காஞ்சீபுரம் விசுவநாத முதலியாருக்கும் பூச்சியம்மாள் என்பவருக்கும் பெரியபாளையத்தில் 1754 ஆம் ஆண்டு பச்சையப்பர் பிறந்தார். பிறக்கு முன்னரே தந்தையாரை இழந்தார். ஆர்க்காடு சுபேதாரின் காரியக்காரராக இருந்த ரெட்டிராயரிடம் ஐந்து வயது வரை வளர்ந்தார். இராயர் மரணமடைந்தவுடன் பூச்சியம்மாள் ஐந்து வயது பச்சையப்பரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து சென்னைக் கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமிமேஸ்திரி தெருவில் உள்ள ஒரு சிறு சந்து வீட்டில் குடியேறினார்.
பூச்சியம்மாள் நெய்த வாயல் பெளனி நாராயண பிள்ளையிடம் சென்று ஆதரிக்க வேண்டினார். துவிபாஷியான அவரிடம் ஆங்கிலம் கற்ற பச்சையப்பர் பீங்கான் கடையில் வேலைக்குச் சேர்ந்து பொருள் வாங்கவரும் ஐரோப்பியர்கட்குத் துவிபாஷியானார். பின் நிக்கல்ஸ் என்ற ஆங்கில அதிகாரியிடம் துவிபாஷியாக இருந்தார். பின் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு துவிபாஷியானார்.
மிகப்பெரும் பொருள் சேர்த்தார். சகோதரியார் சுப்பம்மாள் மகள் ஜயம்மாளை மணந்தார். வாரிசு இல்லாத பச்சையப்பர் 1794 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் நாள் காலமானார். அப்போது இவர் சொத்து 42080ரூ பெறுமான கம்பெனிப் பத்திரங்களும், 200000 ரூபாயுமாகும். கோர்ட்டில் 47 ஆண்டுகள் இருந்த இப்பணம் பின் 447267 ரூபாயாயிற்று.
பச்சையப்பர் உயில்படி பல கோயில்கட்குக் கொடை கொடுக்கப்பட்ட பின் அவர் விருப்பப்படி ‘வித்யாசாலை’ ஏற்படுத்தப்பட்டது. அதுவே இன்று பச்சையப்பர் பெயரில் பல நிறுவனங்களாக ஆலமரம் போல் படர்ந்துள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே ‘வித்யாசாலை’ பற்றிய கல்வெட்டு உள்ளது.
‘மேற்படி லட்சம் வராகன் போக மற்ற மிகுதிப் பணத்துக்கு வரப்பட்ட வட்டியில் அனுகூலமாகும்போது மேற்படி இடத்தில் இந்துப் பிள்ளைகளுக்கு இந்த தேசத்தில் வழங்காநின்ற விவகார சாஸ்திரங்கள் கற்பிக்கிறதற்கு மாதம் ஒன்றுக்கு 10 வராகன் சம்பளத்தில் ஒரு பண்டிதரையும், இங்கிலீஸ் பாஷை கற்பிக்கிறதற்கு 5 வராகன் சம்பளத்தில் ஒரு உபாத்தியாயரையும் நியமித்து வித்தியாசாலை யேற்படுத்தப்படும்’ என்பது அக்கல்வெட்டின் ஒரு பகுதியாகும்.