அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-
’’இந்த மாநாட்டுக்கு குழந்தைகளோடு வந்திருக்கும் தமிழ் பெற்றோரை பாராட்டுகிறேன். தமிழை அறியாவிட்டால், இந்த குழந்தைகள் நாளை உங்கள் குழந்தைகள் அல்ல. எனவே உங்கள் குழந்தைகளுக்கு முழு உணர்வோடு தமிழை கற்றுக்கொடுங்கள்.
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை, இந்த மாநாட்டில் கொண்டாடியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் ஒரு காட்டாறு. அதை அணை கட்டி தேக்கி, கடைசி தமிழனின் நிலத்துக்கு கால்வாயாக கொண்டு வந்த பெருமை, அறிஞர் அண்ணாவுக்கு உண்டு.
தமிழர்கள் தங்கள் முன்னோடிகளை மறந்து விடக்கூடாது. கலைவாணர் நூற்றாண்டையும், பசும்பொன் தேவர் திருமகன் நூற்றாண்டையும் நீங்கள் கொண்டாடி இருக்க வேண்டும்.
நகைச்சுவையை பகுத்தறிவுக்கு பயன்படுத்த முடியும் என்று காட்டிய முதல் கலைஞர், கலைவாணர்.தேவர் திருமகனார் பர்மாவுக்கு சென்றபோது, புத்த துறவிகள் அவருக்கு கறுப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். அதாவது, பெண்கள் தரையில் படுத்துக்கொள்ள, அவர்கள் தங்கள் கூந்தலை கம்பளமாய் விரிக்க, அதன் மீது நடந்து வருமாறு, தேவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இதைக்கண்டு பதறிப்போன திருமகனார், “பெண்களை கடவுள் போன்று கும்பிடுகிற தமிழகத்தில் இருந்து வந்தவன் நான்” என்று சொல்லி மறுத்து விட்டார். அந்த பண்பாடு, இன்றைய தலைமுறைக்கு புரிந்தாக வேண்டும்’’என்று பேசினார்.
….