இராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6 கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய ராஜ கோபுரம் கட்டிச் சிறப்பித்துள்ளனர்.
அக்கோபுரத்தைக் கட்டுவதற்கு மானாமதுரையிலிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன. அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும். மானாமதுரையில், கருமலை என்ற இடத்தில் செங்கற்கள் எடுத்து மருது சகோதரர்கள் அக்கோபுரம் கட்டியதன் சிறப்பையும் அருமைப் பாட்டையும் ஒரு நாட்டுப்புறப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“கரும லையிலே கல்லெடுத்துக்
காளையார் கோயில் உண்டு பண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருதுவாரதைப் பாருங்கடி.”
அக்கோயிலின் வெளிப்புறத்தின் கிழக்குப் பகுதியின் பழைய வாயிலுக்கு எதிரில் மருது சகோதரர்களின் சமாதிகள் உள்ளன. பழைய கோபுரத்தின் உள்ளே கருங்கல்லால் வடிக்கப்பட்ட அவர்களின் இருவரின் திருவுருவம் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதம் 24 மற்றும் 27 தேதிகளில் அவர்களுக்கு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
குன்றக்குடி கோயில்
குன்றக்குடி மலை மேல் கோபுரமும் மண்டபமும் கட்டியுள்ளனர். அங்குள்ள மருதாபுரி என்னும் குளமும் மருது சகோதரர்கள் வெட்டியதே ஆகும். அக்கோயிலில் அவர்களின் சிலைகள் பெரிய அளவில் இருக்கின்றன. அக்கோயிலிலுள்ள முருகனுக்குச் சாத்தப்படும் பொற்கவசத்தில் ‘சின்னமருது உபயம்” என்னும் சொற்கள் காணப்படுகின்றன.
சருகணி மாதா கோயில்:
சருகணியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தைத் திறம்பட நடத்துவதற்காக அச்சிற்றூரை மருது சகோதரர்கள் முழுமையாக அக்கோவிலுக்கு தானமாக வழங்கினர். அங்கு நடைபெறும் தேரோட்டத்துக்குரிய செலவுகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இப்போதும் திருவிழாக் காலங்களில் மருது சகோதரர்களின் குடிவழியினருக்கு முதல் மரியாதை அளித்த பின்னரே தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கையில் உள்ள திருஞான சுப்பிரமணியார் கோயில் மருது
சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயில் கட்டப்பட்டதற்கு ஒரு வரலாறு உள்ளது. சிவகங்கைப் பாளையத்தின் இரண்டாம் அரசர் முத்துவடுகநாதர் பட்டத்தரசி வேலுநாச்சியாருக்கு நெடுநாள்களாக மகப்பேறு இல்லாதிருந்தது. அரசரின் கடைசி நாளில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிள்ளைப் பேறுண்டானால் கோயில் ஒன்று கட்டுவதாக முத்துவடுகநாதர் இறைவனை வேண்டியிருந்தார்.
ஆனால் எதிர்பாராமல் 25-6-1772 அன்று நடந்த போரில் அவர் இறந்துவிடவே கோயில் கட்ட இயலாமல் போய்விட்டது. அரசரின் அவ்வேண்டுதலை அறிந்த மருது சகோதரர்கள் அக்கோயிலைக் கட்டி முடித்ததாகச் சொல்லப்படுகிறது. அக்கோயிலின் முன்மண்டபத்தில் இடப்புறம் உள்ள முதல் தூணில் இச்செய்தியை உறுதிப்படுத்துவதற்குரிய கல்வெட்டு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
திருமோகூர் கோயில்:
திருமோகூர் என்ற வளர் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் ஒத்தக்கடை என்ற ஊரில் இருந்து பிரிந்து செல்லவும் ரோட்டில் 3 கல் தொலைவில் உள்ளது. அங்கு காளமேகப் பெருமானுக்கு இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அக்கோயிலின் முகப்பு முன் உள்ள மண்டபம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அக்கோயில் முன்பு மருது சகோதரர்களின் சிலைகள் இருக்கின்றன. மருது சிலைகள் மிகவும் உயரமாகவும், கம்பீரமாகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகுடன் உள்ளது. ஆனால் தூசு படிந்து யாரும் பராமரிக்கப்படாமல் உள்ளது. அக்கோயிலில் பூசை செய்வதற்காக மாங்குடி, மானாகுடி ஆகிய சிற்றூர்களை தானமாகக் கொடுத்ததாகத் தெரிகிறது.
நரிக்குடி கோயில்:
மருது சகோதரர்கள் தம் சொந்த ஊரான நரிக்குடியில் இரண்டு கோயில்களைக் கட்டினர். ஒன்று அன்னதான மருகி விநாயகர் கோயில், இன்னொன்று அழகிய மீனாம்பிகை கோயில். பாண்டியன் கிணறு என்னும் பெயரில் ஒரு கிணற்றையும் வெட்டி உள்ளனர்.
வீரக்குடி கோயில்:
வீரக்குடியில் உள்ள முருகன் கோயிலில் முன்புறத்தில் பெரிய மருதுவின் சிலை ஒன்று உள்ளது. எனவே அக்கோயிலைப் பெரிய மருது கட்டியதாகச் சொல்கிறார்கள்.
திருக்கோட்டியூர் கோயில்
மருது சகோதரர்கள் திருக்கோட்டியூரில் உள்ள தலத்தையும் குளத்தையும் புதுப்பித்து இறைவனுக்கு தேர் ஒன்றினையும் செய்தளித்துள்ளனர்.
திருப்பத்தூர் கோயில்:
திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். அக்கோயிலில் திருத்தலைநாதர், சிவகாமியம்மன் திருவுருவங்கள் உள்ளன. அக்கோயிலுக்கு உள்ளே வைரவன் கோவில் உள்ளது. அக்கோயில் மண்டபத்தில் பெரிய மருது, சின்ன மருது சிலைகள் உள்ளன. அக்கோயில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயில் குன்றக்குடி ஆதினத்திற்கு சொந்தமானது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 24ந் தேதியன்று மருது சகோதரர்களின் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இதைக் காணலாம்.
திருப்பாச்சேத்தி கோயில்:
திருப்பாச்சேத்தியிலுள்ள சுந்தரவல்லியம்மன் கோயிலுக்கு மரகதப் பச்சையில் சிவலிங்கம் ஒன்று மருது சகோதரர்களால் செய்தளித்ததாகக் கருதப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருதுபாண்டியர்களின் திருப்பணிகள்
மதுரையில் மங்காத புகழ் நிறைந்து விளங்கும மீனாட்சி அம்மன் மீது மருதுபாண்டியர்களுக்கு எப்போதும் அளவற்ற பக்தி இருந்தது. சிவகங்சைச் சீமையில் வாழ்வு எல்லா மக்களும் காளையார்கோயிலின் உச்சியில் நின்று மதுரை கோபுரத்தை அந்த மீனாட்சி தாயை தரிசித்து மகிழ்ச்சி அடைந்ததாக வரலாறு கூறுகிறது.
மீனாட்சி தாய்க்குப் பிள்ளை போன்றவர்களும் மீனாட்சியின் அருள் பெற்றவர்களுமான மருது பாண்டியர்கள் சிறப்பு வாய்ந்த அழகுமிக்க இரண்டு திருவாச்சித் தீபங்களை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழங்கி இருக்கின்றார்கள் அந்த இரண்டு திருவாச்சித் தீபங்களும் இன்றைய தினத்திலும் மீனாட்சித் தாய்க்கு ஒளியினை வாரி வழங்கியபடியே மருதுபாண்டியர்களின் பெயரையும் புகழையும் பரப்பிக்கொண்டு இருக்கின்றன. தான் வழங்கிய திருவாச்சித் தீபங்களுக்குப் பசுவின் நெய்யைத் தவறாமல் வழங்குவதற்காக மருதுபாண்டியர்கள் ஆவியூர் என்ற கிராமத்தையே மானியமாக கொடுத்திருக்கின்றார்கள்.
‘பூவனேந்தல், உப்பிலிக்குண்டு, கடம்பக்குளம், மக்கரந்தல், மாக்குளம், சீசனேந்தல் ஆகிய கிராமங்களை மதுரை மீனாட்சித் தாய்க்கு பூஜை கைங்கரியத்துக்காக ஒதுக்கி வைத்து ஒளிமயமான புகழை என்றும் பெற்றிருக்கிறார்கள் மருது சகோதரர்கள். தென்னகத்தில் திகழ்கிற ஆலயங்களில் தலைசிறந்தது மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலாகும். இந்த மீனாட்சிக் கோயிலில் உள்ள கல்யாண மண்டபம் சிறந்த சிறப்பையும் கைவண்ணத்தையும் உடையதாகும்.
இங்கு இன்றளவும் கல்யாண சுப காரியங்கள் ஊரில் பல பகுதிகளில் உள்ள மக்கள் கூடி முடிவு எடுக்கின்றனர். இந்த கல்யாண மண்டபத்தில் இருக்கும் பல்வேறு வகையான சிலைகளில் மருதுபாண்டியர்களின் குடும்பத்தினரின் சிலைகளும் அடங்கி உள்ளன. வடக்குப் பகுதியில் உள்ள தூணில் பெரிய மருதுவின் சிலை உள்ளது.
அந்த கல்யாண மண்டபத்தை மருது சகோதரர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதன் சமீபத்தில் உள்ள மண்டபம் இன்று சேர்வைக்காரர் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் குன்றக்குடி ஸ்ரீ சண்முநாதப் பெருமான் கோவில் பல திருப் பணிகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
One Response to மருது பாண்டியர்களின் கோவில் திருப்பணிகள்