தமிழ்ச் சமூக வரலாறு -2

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர்.

இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.
பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர்.

பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர்.

இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை

பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து).

கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.
பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார்.

பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று.

பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

…..

This entry was posted in வரலாறு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *