ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.

அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு statementன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.

பல தெய்வ உருவங்களை வைத்து வணங்குகிற மக்களுக்கு, ஒரு தெய்வம் தான் உண்டு என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.

ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார்.

அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா? (கைதட்டல்). அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?

முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம். அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம்.

அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.

அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம். ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.

அதே போல் பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக – உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம். இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”

மூலம்: பசும்பொன் களஞ்சியம்

This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *