ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரன் முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலையை தலைமைச்செயலகத்தில் இன்று
தலைமைச்செயலகத்தில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது:வீரம் செறிந்த நமது தமிழ் மண்ணில், இந்திய சுதந்திரத்திற்காக வித்தூன்றிய, இலட்சக் கணக்கான தியாகச்சுடர்களில் மறவர் குலத்தின் இறுதி மன்னராக விளங்கியமுத்து விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர்!இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி மன்னருக்கு சகோதரி மகனாக 30.3.1760இல் இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்தவர் அவர்.
அவர் பிறந்த 72 ஆம்நாளிலேயே அவருக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.1772 மே திங்களில் ஆர்க்காடு நவாப் மகன் உம்ரத்துல் உம்ரா ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர் இணைந்து இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கிய போரில் ஆயிரக்- கணக்கான வீர மறவர்கள் மடிந்தார்கள்.
12 வயது சிறுவனாக இருந்த இளவரசரும், அவரது அன்னையாரும், சகோதரிகளும் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சிறை
வைக்கப்பட்டார்கள்.அவர் சிறையிலே இருந்த 10 ஆண்டு காலத்தில் மறவர் சீமையில்தொடர்ந்து கலவரங்களும், குழப்பங்களும் கொந்தளித்ததால் 1782இல் இளவரசர் சேதுபதி 22 வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, இராமநாதபுரம் மன்னராகப் பொறுப்பேற்றார்.
சேது நாட்டை ஆக்கிரமித்து, தன்னையும், தனது குடும்பத்தாரையும் பத்தாண்டு காலம் சிறையிலடைத்த ஆர்க்காடு நவாப்பையும்,
ஆங்கிலேயக் கும்பெனியாரையும், பழிவாங்கத் துடித்த இளஞ்சிங்கம் சேதுபதி, டச்சுக் காரர்களின் உதவியுடன், இராமநாதபுரத்திற்கு அருகிலே இருந்த காட்டுப்பகுதியில் பெரிய பீரங்கிகள் தயாரிக்கும் ஆயுதச் சாலையைத் தொடங்கினார்;
அதன் மூலம் தனது படைபலத்தையும் பெருக்கினார்.அந்நிலையில் ஆற்காடு நவாபிடம் இருந்து தென்பாண்டிச் சீமையில் வரி வசூலிக்கும் உரிமை பெற்ற கும்பெனியார் சேதுபதி மன்னரிடம் ஆதிக்கம் செலுத்த முனைந்தார்கள்.மறவர் சீமை கைத்தறித்துணிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கியதால் அங்கு உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் தமக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று கும்பெனியார் வைத்த கோரிக்கையை சேதுபதி மன்னர் ஏற்கமறுத்து விட்டார்!
அதேபோலச் சேதுபதிச் சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதித்தல் கூடாது என்ற கும்பெனியாரின் கோரிக்கையையும் முத்துராமலிங்க சேதுபதி மறுத்துவிட்டார்!ஆங்கிலேய வணிகக் கப்பல்கள் தூத்துக்குடிதுறைமுகத்திலிருந்து கைத்தறித் துணிகளையும், மிளகு போன்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு சென்னைத் துறைமுகத்திற்குச் சேதுபதி மன்னருக்கு உரிமையான பாம்பன் நீர் வழியே செல்லும்போது; அந்தக் கப்பல்களை வரிசையில் நிறுத்தி, சுங்கச் சோதனை செய்வதையும், அதற்குச் சுங்கவரி விதிப்பதையும் நீக்க வேண்டுமென்ற வெள்ளைக்காரர்களின் கோரிக்கையையும் நிராகரித்தார் முத்துராமலிங்க சேதுபதி மன்னர்.
இப்படி ஆங்கிலேயர் விடுத்த கோரிக்கைகளை அனைத்தையும் மறுத்த முத்துராமலிங்க சேதுபதி அவர்களை, விசாரணைக்கு வருமாறு
திருநெல்வேலியிலிருந்த கலெக்டர் பவுனி சம்மன் அனுப்பினார்.வாணிகம் செய்து பிழைக்க வந்தவர்கள் தனக்கு ஆணையிடுவதா எனக் கொதித்த சேதுபதி அந்த ஆணையைப் புறக்கணித்தார்.
அடுத்து, சென்னை கோட்டையிலிருந்த கும்பெனி கவர்னர்,
கலெக்டர் அனுப்பும் கடிதப்படி அவர்முன் சென்று ஆஜராகும்படி சேதுபதி
மன்னருக்கு ஆணையிட்டார். அதையும் சேதுபதி மன்னர் பொருட்படுத்தவில்லை.
இவை காரணமாக – எரிச்சலடைந்த ஆங்கிலேயர், அவரை “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” எனக் கோபத்துடன் கூறத்தொடங்கினர். அவரை அடக்கி, மறவர் சீமையை கைப்பற்றத் திட்டமிட்டர்கள்.
இத்திட்டப்படி 1795 பிப்ரவரி 8ஆம் நாள், இராமநாதபுரம் அரண்மனையைக் கும்பெனிப் படை முற்றுகையிட்டு, சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சியிலும், பின்னர் இங்கே சென்னைக் கோட்டையிலும் சிறையிலடைத்தது. அங்கேதான் இன்று கூடியிருக்கிறோம், அவருக்கு அஞ்சல் தலையை வெளியிட.அதனைத் தொடர்ந்து, மறவர் சீமையில் எழுந்த கிளர்ச்சிகளையெல்லாம் அடக்கியது, சேதுபதிமன்னரை விசாரணை எதுவுமின்றி 13 ஆண்டு காலம் சிறையிலேயே வைத்திருந்தது.
அடங்காத விடுதலை வேட்கையோடு சிறைக் கூடத்தில் அடைபட்டிருந்த நிலையில், 23.1.1809 அன்று தன்னுடைய 49ஆம் வயதில் சேதுபதி மன்னர் உலக வாழ்வை நீத்தார்.
தாயகத்து உரிமையை மதித்து அதனை நிலைநாட்ட முனைந்ததற்காக 49 ஆண்டுகால வாழ்வில் ஏறத்தாழ சரிபாதி 24 ஆண்டுகளை, அந்நியர் சிறையில் கழித்து மறைந்த வீரத் தியாகி முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் தீரத்தை – தியாகத்தைப் போற்றி, அவரது நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு இந்தத் தமிழக அரசு விடுத்த கோரிக்கை நிறைவேறி – இன்று
அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.
….