மருதுபாண்டியர் ஆக்கிரமித்துக் கொண்டனரா?

‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூல் எழுதியுள்ளார் ம.போ.சி. அவர்கள. அதில் சின்ன மறவர் நாட்டின் செங்கதிராகத் திகழ்ந்த மான மறத்தமிழ் மாமன்னர் மருதுபாண்டியர்களையும் குறை கூறாமல் விட்டு விடவில்லை.
வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம்.
ம.போ.சி கூறியதாவது:
“முத்துவடுகநாதர் ஒரு போரில் வீரமரணம் அடைந்தார். களத்திலே அவருடைய வீர மனைவி வேலுநாச்சியாரும், தளபதிகளான மருதுபாண்டியர்களும் இருந்தும் அவரைக் காப்பாற்ற தவறிவிட்டனர்”
இவ்வாறு உறுதியாகச் சான்று கூறிய ம.போ.சி அவர்கள்.
மேலும் தொடர்கிறார்:-
“அவர் மனைவி வேலுநாச்சியார் சிவகங்கைப் பாளையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். வேலுநாச்சியார் திடீரென்று மரணமுற்றதும் அதுவரை தளபதியாக இருந்துவந்த மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்”

என்று தமது நூலின் பக்.62 ல் குருப்பிட்டுள்ளார். இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ம.போ.சி. அவர்கள் தமது நூலின் முன்னுரை பக்.6 ல் கூறிய கருத்துக்களுக்கும், வரிவடிவில் தீட்டிய பக்.62  க்கும் என்ன தகுதி இருக்கின்றது. எந்த அடிப்படையில் இதை எடுத்துக் கொள்வது. குழப்பத்தையே உண்டாக்குகின்றதே தவிர வரலாறு காண முடியவில்லை.
“வேலுநாச்சியார் திடீரென்று மரணமுற்றதும், மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்” என்கிறார் ம.போ.சி.
எட்டு ஆண்டுகள் அரியணையில் இருந்தவர் வேலுநாச்சியார் அவர்கள். யானைமலை, திண்டுக்கல் வாழ்வு என்னாயிற்று? உடன் இருந்தவர்கள் இருந்தவர்கள் மருதுபாண்டியர்கள். ஆக்கிரமிப்பு நடந்தது எப்போது?
மேலும் “உயிரை காப்பாற்ற தவறி விட்டனர்” என்று எழுதியுள்ளார் .
மாற்றானுக்கு ஒரு அங்குல இடம்கூட தரமாட்டேன் என்று உரிமை முழக்கமிட்டு களம் புகுந்தவர் மன்னர் முத்து வடுகநாத தேவர்.

தளபதிகளாக இருந்த மருதுபாண்டியர்கள் கச்சை வரிந்து கட்டிக்கொண்டு கையில் வாளெடுத்து காலத்திலே வெள்ளையர் தலைகளை வெட்டி வீழ்த்துவதிலேயே முன்னணி சென்றவர்கள்.

வாளையும் கையையும் மடக்கி கொண்டு, வெண்கவரி வீசிக்கொண்டு  பதுமை போல் முத்துவடுகநாதரின் பின் சென்றவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் – “தேவர் முரசு” மார்ச்சு 86 குறிப்பு.

கூலிப்படையின் வஞ்சகத்தால் சின்ன மருது சிக்கிக்கொண்டார்.
பெரிய மருதுவை கைது செய்ய முடிந்ததா?
அவர் கையில் விலங்கு பூட்ட முடிந்ததா?
கோழை போல்  அவரை தூக்கில் வெள்ளையர் கையால் தொங்கவிட முடிந்ததா?
இத்தகு வரலாற்று சிறப்புப் பெற்ற மான மறத்தமிழ் மன்னர் மருதுபண்டியர்களுக்கும் வேலுநாச்சியாருக்கும் களங்கத்தை உருவாக்க வேண்டும் என்று கூலிப்படைகள், வெள்ளைப்படைகள் செய்த சதித் திட்டங்களை போன்று நழுவவிடாமல் ம.போ.சி. அவர்களும் களங்கத்தை உருவாக்கி அதை வரலாறு என்றும் அதை உறுதிப்படுத்தி கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி தான் மேலே குறிப்பிட்டுள்ள அவர் எழுதிய வரிகள்.
நாடு மொழி, இனம் என்றும் முப்பிரிவிற்கும் உரிமையான மறத்தமிழ் மன்னர், மக்கள் எல்லாம் அவர்களை மருதீசர், மருதேந்திரன், மருதுபூபதி என்று தங்களது இதயத்தில் தெய்வமாக வைத்து வணங்கி வந்தனர், வருகின்றனர்.
சாந்து சக்கரைப் புலவர் இயற்றிய தர்க்கயாகப் பரணியின் 18 பாடல்கள் இதற்கு சான்றாகும். வெள்ளையர்களை மட்டும் எதிர்த்து வீரமுழக்கமிட்டு, மாற்றான் டச்சுக்காரனின் காலடி பணிந்து பணத்தை சேர்த்துக் கொண்ட மாவீரர்கள் (கட்டபொம்மன் போல்) அல்ல மருதுபாண்டியர்கள்.
தன்னுயிர் காக்க மட்டுமல்ல, நாட்டின் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்தவர்கள். சுயநலம் பறிபோகிறது என்பதற்காக அவர்கள் வெள்ளையர்களை எதிர்த்த மாவீரர்களும் அல்ல.
தஞ்சமென்று வந்தவர்களுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து, அவரின் உயிர் காக்கப்பட தன்னையே அழித்துக் கொண்ட பார் வேந்தர் மருதுபாண்டியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
“மருது உன்னைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை நாங்கள். நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்துவிடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என்று தளபதி வேல்சு வேண்டினனே ஏன்? ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாலா?
மேலூர் கள்ளர்கள்:

வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? யார் முழங்கியது?
மயில்றாயன் கோட்டை, மேலூர் கள்ளர்களிடம் மதுரை நாயக்கர் அரசு வரிப் பணம் கேட்டு வந்தபோது அவர்கள் முழங்கிய வீர முழக்கங்களை தாங்கள் தான் முலங்கியதாகப் பெயர் பதிய வைத்துக் கொண்டவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள்.
மதுரை மாவட்ட விவரச்சுவடி பக்.88 ல் அறிஞர் பிரான்சிசு எடுத்துக்காட்டியுள்ளார்.
நிம்ராட்: பாபிலோனிய சக்கரவர்த்தி ‘நிம்ராட்’ என்பவன் உலகமகா வீரனாகத் திகழ்ந்தவன். அவனுக்கு இணையாக விளங்கியவர் மருதுபாண்டியர். கீழ்த்திசை நிம்ராட் என்று தளபதி வேல்சு பாராட்டியுள்ளான்.
மனுநீதிச் சோழனை காண விரும்புபவர்கள் அவனது அரண்மனை வாயிலில் கட்டி இருந்த பெரிய மணியை அசைத்துப் பின்னர் இசைவு பெற்றுத்தான் மன்னரைக் காணவேண்டும்.
ஆனால்…! மருதுபாண்டியர்கள் பற்றி வேல்சு கூறுகிறார்.

தென்றல் விளையாடி வந்த சீமையிலே சுழட்டி அடிக்கும் சூறாவளிப் புயலாக 1801ம் ஆண்டு மே திங்கள் ஊமைத்துரை உருவிலே வந்தது.
அகதியாக வந்து அடைக்க்கலாமானான் மருதுபாண்டியர்களிடம் என்பதை மறந்துவிடக் கூடாது.
வரலாறு:
இன்றைய நிகழ்ச்சி எதிர்கால வரலாறு, உண்மைச் செய்திகளை எடுத்தக் காட்டும் ஓர் காலக் கண்ணாடி ஆகும். அதுவும் கூட அன்றே கலப்படமாகி விட்டது!
“ஒருவருடைய வரலாறு எழுதப்பட வேண்டுமேயானால், அவர் மறைத்த பின்னர் தான் எழுதப்படவேண்டும். அவரோடு தொடர்பு கொண்டவர்கள் கல்விப்பயிற்சி முகுந்தவர்களால் தான் எழுதப்படவேண்டும். அது தான் உண்மையான வரலாறு ஆகும். பிற்காலத்தில் எழுதுவது என்பது பொய்யும், புனைந்துரையும் புகுத்து விடும்” என்பது பாம்பன் சுவாமிகளின் திருவாக்கு.
அதை முழுமையாக ஏற்றுக்கொண்ட ம.போ.சி. தமது நூலில் முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எழுத்து வரி வடிவிலே அமைக்கபடுகின்ற போது முழுமையாகவே தமது கருத்துக்களை புறக்கணித்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.
மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர் என்று உறுதியான எடுத்துக்காட்டு எந்த அடிப்படையில்? என்ன தகுதி? என்பது இளையோர்களது   கேள்வி? சொல்லித்தானே ஆகவேண்டும் பதில்!
ஏன்? என்ன காரணம்?
ம.போ.சி எழுதிய நூல் வரலாறு மட்டுமல்ல, தேசியச் சொத்து(!), தமிழத்தின் பங்கு. இதை மறந்துவிடக் கூடாது. பதில் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது.
எனவே, அவரது அணுகுமுறை, அவரது கருத்துக்களுக்கே மாறானதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. அந்த தேசிய தமிழகப் பங்கு நூலினால் விடுபட்டுப்போன செய்திகளை உரக்க சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது மறத்தமிழ் தேசிய மக்கள்.
எனவே, இந்திய தேசிய வரலாறு தமிழத்தின் பங்கு அல்ல என்பதை உறுதியாக எடுத்துக்காட்டுவது தவறாகாது.
இந்திய துணைக் கண்டத்திலேயே வழிகாட்டியாகவும், தமிழகத்தின் மிகப்பெரிய ஓர் தேசிய இனத்தின் உண்மை நிகழ்சிகளை ஆய்ந்து அதை நியாப் படுத்தி வெளியிட வேண்டிய கடமை தவறிய நூல் தேசிய வரலாறு ஆகுமோ?
இதை வரலாறு என்று ஏற்றுக் கொள்ளப்படுமேயானால்…?
எதிர்காலம் வரலாற்று ஆசிரியர் என்று எவரும் பெருமை பேச முடியுமோ? தமிழகம் மட்டுமல்ல. தமிழுலகமே வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படலாம் (ஏற்கனவே பாதி அப்படித்தானே இருக்கிறது இப்போது) என்பதை சுட்டிக் கட்டுகின்றோம்

எனவே, நற்றமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் எல்லாம், பல்வேறு நிலைகளிலும் எதிர்த்து வீரப்போர் புரிந்த மறத்தமிழ் மக்கள், மாவீரன் பூலித்துரைப் பாண்டியன், முத்துவடுகநாதத்தேவர், மாவீரத்தளபதி வெள்ளையத் தேவன், மருதுபாண்டியர்கள் ஆகிய மறத்தமிழ் மக்களின் உரிமை முழக்கங்களையும், தங்களது குருதியை இம்மண்ணில் ஆறாகப் பெருக்கியும், உயிர் நீத்த வீர வரலாறுகள் அறிந்தீர்கள்.
அதே நேரத்தில் வந்தவன் கால்களில் மண்டியிட்டும் சுயநலம் பேணி மக்களிடம் குழப்பம் உருவாக்கியும் மறத்தமிழ் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த துரோகச் செயல்களையும் பார்த்தீர்கள்.
அத்துடன்…
எது உண்மையான வரலாறு? வரலாற்று புரட்டு எது என்பதையும் தெரிந்து கொண்டீர்கள்.
எனவே தியாகி யார்? துரோகி யார்? வீரர்கள் யார்? கோழைகள் யார்? வீரர்களுக்குரிய மரியாதையைச் செய்ய தவறி விடமாடார்கள் என்று நம்புவோமாகுக.

(ஆசிரியருக்கு, இன்றும் ராஜராஜன், பூலித்தேவன், மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தியாகம் போற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தமிழும் தமிழரும் உள்ளவரை இது நடக்கும். எத்தனையோ நல்ல வீரிய உள்ளங்கள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி எம் தமிழ் பூமி. அவர்களின் எண்ணங்கள் என்றும் இங்கே உறைந்து நின்று அனைவரையும் காக்கும் – வீரத் தமிழ் மைந்தர்கள்.) ஒலிக்கட்டும் உண்மை வரலாறு.

நன்றி – “விடுதலைப் போரின் மறத்தமிழர் உண்மை வரலாறு”
சமுதாய விடிவெள்ளி திரு. வி.ஆ. ஆண்டியப்பத்தேவர்.
…..
This entry was posted in மருது பாண்டியர்கள் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *