பழநி:கடந்த 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குசோழ கல்வெட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில் முன் மண்டப தென்புறத் தூணின் வட பகுதியில், வழக்கில் உள்ள தமிழ்மொழியின் முன்னோடி வடிவத்தில் 20 வரிகளைக் கொண்ட கல்வெட்டு இருந்தது. கொங்குசோழ அரசன் வீரராஜேந்திரனின் 19ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஆட்சி ஆண்டு 14 எனவும், பின்னர் இதன் மீதே 19 எனவும் திருத்தி எழுதப்பட்டுள்ளது. இது, கி.பி.1225ம் ஆண்டு ஆகும். இந்த கல்வெட்டின் மூலம் பழநிக்கு, வைகாவி நாடு என்ற பெயர் இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.ஒரு கோவிலுக்கு அளிக்கப்பட்ட தானத்தைப் பற்றி, வேறு கோவிலில் கல்வெட்டு பொறிக்கும் வழக்கம், தமிழகத்தில் பரவலாக இருந்துள்ளது. “வைகாவி நாட்டைச் சேர்ந்த நாட்டார்மங்கலத்தில் குடி அமர்ந்த ஆயிரவரில் (ஆயிர வைசியர்), வெள்ளப்ப நாட்டைச் சேர்ந்த சேந்தன் ஸ்ரீராமன் என்பவர் பெரியாவுடையார் கோவில் திருமண்டபத்தில் 90 தங்கக் காசுகள் தானம் அளித்தார்’ என, கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டு. பொதுவாக வணிகர்களை நாட்டார் என்று கூறுவது வழக்கம். மேலும், “அவர்களுக்கு ஒரு குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு, நாட்டார் மங்கலம் என்ற பெயரில் அக்காலத்தில் வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டார் மங்கலத்தில் ஆயிரவர் என்ற வணிகக்குழு நிரந்தரமாகத் தங்கி இருந்தது’ என்ற தகவலும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.பழங்காலத்தில் ஐநூற்றுவர், எழுநூற்றுவர், ஆயிரவர் என்ற பெயர்களில் பல வணிகக் குழுக்கள் இருந்ததை பல கல்வெட்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சோழர்கால ஆயிரவர் குழுவே, தற்போது ஆயிர வைசியர் என்று அழைக்கப்படுகிறது.
கொழுமம் பெருவழிப்பாதை என்ற வணிகப்பாதை, பழநி வழியே சென்றதால், வசதி கருதி, இக்குழுவினர் இங்கு தங்கியிருக்கலாம்.இந்த ஆயிரவர் குழுவினர், கி.பி.19ம் நூற்றாண்டில் பழநி அருகே பாலசமுத்திரம் பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி அமைத்துள்ளனர். இதை அங்குள்ள கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
thanks : thinamalar