வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே – முதுகுளத்தூ​ர் பயங்கரம்

எதிர்வினை

மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை
மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்” என்று தெளிவுபடுத்துகிறார். “இன்று நடப்பது அரசியல்ரீதியான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கையொப்பம் இட்டு அறிக்கை கொடுப்பதே பொருத்தம்; நாளைக்குப் பொதுப் பேச்சுவார்த்தை என்று கூட்டி அதில் யார் யார் அக்கறையும் ஆர்வமும் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாரும் கையொப்பம் இடுவோம்; அறிக்கை கொடுப்போம்” என்பதே தேவரின் நிலைப்பாடாக இருந்தது. அன்று நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் ஆவணமும் வழக்குமன்றத்தில் தேவர் அளித்த வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. உண்மைகளும் நடந்த நிகழ்ச்சிகளும் இவ்வாறு இருக்க, நூல் மதிப்புரையில் ஆசிரியர், “மறவர்கள் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டார்” என்று எப்படி எழுதினார் எனத் தெரியவில்லை. நூலாசிரியருக்குச் சார்பு நிலை இருக்கலாம்; சார்புநிலை இருப்பதால் தானே ஒரு நூலை எழுதுகிறார். ஆனால், மதிப்பீடு செய்கிறவருக்கு ஏன் சார்புநிலை? அல்லது ஏன் கவனமின்மை?

 

முதுகுளத்தூர் கலவரம் பற்றி, ஒருசார்பான நூல்களும் கருத்துகளுமே வந்துகொண்டிருக்கின்றன. இவை உண்மையை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை. முதுகுளத்தூர் கலவரம் குறித்து எழுதும் போதெல்லாம் தேவரை விமர்சித்து, சாதித் தலைவர் என்று சாயம்பூசி, தவறான அடையாளங்களைக் காட்டுவதால் கலவரத்தின் சரியான பின்னணி என்ன என்பது கண்டுணரப்படாமலே போய்விடுகிறது. இது சாதிக் கலவரம் அல்ல; தேவரின் அரசியல் புகழை, வெற்றிகளை மாசுபடுத்த உருவாக்கப்பட்ட “அரசியல் கலவரம்” என்று ஆராய்ந்து எழுதினால், அது, தோழர் இமானுவேல் சேகரனின் படுகொலையை நியாயப்படுத்துவதாக ஆகிவிடாது. தோழர் சேகரனின் படுகொலை படுமோசமான நிகழ்வு; ஏற்றுக்கொள்ளவே முடியாத பயங்கரம். வரலாற்றை ஆராய்கிறவர்கள் இது ஏதோ தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள்மீது முக்குலத்து மக்கள் கிளர்ந்து நடத்திய சாதிக்கலவரம் என்று மட்டுமே அணுகிப் பார்க்கும்போது பல உண்மைகள் மறைந்துவிடுகின்றன; பல கேள்விகளுக்கு விடையும் கிடைப்பதாக இல்லை. காஷ்மீர் பிரச்சினை, நேதாஜி மரணம், காமன்வெல்த் வலையில் இந்தியா சிக்கிக்கொண்டிருப்பது போன்றவை குறித்தும், அமெரிக்க, ஆங்கில ஏகாதிபத்தியங்களின் ‘செல்லப்பிள்ளை’யாகவே பண்டித நேரு நடந்துகொள்கிறாரே என்றும் தேவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் நிகழ்த்திய பேருரைகள் ஆளும் காங்கிரஸ்காரர்களை அச்சத்தில் ஆழ்த்தின. நேருவின் விசுவாசிகளுக்கு, விசுவாசமாக இருந்தால் பதவிகளில் தொடரலாம் என்று ஆசைப்படுகிறவர்களுக்குத் தேவரின் அனல் பேச்சுகள் உவப்பாயில்லை. தேவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பார்க்கும்போது அவரை நாடாளுமன்றத்தில் நுழையவிடாமல் தடுக்க முடியாது என்று உணர்ந்த அன்றைய ஆளும் காங்கிரஸ், வேறு ஒரு மாற்று வழி பற்றி யோசித்தது. அதுதான் சாதிச்சாயம் பூசப்பட்ட, தேவரை அதில் வம்புக்கு இழுத்த ‘முதுகுளத்தூர் கலவரம்’ என்ற அவல நாடகம்.

தாழ்த்தப்பட்ட தோழர்கள், பெருமக்கள் பல விஷயங்களைப் பரிசீலித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். என்னதான் காங்கிரஸ் பேரியக்கம் சோஷலிஸம், சமத்துவம் பேசினாலும் அது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ இயக்கமே. பல நேரங்களில் அண்ணல் காந்தியடிகளையே மறுதலித்த இயக்கம்; பெருந்தலைவர் காமராஜர் பதவியிலிருந்து விலகியபோது, அந்த இடத்தில், எல்லா வகையிலும் மாண்புகள் நிறைந்த, எளிமையின் ஏந்தலாக வாழ்ந்து காட்டிய கக்கன்ஜியை வைத்து அழகுபார்க்க நினைக்காத இயக்கம். பாமர மக்களுடன் தொடர்பு இல்லாதவரும் வெறும் ‘கோப்புகளு’டன் மட்டுமே தொடர்புகொண்டிருந்தவருமான பெரியவர் பக்தவச்சலத்தை உட்கார வைத்த இயக்கம்; அதனாலேயே மீள முடியாத பெரிய சரிவை ஏற்படுத்திக்கொண்ட இயக்கம். மதுரை விமான நிலையத்துக்கும் மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்துக்கும் தேவரின் பெயர் வைக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தவுடன், அதற்குப் போட்டியாகத் தோழர் சேகரனின் பெயர் வைக்க வேண்டும் என்று அறிக்கைவிடுவது மேலும் மேலும் பிளவைத்தான் உருவாக்கும். யாரோ சில அரசியல் புதுக்கட்சிப் பிரமுகர்களின் ஆர்ப்பாட்ட, அவசர அறிக்கைகளுக்குள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல், சார்புநிலைப்படாமல், நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும். நடுநிலைச் சிந்தனைதான் நாட்டின் நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும். தாய்நாடுதான் நமக்குப் பெரிது; ‘தலைவர்கள்’ அதற்குப் பின்னர்தான்!
Ref: http://www.kalachuvadu.com/issue-107/page67.asp
Unarvudan,
Thaniyan.

….

This entry was posted in கலவரம். Bookmark the permalink.

3 Responses to வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே – முதுகுளத்தூ​ர் பயங்கரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *