பொற்கைப் பாண்டியன்

pandian012

பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.

பொற்கை பெற்ற வரலாறு :

மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் “வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்” எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.

மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *