சோழர் காலம் (கி.பி. 10 கி.பி. 13)
பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது.
இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர்.
மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.
கலை இலக்கியம்
சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.
சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.
ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.
சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.
சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.
கிராமசபை
சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது.
அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும்.
இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.
பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.
சமூகம்
சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.
இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.
பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர்.
கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர்.
சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன.
பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.
தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.
ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.
அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன.
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன.
நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.
சமயம்
சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது.
பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன.
மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர்.
சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.
தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.
…..