குற்றால மலையில் இருந்து ஓடி வரும் சிற்றாறும், சொக்கம்பட்டி வழியாக ஓடி வரும் கருப்ப நதியும் சங்கமிக்கும் அற்புத பூமி, சுரண்டை. இங்கு விவசாய விளைச்சலுக்குப் பஞ்சமில்லை; பக்தி விளைச்சலுக்கும் குறைவில்லை. சுரண்டை ஜமீன்தார்கள் கோயில் கட்ட இடம்கொடுத்தனர். மண்டகப்படி திருவிழாவை ஏற்படுத்தினர். கஷ்டம் பல வந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில் தங்களால் பலமுறை கப்பம் கட்ட முடியாமல் தங்கள் ஜமீன் ஏலத்துக்கு சென்றபோதும் தாங்கள் உருவாக்கிய கோயில்களை மறக்கவில்லை. தாங்கள் செய்யும் பணிவிடைகளை இன்றளவும் அவர்களுடைய வாரிசுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தென்னகத்தில் உருவான 72 பாளையங்களுள் ஒன்று சுரண்டை. ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கு பாளையத்தினை நாயக்கர்களும், மேற்கு பாளையத்தினை மறவர்களும் ஆண்டு வந்தனர். மறவர் ஜமீனில் சுரண்டை முக்கியமானதாக விளங்கியது. இந்த ஜமீன்தார்கள் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்குக் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாக செலுத்திவிட்டு, மீதி பணத்தினை வைத்து சுகபோகமாக வாழ்ந்தார்கள்.
இவர்களில் சிலர் கப்பம் கட்ட விரும்பாமல் ஆங்கிலேயருக்கு எதிராகக் கலகம் செய்தனர். இதனால் பல ஜமீனை ஏலத்துக்கு விட்டனர் ஆங்கிலேயர்கள். இந்தவகையில் நான்கு முறை கப்பம் கட்ட முடியாமல் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. அந்த சமயத்தில், ஊத்து மலை ஜமீன்தார் இருதலாய மருத்தப்பர் தலையிட்டு ஜமீனை மீட்டுக் கொடுத்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் சிவனு சாலுவ கட்டாரி பாண்டியன் என்பவர் அந்த ஜமீனை ஆண்டு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. இவர் ஆட்சியின்போதுதான் சுரண்டையில் அழகு பார்வதியம்மன் கோயிலில் திருவிழா உருவானது என்றும் கூறுகிறார்கள். இன்றைக்கும் 10 நாள் கொண்டாட்டமாக நடை பெறும் இந்தத் திருவிழாவின் முதல் மண்டகப் படியே ஜமீன் அரண்மனைக்குரியதுதான்.
கட்டாரி பாண்டியன், சீரோடும் சிறப்போடும் ஊத்துமலை ஜமீனுக்கு நிகரான செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்தார். எனவே இவருக்கு ஊத்துமலை ஜமீன்தாரின் சகோதரி இந்திர மருத நாச்சியாரை மணமுடித்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே கட்டாரி பாண்டியன் இறந்த பிறகு நாச்சியார் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு உதவியாக இருந்த தம்பி இந்திர தலைவன், நாச்சியாரின் காலத்துக்கு பிறகு
பட்டத்துக்கு வந்தார்.
இவர் ஆட்சி காலத்திலும் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. இவர்களின் அரண்மனை ஏலத்துக்கு வந்தபோது சுந்தரபாண்டியபுரத்தினை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்தார். அரண்மனை இருந்த இடத்தில் இப்போது கிராம மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. அரண்மனை இருந்ததற்கான சான்றாக கோட்டைத் தெரு மட்டும் உள்ளது. தற்போது ஜமீன் வாரிசுகள் வசிக்கும் இடம் ஒரு காலத்தில் விருந்தினர் மாளிகையாக இருந்துள்ளது.
மிக பிரமாண்டமான மூன்று மாடி கட்டிடம் அது. கலைநயம் மிக்கது. மூன்றாவது மாடியில் மணிப்பாரா உள்ளது. இந்த மணிப்பாரா, ஜமீன் ஆட்சி காலத்தில் காவலர்கள் கண்காணிப்புத் தளமாக இருந்தது. வாரிசுகள் இங்கு வசித்தபோது, பிரச்னைகள் பல ஏற்பட்டன. எனவே வாஸ்து சாஸ்திரப்படி முன்பக்கம் வாசல் சரியில்லை என்று அதை அடைத்து விட்டு பின்பக்க வாசலை பிரதான வாசலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
வராண்டாவில் ஊஞ்சல் ஆடுகிறது. அருகே ஜமீன்தார்கள் பயன்படுத்திய வேட்டை துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டுள்ளது. மூன்று மாடி
ஏறிப்போனால் மணிப்பாராவை எட்டலாம். இந்திர தலைவரின் மகன் தங்கராஜ்பாண்டியன், இவரை அடுத்து இவரது மனைவி அன்னபூரணி நாச்சியார் என்னும் கருத்த துரைச்சி – இவர்களுக்குப் பிறகு, மூத்த மகனான சிவஞானராஜா, தற்போதைய சுரண்டை ஜமீன்தாராக உள்ளார். இவருடைய மகன், எஸ்.கே.பி. ராஜா, கோயிலில் நடைபெறும் பரிவட்டம் உள்பட ஜமீன் மரியாதைகளை ஏற்று வருகிறார். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாறு இது:
இருதாலய மருதப்பதேவர் ஊத்துமலை ஜமீனை ஆண்டு வந்தார். இவருடைய பெண்ணை மணந்து மருமகனானவர், சுரண்டை ஜமீன்தாரான கட்டாரி பாண்டியன். மருமகனுக்கு அனைத்து சீர்வரிசை, மாலை மரியாதை எல்லாமே திரு விழாக்களில் வழங்கப்படுவதை மாமனார் உறுதிசெய்தார். ஆனால், கட்டாரி பாண்டியன் வித்தியாசமானவர். தன்னைப் போலவே தனது நண்பர்களுக்கும் மதிப்பும், மரியாதையும் தரவேண்டும் என்ற எண்ணங்கொண்டவர்.
எனவே திருவிழாக்காலங்களில் சுரண்டையில் இருந்து அனைத்து சமுதாய மக்களையும் திரட்டிக்கொண்டு சென்று விடுவார். சபையில் தனக்கு தரும் சிறப்பு மரியாதைபோலவே, கொஞ்சமும் குறைவின்றி தன் நண்பர்களுக்கும் தரப்படவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. சுரண்டை மக்களுக்கு வழங்கப்பட்ட உணவில் உப்பு இல்லை.
இதனால் அவர்கள் நல்ல உணவு வேண்டும் என்று கோர, அங்குள்ள ஊழியர்களுக்கும் சுரண்டைக்காரர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊத்துமலை ஜமீன் ஊழியர்கள், அவர்களைப் பாதி சாப்பாட்டிலேயே வலுக்கட்டாயமாக எழுந்திருக்கச் செய்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட சுரண்டை ஜமீன்தார் கோபமுற்று, தனது ஊர்க்காரர்களை அழைத்துக்கொண்டு பாதி திருவிழாவிலேயே ஊருக்கு திரும்பி விட்டார்.
தகவலறிந்த இருதாலய மருதப்பர் தனது மருமகனை எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். ஆனால், அவர் சமாதானமாகவில்லை. சுரண்டைக்கு வந்த ஜமீன்தார், பலமுறை ஏலத்துக்கு வந்த தன் ஜமீனைக் காப்பாற்றித் தந்தது இருதாலய மருதப்பர்தான். என்றாலும், தனது ஊர்க்காரர்கள் மான மரியாதையை இழப்பது சரியா என்றெல்லாம் யோசித்தார். திருவிழாவை அந்தக் கோயிலில் நடத்துவதால்தானே தம் மக்கள் அங்கு செல்கிறார்கள், அதே திருவிழாவை நமது ஊரில் நடத்தினால் என்ன என்று சிந்தித்தார்.
ஒரு அம்மன் தமது முன்னோர்களிடம் இடம் கேட்டு அமர்ந்து ‘கேட்ட வரம் தரும் அம்ம’னாக சுரண்டையில் அருள்பாலிக்கும் வரலாறு அவருக்கு நினைவுக்கு வந்தது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுரண்டை பகுதியில் இலந்த குளம் கரையில் காளியம்மனை வைத்து வணங்கி வந்தனர். இங்கு வாழ்ந்த நாடார் சமுதாயத்தினர் இருவர் பொதி மாட்டில் பஞ்சு பொதியை ஏற்றிக்கொண்டு சிவகாசி பகுதிக்கு வியாபாரத்துக்கு சென்றனர். அங்கே வியாபாரத்தினை முடித்துவிட்டு ஒரு வேப்பமரத்தடியில் தங்கினர். அவர்கள் முன்பு சிறு பெண்ணாக தோன்றிய அம்மன், அவர்களிடம் உணவு கேட்டார்.
அவர்கள், “நாங்களோ வியாபாரிகள். இந்த இடத்தில் உணவு கேட்டால் எப்படி கிடைக்கும்? எங்கள் ஊருக்கு வந்தால் உணவு கொடுப்போம்” என்று கூறினர். “சரி, அப்போ ஊருக்கு வருகிறேன்” என்று அந்த பெண் சொன்னாள். அவர்களும், “உன்னால் நடந்து வரமுடிந்தால் வா” என்று கூறி விட்டுக் கிளம்பினர்.
சித்திரை மாதத்து வெயிலில் இருவரும் பொதி மாட்டுடன் சுரண்டைக்கு வந்தனர். பொதி மாட்டை காளியம்மன் கோயில் முன்பு கட்டினர். அப்போது தங்கள் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அந்த பெண் திடீரென மறைந்து விட்டாள்! திகைத்துப்போன வியாபாரிகள் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தனர். பிறகு, ‘பாவம், எங்கே போனாளோ’ என்று வருந்தியபடி தம் வீட்டிற்குச் சென்றனர். அந்த பெண்ணின் நினைவே சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு அயர்ச்சியில் தூங்கிவிட்டார்கள்.
அன்றிரவு ஒரேநேரத்தில் அந்த வியாபாரிகள் மற்றும் சுரண்டை ஜமீன்தார் கனவில், தோன்றினாள் அப்பெண். “நான்தான் அம்மன். இவ்வூர் மக்களை பாதுகாக்க நான் இங்கு உறைய விரும்புகிறேன். எனக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள்,’’ என்றாள். காலையில், கனவால் ஏற்பட்ட குழப்பத்துடன் ஜமீன்தார் நின்றிருந்தபோது வியாபாரிகள் இருவரும் ஓடோடி வந்தனர். அவரிடம் தாங்கள் ஒரு பெண்ணை சந்தித்த விவரத்தைச் சொன்ன அவர்கள், “எங்க கூடவே சின்னப் பொண்ணாட்டம் வந்த அம்மன், காளியம்மன் கோயில்கிட்டே நின்னுகிட்டு நிலையம் கேக்கா… அது ஜமீனுக்கு உள்பட்ட இடம். நீங்க அனுமதி கொடுத்தா அவளுக்கு அங்கே நிலையம் கொடுக்கலாம்,’’ என்றனர்.
இரவில் தன் கனவில் வந்த அதே பெண்ணைத்தான் இவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஜமீன்தார், அவள் நிச்சயம் விசேஷமான தெய்வம்தான் என்பதை உறுதிசெய்துகொண்டார். உடனே, இலந்த குளம் உள்பட 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை கோயிலுக்கு ஜமீன்தார் கொடுத்து விட்டார். அந்த இடத்தில் ஓர் ஓலைக் குடிசையில் அம்மனை பிரதிஷ்டை செய்தார்கள்.
அம்மன் சிறு பெண்ணாக, சிரித்தமுகத்துடன் வியாபாரிகளை சந்தித்ததாலும், அவளது சலங்கை சத்தம் இனிமையாக ஒலித்ததாலும் அவளுக்கு ‘அழகு பார்வதி அம்மன்’ என்று பெயர் வைத்தனர். காளியம்மன் திருக்கோயில் அருகேயே அழகு பார்வதி அம்மனும் நிலையம் கொண்டிருந்தாலும், இருவருமே காக்கும் தெய்வமானார்கள். நாளாக ஆக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, கேட்ட வரம் தந்த அந்த அம்மனை தரிசிக்கப் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர்; இன்றும் வந்துகொண்டிருக்கிறார்கள்.
மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் கோயிலில் கொடைவிழா நடைபெறும். விழாவில் முதல் சுருளை ஜமீன்தார் கொடுப்பார். கோயிலை வணங்க வணங்க வியாபாரிகள் குடும்பத்தினர் தழைத்தோங்கினர். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூருக்கும் சென்று பெரிய அளவில் முன்னேறினர்.
நாளாவட்டத்தில் ஓலைக் குடிசை, ஜமீன்தார் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கைங்கரியத்தால் காரைக்கட்டிடம் ஆனது. ஊரிலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் வணங்கும் தெய்வமாக அழகு பார்வதி விளங்கினாள். ஊத்துமலை ஜமீனுக்குப் போவானேன், நம் ஜமீனிலுள்ள அழகு பார்வதி அம்மனுக்குத் திருவிழா நடத்தினால் என்ன என்று சுரண்டை ஜமீன்தாருக்குத் தோன்றியது. அதற்காக ஊர் மக்களை ஒன்று கூட்டினார்.