தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அடஞ்சூரில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆர்வலர்கள் மன்னை ராஜகோபால சாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயில் கர்ப்பக்கிரக கதவின் இடது மற்றும் வலது புற கருங்கல் நிலைகளில் காணப்படும் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கல்வெட்டுகள் முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகனாகிய முதலாம் ராஜராஜன் கால கல்வெட்டுகள் என்பது தெரியவந்தது. கல்வெட்டில் உள்ள மங்களவாசகத்தை அறிய முடியாத நிலையில் பாண்டியன் தலையும், சேரலஞ்சாலையும், இலங்கையும் தண்டாற்கொண்ட கோப்பரகேசரி பன்மரான கோ ராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு பத்தாவது என தொடங்குகிறது.
இதுகுறித்து உதவி பேராசிரியர் கண்ணதாசன் கூறுகையில், ‘ராஜராஜ சோழன் கல்வெட்டுகளில் கல்யாணபுரம் எறிந்த விஜயராஜேந்திரன் என்ற பட்டமும் உடையாளூரில் காணும் கல்வெட்டில் ராஜேந்திர ராஜாதி ராஜன் என்றும் காணப்படுவதால் இப்பட்டங்களை தந்தையின் மீது கொண்ட பற்றினால் ராஜராஜ சோழன் சூடி கொண்டுள்ளதை அறிய முடிகிறது’’ என்றார்.
நன்றி : தினகரன்