1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை நேரு,தேவரிடம் தூது அனுப்பினார் . பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக தேவர் விரும்பும் பதவியை மத்தியிலோ,மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும் சீலபத்ரயாஜி ,தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .
சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை .மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார் .
உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார் .
அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி,அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார் ,
கேப்டன் மோகன் சிங் அறிக்கைக்கு உடனே மறுப்பு அறிக்கை தேவர் கொடுத்தார் .அதில் ,பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரசில் இணையவில்லை என்றும் ,எப்போதும் போல் பார்வர்ட் பிளாக் தனித்து இயங்குகிறது என்றும் ,கேப்டன் மோகன்சிங் அவரோடு சேர்ந்த சில விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் காங்கிரசில் சேர்ந்தார்களே தவிர ,பார்வர்ட் பிளாக் காங்கிரசோடு இணையவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருந்தார் .
டில்லிக்கு சென்று மத்தியக் கமிட்டியைக் கூட்டி , அன்றைக்கு அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஹேமந்தகுமார் பாசுவே தலைவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தி,தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்று கூறி,துணைத்தலைவர் ஆனார் தேவர் .ஹேமந்தகுமார்பாசு தலைவர் ஆனார் .
காங்கிரசோடு பார்வர்ட் பிளாக் கட்சியை இணைத்து விடவேண்டுமென்று நேரு செய்த முயற்சியை முறியடித்து ,அன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தனித்தன்மையை காப்பாற்றி ,நேதாஜியால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அழியவிடாமல் பாதுகாத்தார் தேவர்.