ராஜராஜ சோழனின் பாட்டி ஊரான, திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில், ராஜராஜன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள், அவரது தாயின் வீரம் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இக்கல்வெட்டு இடம்பெற உள்ளது. ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவன் ராஜராஜ சோழன். இவனது புகழை தஞ்சை பெரிய கோவில் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ராஜராஜ சோழன் பிறந்து வளர்ந்து, விளையாடிய ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர். இந்த அரிய தகவல்கள் திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள கல்வெட்டில் தெளிவாக வரையப்பட்டுள்ளன.
ராஜராஜனின் தாய் வானமாதேவி திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர சோழனுக்கு வானமாதேவியை மணமுடித்து கொடுத்தனர். ராஜராஜ சோழன் பிறந்து இரண்டு வயது வரை இங்குதான் தங்கியிருந்தார் என்பது வரலாறு.
இதுகுறித்த அரிய தகவல்கள், ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள் பற்றிய தகவல்கள் கருவறை சுவற்றில் உள்ள கல்வெட்டில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவனது தாயின் பெருமைகள் அடங்கிய கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் கணவர் சுந்தரசோழன் இறந்தார் என்ற தகவல் அறிந்த வானமாதேவி கணவனுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறி உயிர் நீத்தார் என்ற தகவல் அடங்கிய கல்வெட்டு தான் அது. இதனை தொல்லியல் துறையினர் தஞ்சாவூரில் நடைபெறும் ஆயிரமாவது ஆண்டு விழாவில் வைப்பதற்காக படியெடுத்துச் சென்றுள்ளனர்.
….