்ற பாளையத்துக்கு இவர்கள் உரியவர்கள். அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
இன்றும் பல்வேறு கோயில்களிலும்சிறப்புரிமை எய்துவோராகவும் முன்னிலை வகிப்போராகவும் சிங்கவனம் ஜமீன்தார்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் நாகுடியில் சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிங்கவனம் ஜமீன் தலைமையில் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடந்தது. இவர்கள் மாட்டு வண்டிகளும் பல்வேறுஇடங்களில் பரிசுகளை வென்றிருக்கிறது என்பது நாம் தற்காலத்தில் அறியும் செய்தி.
இந்த ஜமீனின் தற்போதைய ஜமீன்தாராக திரு. ஸ்ரீமன் ராஜஸ்ரீ. விஜய ரகுநாத ராமசாமி மெய்க்கன் கோபாலர் இருக்கிறார்.
செப்பேடு மின்னுருவாக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் : தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிப்புதவிகள் – செ.இராசு, தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் , தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை.
நன்றியுடன். …
அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்