வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு மக்களுக்கு கிடைப்பதில் பெருந் தடை ஏற்படுகிறது.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மறவரின் அடிமடியிலேயே கை வைக்கும் போக்குகள்தான் தற்காலத்தில் இணையதள வரலாறு பேசும் முட்டாள்களின் கை வண்ணமாக திகழ்ந்து வருகிறது.
•சேந்தன்குடி சின்ன வன்னியனார்•
“சின்ன வன்னியனார் பணவிடு தூது” என்று ஒரு சிற்றிலக்கியம். இது தூது நூல்கள் வரிசையில், பணத்தைத் தூதாக விடும் பணவிடு தூது எனும் வகையைச் சேர்ந்தது. இந்த வகை தூது இலக்கியங்கள் பல கடவுள்கள், சிற்றரசுகள், செல்வந்தர்கள் மீது பாடப்பட்டவை. அந்த வகையில் மேற்கண்ட தூது நூலில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவரவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த பெத்த பெருமாள் எனும் கலங்காப் புலியின் வழியில் வந்த சிவந்த பெருமாள் மீது பாடப்பட்டதுதான் சின்ன வன்னியனார் பணவிடு தூது.
இந்த செய்தியை தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள் தொகுத்த சுவடியில் உள்ள சின்ன வன்னியனார் பணவிடு தூது எனும் தலைப்பில் அமைந்த பனையோலைச் சுவடியின் முன் பக்கத்தில் உள்ள ஏட்டிலேயே இச் சுவடி, வழுவாட்டி ஜமீன், புதுக்கோட்டை, மிதிலைப்பட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கூட இந்த மூடர்கள் சரியாகப் பார்க்கவில்லை. இதன் மூலம் அறியும் செய்தி என்னவென்றால்… இந்த சுவடி, வழுவாட்டித்தேவரவர்களின் சேந்தன்குடி பாளையத்துக்குரியது, இது புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த மிதிலைப்பட்டி சூரிய நாராயண கவி என்பவரால் பாடப்பட்டது என்பதாகும். மூன்று பணவிடு தூது எனும் நூலில் மேற்கண்ட நூலைத் தவிர, மற்ற இரு நூல்களில் ஒன்று, முத்துவிஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவிராயரால் பாடப்பட்ட பணவிடு தூது, மற்றொரு நூல், புல்லைக் குமரேசர் பணவிடு தூது எனும் புல்வயல் ஊரில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது பாடப்பட்டதாகும்.
இவை எதையும் அறியாமல் வன்னியனார் என்று வந்துவிட்டது ஆகவே அது எங்கள் வன்னியர் சாதி என்று குதூகலம் அடைவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சொல்ல வேண்டியதில்லை!
• பெத்த பெருமாள் வழி•
இந்த சின்ன வன்னியனார் பணவிடு தூது நூலில், பாட்டுத் தலைவனின் முன்னோனாக ” பெத்த பெருமாள்” என்பவன் கூறப்படுகிறான். இந்த பெத்த பெருமாள் யார் என்றால், சேந்தன்குடி வழுவாட்டித் தேவர்களின் முன்னோரில் ஒருவன். இவனைப் பற்றி சுவடியின் 44 வது கண்ணியில் வரும் … ” நீர்முடிமேல் வைத்த பெருமாள் வரத்தினால் அம் மரபில் பெத்த பெருமாள் பிறந்திடினும்” எனும் வரியால் அறியலாம்.
•வன்னியர் யார் •
நாம் பல காலங்களாக கூறுவது.. வன்னியர் என்பது பள்ளி வன்னியர் மட்டுமல்ல… மறவர், கள்ளர், அகம்படியர் எனும் தேவமார்களுக்கும், வேட்டுவர், வலையர், இருளர், காடர், பளியர் எனும் பழங்குடிகளுக்கும் பயின்று வந்த பெயராகும். அதிலும் குறிப்பாக வன்னியனார் – வன்னியன் என்பது ஆதி நாளில் மறவரின் மற்றொரு பெயர் என்பதைத் தக்க தரவுகளுடன் அடிக்கடி நிரூபித்தும் வந்திருக்கிறோம்.
மறக்குலத்து சூரைக்குடி விசையாலயத்தேவனே “வன்னியனார்” என்று முதலில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவன், இவன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன், அடுத்ததாக ” இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிய மிண்டன்”- எனும் கல்வெட்டும் புதுக்கோட்டை மாநில கல்வெட்டுகளில் ஒன்றாகும். ஏறத்தாழ தங்களது எல்லாச் செப்பேடுகளிலும், வன்னியன், சொரி வன்னியன், சொரி வன்னிய சூரியன், என்று ராமநாதபுரம் சேதுபதிகளும், சிவகங்கை கௌரி வல்லபர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். தவிர, மறவர் பாளையக்காரர்களான, சிவகிரி, அழகாபுரி, ஏழாயிரம் பண்ணை, தலைவன் கோட்டை, கடம்பூர், ஊத்துமலை, வடகரை ஆகியோருக்கும் வன்னியர் என்று மாற்றுப் பெயர் உள்ளதையும் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.
சரி அதெல்லாம் போகட்டும்… இப்போது இந்த வழுவாட்டித்தேவர்கள் யார் என்பதைப் பார்ப்போம், ஏற்கனவே நாம் வழுவாட்டித் தேவர் வரலாறு எனும் தலைப்பில் நமது பக்கங்களில் அந்த ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களே எழுதிய நூலின் விவரங்களையும், அதிலுள்ள செய்திகளையும் பதிந்திருக்கிறோம். இருப்பினும் மீண்டும் ஒரு முறை இதைப் பதிவு செய்கிறோம்.
•வழுவாட்டித் தேவர் மரபும் சாதியும் •
“சேந்தன்குடி வழுவாட்டி பாளையக்காரர் வரலாறு” எனும் தலைப்பில் ‘சேந்தன்குடி ஜமீன். திரு. செந்தமிழ் புலவர், அ.சுப்புராம செல்வ முத்துத் துரைத் தேவர் அவர்களால்’ எழுதப்பட்டு, அரங்க. பொன்னுசாமி MA., M, Lit.,Dip, மானிடவியல்,( அருங்காட்சியக காப்பாளர், தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) அவர்களால் வெளியிடப்பட்ட நூலில், இந்த ஜமீன்தார்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தென் மாவட்டத்தின் வடமலை, சிவகிரி, குற்றாலம்,பகுநிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் செய்திகளை கருவூர்சாமி என்பவர் எழுதி வைத்திருந்த பனையோலை மற்றும் அவரின் முன்னோரான சின்னண்ணத் தேவர் எழுதிய பனையோலை ஆகியவற்றின் மூலமாக அறிந்து கொண்டதையும் கூறி, தங்களின் முன்னோர்கள் முருகப்பத்தேவன், பழனிவேல்தேவன் முதலாக, கடைசி ஜமீன்தார் வரையிலும் தெள்ளத் தெளிவாக வம்சாவளி பட்டியலுடன் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சுவடியில் வன்னியன், வன்னிய குலம் என்று மட்டுமல்ல!…
“மறவர் குல திலகன் “- என்றும் வருகிறது. ( கண்ணி: 15)
இந்த சுவடி நூலின் படி,
1. முருகப்பதேவன், ( மைசூரின் கீழ் அரசெய்தியவன்)
2. பழனிவேல் தேவன் (அரசு துறந்து சென்றவன்)
3. கந்தசாமித் தேவன் (தாய்மாமன் மகளை மணந்தவன்)
4. அருணாசலத் தேவன் ( கேரள மன்னன் மகள் சிவகாமியை காதல் மணம் புரிந்தவன்)
5. வேலரசுத் தேவன்
6. தங்கவேல் தேவன்( கேரள இளவரசிக்குப் பிறந்தவன்)
7. குமாரவேல்தேவன் ( வேலரசுத் தேவன் மகன்)
8. சுப்பையாத் தேவன் (குமாரவேல் தேவன் மகன்)
9. முத்துத்துரைத் தேவன் ( சுப்பையாத் தேவன் மகன்)
10. குழந்தைத்தேவன் ( முத்துத் துரைத் தேவர் மகன், )
11. சாமித்தேவன் ( அருணாசலத் தொண்டைமான் மகளை மணந்தவன்)
12. வீராத்தேவன் ( முன்னோர் பூமி குற்றாலம் சென்றவன், சூரன்விடுதி கண்ணுச்சாமி தொண்டைமான் மகளை மணந்தவன்)
13. அப்புத்தேவன் ( சிதம்பரம் சென்று வாழ்ந்தவன், முத்துத் தொண்டைமான் மகளை மணந்தவன்)
14. விசயத்தேவன் ( சேந்தமங்கலம் எனும் ஊரைச் சேந்தன்குடி என்று மாற்றியவன், பூச்சைய நாயக்கர் மகள் பொட்டம்மையையும், இந்திர குலக் கள்ளர் மழவராயர் மகள் ராஜம்மாளையும் மணந்தவர், சேதுபதி மேலாண்மையின் கீழ் ஆண்டவன்)
15.வாசு தேவன் எனும் வேலரசுத் தேவன் ( விசயத்தேவனுக்கு பூச்சைய நாயக்கர் மகள் மூலம் பிறந்த மகன்)
16. ரெகுநாதத் தேவன் ( விசையத் தேவனுக்கு பட்டு மழவராயர் மகள் மூலம் பிறந்த மகன்)
17. முருகப்ப தேவன்
18. வீராத்தேவன்
19. மன்னன் வழுவாட்டித் தேவன் ( சேதுபதியுடன் முரண்பட்டவன், பின்னர் அவரிடம் வணங்காமுடி பட்டம் பெற்று, அவரின் சேர்வைக்காரர் ஆனவன், தஞ்சை மன்னரிடம் பரிசு பெற்றவன்)
20. ரகுநாதத் தேவன்
21. ராமசாமித்தேவன்
22. பெத்த பெருமாள் ( ரகுநாத தேவர் மகன்)
23. ரகுநாத தேவன் ( தஞ்சை மன்னன் துளசா ஜி யிடம் சேர்வை பட்டம் பெற்றார்)
24. சிவந்த பெருமாள் ( பெத்த பெருமாள் மகன்)
25. பெரிய நயினான்
26. வீரப் பெருமாள் தேவன்
27. சின்னச்சாமி தேவன்
28. ரெகுநாதத் தேவன்
29. அருணாசலத் தேவன்
30. கூத்தைய வழுவாட்டித் தேவன்
31. அருணாசலத் தேவன்
32. சின்னச்சாமி தேவன்
33. விஜயரெகுநாதத் தேவன்
34. துரைச்சாமித் தேவன்
35. அருணாசல வணங்காமுடி வழுவாட்டித் தேவன் ( சேர்வைக்காரர் மாப்பிள்ளைத் துரையின் சகோதரி அலர்மேலுவை மணந்தவன்)
36. கருப்பண்ணத் தேவன்
37. மேகவர்ணத்தேவன்
38. முத்துத்துரைத்தேவன்
39. சுப்பிரமணிய வணங்காமுடி வழுவாட்டித் தேவன்
40. சத்துரு சங்கார வேல்சாமித் தேவன்
41. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்
42. சுப்புராமச் சந்திரத் துரை தேவன்
43. தங்கம்மாள் ஆயியார்
44. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்
45. சிவகாமி ஆயியார்
46. குமாரசாமி சேர்வைக்காரர்
47. சிங்கமுத்து வழுவாட்டித் தேவர்
– என நீண்ட பட்டியல் உள்ளது.
இவர்களில் சிலர் சேர்வை எனும் பட்டம் பெற்ற காரணமாக அகம்படியர் என்று சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும், கள்ளர் குலத்தில் பெண் கொண்டதால் கள்ளர் எனவும் சிலர் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும் அவர்கள் நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். மேலும் வலையர் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தங்கள் ராஜ்யத்தை அமைத்து வாழ்ந்ததால் தங்களை பொதுப்பெயரான முத்தரையர் என்ற வகையில் அடக்க முயற்சிகள் நடந்ததையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்களில் குழந்தைத் தேவன் எவ்விதம் தந்திரமாகச் செயல்பட்டு அரசோச்சினான் என்பதை,..
” தானாண்மை நாட்டாரை தந்திரத்தால் தாமடக்கி யாறிலொரு கடமை வாங்கி” – எனும் வரிகள் விவரிக்கும்.
சின்ன வன்னியனார் பணவிடு தூதில், அவனைச் “சின்ன வேந்திரன்” – என்றும் ( 317 வது கண்ணி)
“காவலரில் போசன் நளராசன் ” – என்றும் ( 21-22 கண்ணிகள்)
” பானுநிகர் உக்கிர பிரதாப நளன் “- என்றும் ( 26 வது கண்ணி)
” பொதிய மலை தான் பெற்றோன் ” – என்றும் ( கண்ணி – 13)
என வரும் வரிகள் மறக்குலத்து சொக்கம்பட்டி மன்னருக்கு வரும்” நளச் சக்கரவர்த்தி வம்ச பாரம்பரை” பொதியமலையுடயவன், – என்பவனற்றோடு பொருந்திச் செல்கிறது. மேற்கண்ட மறக்குல மன்னர் திரிவுனச் சக்கரவர்த்தி வழியில் வந்த பாண்டிய வழித் தோன்றல் என சின்னனேந்திரன் செப்பேடு கூறுவதைப் போலவே இங்கும் சின்ன வன்னியனாரை ” தென்னர் குல தீபா” சந்த்ர குல திலகன் – பாண்ட்ய குல சந்ததியான் என்கிறது. இந்த சந்திர குல திலகன் என்று சிவகங்கை மன்னர்களும் செப்பேடுகளிலும், சிற்றிலக்கியங்களிலும் பயின்று வருகிறார்கள். மேலும் முத்தாய்ப்பாக…. ” அஞ்சுநாடாளும் அனபாயன்” (கண்ணி- 15) என்று சின்ன வன்னியனார் குறிப்பிடப்படுகிறார். இது மறவர் குலத்து அஞ்சுகோட்டை நாடாழ்வார்களையும், சிங்கம்புணரி ஐந்துநிலை நாட்டு மறவர்களையும் எண்ணும் விதமாக அமைந்துள்ளது.
கூடுதலாக… பழனியிலிருந்து வன்னியர் பெண்களை மணம்புரிந்து வந்ததாக வழுவாட்டித்தேவர் குடும்ப வரலாறு கூறுகிறது. பழனியில் வசிக்கும் திரு. சந்தனத்துரை எனும் மறவரிடம் ” வணங்காமுடி வன்னிய மறவர்” எனும் சாதிப் பெயரில் பொ.யு 1891 லிருந்து பத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முத்திரைத்தாள் பத்திரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வணங்காமுடி எனும் பெயரில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவர் வம்சமும் தொடர்ந்து அழைக்கப்பட்டதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆக… இங்கு ‘எனது சம்பந்தி உறவுகளான’ பள்ளி வன்னியர் சமூகத்திற்கும் இங்கு குறிப்பிட்ட சின்ன வன்னியனார் எனும் மறவர் சமூகத்திற்கும் (என் போன்ற சிலரைத் தவிர) எந்த வகையிலும் சிறிதும் சம்பந்தமே இல்லை என்று தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி! வணக்கம் .
Our special Thanks to, திரு . உத்திராடம் அவர்கள். உ.வே.சா. நூலகம், சென்னை.
துணை நூல்கள்.
1. மூன்று பணவிடு தூது.
2. தானாண்மை நாட்டு வரலாறு
3. சேந்தன்குடி பாளையக்காரர் வழுவாட்டித் தேவர் வரலாறு
4. சேந்தன்குடி மாவீரன் வில்லன் சேர்வைக்காரர் பாடல்.
5. பழனி வணங்காமுடி வன்னிய மறவர் பத்திரங்கள். ( சேகரிப்பு)