நாடு பூராவும் கள்ளுக்கடை மறியல் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பிரிவாக கள்ளுக்கடை மறியல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடந்தது ..
போலீசாரின் குண்டாந்தடிகள் காங்கிரஸ் தொண்டர்களின் மண்டைகளை உடைத்து ,ரத்தத்தை சிந்த வைக்கும் பயங்கரங்கள் மிகச் சாதரணமாக நடந்தது .மறியல் செய்யும் தொண்டர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர் .
முதுகுளத்தூர் பகுதியிலும் கள்ளுக்கடை மறியல் நடைப்பெற்றது .அந்த சமயம் தேவர் திருமகனார் கொடுமலூர் என்ற ஊரில் உள்ள குமரய்யா கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்று கொடுமலூர் கிராம முன்சீப் வீட்டில் தங்கி இருந்தார் ..
அப்போது கொடுமலூர் கள்ளுக்கடை மறியல் நடைப்பெற்றது மறியல் செய்யும் தொண்டர்களை தாக்கியது போதாது என்று தொண்டர்களின் கால்களில் பிரியைக் கட்டி தரையில் பரபரவென்று இழுத்து கொண்டு போனார்கள் போலீசார்.
இந்த அக்கிரமத்தை தேவரிடம் வந்து முறையிட்டனர் தொண்டர்கள் .
தேவர் ஒரு ஆள் மூலமாக மறியல் செய்யும் தொண்டர்களை சட்டப்படி கைது செய்யுங்கள் ,சிறைக்கு அனுப்புங்கள் ,அதை விடுத்து சட்டத்திற்கு புறம்பாக இரத்தக் காயங்கள் ஏற்பட அடிப்பது ,காலில் பிரியைக் கட்டித் தரையில் இழுப்பது போன்ற அக்கிரமத்தைச் செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு சொல்லி அனுப்பினார் ..
அந்த ஆள் போலீசாரிடம் போய் தேவர் சொல்லி அனுப்பிய செய்தியை சொன்னதும் போலீசார் “அது யாருடா தேவர் ??. எனக்கு உத்தரவு போட??.. என்று தேவரை ஏளனமாக பேசினர் . அது கேட்ட கூடி இருந்த பொதுமக்கள் பொறுக்க முடியாமல் ,போலீசாரை சூழ்ந்து துப்பாக்கிகளை எல்லாம் பறித்து கொண்டு போலீசாரை அடித்து துரத்தினர் . இது அன்றைக்கு அந்த வட்டாரத்தில் போலீசாரிடம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .
தேவர் தூண்டுதலால் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது என்று கருதி தேவரை முதல் எதிரியாக சேர்த்து ,வழக்கு தொடுக்க போலீசார் முனைந்தனர் .கொடுமலூர் கிராம முன்சீப்பை பிடித்து போலீசார் சித்திரவதை செய்து தேவர்தான் தூண்டினார் என்று சொல்லும்படி வற்புறுத்தினர் கிராம முன்சீப் வேலையையும் பறித்தனர்.
அவரது கண்முன்பே அவரது குடும்பத்தினரை வதை செய்தனர் .ஆனால் அந்த கிராம முன்சீப் “என்னை கண்ட துண்டமாக வெட்டினாலும் தேவர் சொல்லாததை தேவர் சொன்னதாக சொல்லமாட்டேன் ” என்று உறுதியாக கூறவே போலீசார் தேவரை முதல் எதிரியாக வழக்கில் சேர்க்கும் முயற்சியைக் கைவிட்டு ,மற்றவர்களை சேர்த்து வழக்கை ஜோடித்தனர் ..
ஆனால் பறிபோன துப்பாக்கிகளைப் போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போனதால் வழக்கு விசாரணை முடியாமல் தேங்கி நின்றது . கற்ற வித்தைகளை எல்லாம் போலீசார் காட்டினர் . ஆனாலும் துப்பாக்கி எங்கு இருக்கிறது என்று போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை .. கடைசியில் அந்த வழக்கே ரத்து செய்யப்பட்டது …