அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை…

அழகர் கோயில் யானை முகப்பு

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை…

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை – சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் “துறவுமேல் அழகர்” உள்ளார்.துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள கருவறையில் அடக்கம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் உள்ளதே தவிர அழகருக்கு உருவம் இல்லை.

அழகர் பற்றி வாய்மொழியாகப் பல கதைகள் உள்ளன.முறைப்படி தொகுக்கப்படவில்லை. நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்தலாம்.அழகர் கடும் சினம் உடையவர் என்றும் இவர் கோயில் அடர்ந்த காசாங் காட்டுக்கு நடுவே இருந்தது எனவும் மூத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.அச்சமூட்டும் காட்டுக்கு நடுவே அழகர் கோயில் இருந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் யானும் என் தந்தையார்,அம்மா,தங்கை உள்ளிட்ட குடும்பத்தினரும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குச் சென்றுள்ளோம்.

எங்கள் இடைக்கட்டு வீட்டிலிருந்து மாளிகைமேடு,கங்கைகொண்டசோழபுரம் வழியே கொல்லைகளின் ஊடாகப் புகுந்து காட்டுவழியில் நடந்து சென்றுவந்த நினைவு உள்ளது. அப்பொழுது அந்தக் கோயில் பற்றி என் அப்பா பல கதைகள் சொல்வார்.

அங்குள்ள கோயிலுக்கு வருபவர்கள் கிடாவெட்டியும் பூசை செய்வது உண்டு.ஆனால் அழகருக்கு அது படைப்பது இல்லை.அழகர் புலால் உணவுக்காரர்.அருகில் உள்ள வீரபத்திரசாமி,கருப்பசாமி உள்ளிட்ட பிற சாமிகளுக்குதான் கிடாவெட்டிப் படைப்பர். அழகருக்கு சைவமுறையிலான படையல்தானாம்.

சமைத்த ஏனங்களை மக்கள் அங்குள்ள திருக்குளத்தில் போட்டு வந்துவிடுவார்கள்.அடுத்த ஆண்டு சென்று அடையாளமாக அதனை எடுத்துச் சமைத்து உண்பார்கள்.அதுவரை அந்த ஏனங்களை யாரும் எடுப்பதில்லை.கோயிலுக்குப் பல ஏக்கர் நிலம் உண்டு.சிலர் மட்டும்
வருவாய் தருகின்றனர்.

அழகர் பற்றிய வேறொரு செய்தி.

சத்திரம் என்ற பகுதி கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து வடதிசைச் செல்பவர்கள் தங்கிச் செல்ல உணவு,தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைப் பண்டு பெற்றிருந்தது.அதனால் அவ்வூருக்குச் சத்திரம் என்று பெயர்.

இப்பகுதியில் பார்ப்பனச்சேரி(அக்கிரகாரம்)இருந்துள்ளது. காட்டில் அழகர் சாமி தவத்தில் இருந்ததாகவும் பார்ப்பனப் பெண்கள் இருவர் அங்கு உள்ள கிணற்றில் நிர் எடுக்க வந்ததாகவும் அப்பெண்கள் முனிவர் அருகில் இருந்த குடத்தை எடுத்து தண்ணீர் மொண்டதாகவும் தவம் கலைந்த முனிவர் அப்பெண்களைக் கிணற்றில் இறக்கும்படி செய்ததாகவும் இறந்த அந்த இரண்டுபெண்களும் தாமரை மலராக கிணற்றில் கிடந்ததாகவும் முனிவர் அக்கிணற்றில் இறந்ததாகவும் அக்கிணறுதான் பின்னாளில் வழிபடும் இடமாக மாறியதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.அதன் நினைவாகவே அழகர் கோயில்
உருவாகியுள்ளது.

அக்கிணற்றின் மேல் ஒரு படுக்கைக் கல்தான் இன்றும் மூலவர் நினைவாக வழிபடப்படுகிறதே அல்லால் முனிவருக்குச் சிலை இல்லை.(30.12.2008 களப்பணியில் பெற்ற தகவல். திரு. சேகர் என்பவர் வழி இத்தகவலை உறுதிசெய்துகொண்டேன்).

கோயிலுக்குப் பொங்கலை ஒட்டியும் தை மாதத்திலும் ஆடிமாதத்திலும் வெள்ளிக் கிழமைகளில் மக்கள் கூட்டமாக வந்து வழிபடுகின்றனர்.பொங்கல் முடிந்த கரிநாளில் நல்ல கூட்டம் இருக்கும் பல சாதியைச் சேர்ந்த மக்களும் வந்து வழிபடுகின்றனர்.செங்குந்தர் இனமக்கள் பலருக்கு இது குல தெய்வமாக உள்ளது. செங்குந்தபுரம், வாரியங்காவல், கொடுக்கூர், குவாகம், இலையூர், ஆண்டிமடம்,சின்னவளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந் தும் புதுவை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் செங்குந்தர் இனமக்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.

காலத்திற்கு ஏற்பப் போக்குவரத்திற்கு இன்று சாலை வசதிகள் உண்டு.மீன்சுருட்டியிலிருந்து மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளதால் மீன்சுருட்டியிலிருந்தும் அழகர் கோயிலை அடையலாம்.

இங்கு உள்ள யானைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றது.இது அழகர் ஏறி ஊர்வலம் செல்லும் பயன்பாட்டிற்கு என அதன் நினைவாக உள்ளது.இதன் காலம் காட்டும் சான்றுகள் அங்கு வைக்கப்படவில்லை.தொல்லியல் துறை இதுபற்றி விளக்கம் குறிப்பிட்டால் பயனாக இருக்கும்.கங்கைகொண்டசோழபுரம் சார்ந்த எத்தனையோ வரலாற்றுத் தரவுகள் சிதைந்ததுள்ளன.அச் சிதைவுகள் பலவற்றுள் இதுவும் ஒன்றாகவே உள்ளது.

இச்சிற்பம் தொன்மையானது என்பதால் சிதைந்து காணப்படுகிறது.இச்சிற்பத்தில் இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் காட்டப்படுகின்றனர்.அவர்கள் கையில் சங்கு, மத்தளம் உள்ளிட்ட இசைக்கருவிகள் உள்ளன.யானை ஒருவனைத் தன் பிடிக்குள் வைத்திருப்பது போல் உள்ளது.யானையின் மேலே மணிகள் உள்ளிட்ட அழகுக்காட்சி நன்கு உருவாக்கப்பட்டுள்ளளது.

யானையின் தென்புறப் பகுதியில் உள்ள மூன்று மாந்தர்களின் உருவம் சிதைந்துள்ளது. யானையின் உருவமும் சிதைந்துள்ளது.யானையின் கால் பகுதியில் வேலைப்பாடு சிறப்பாக உள்ளது.கழுத்தில் உள்ள மணிகள்,அணிகலன்கள் சிறப்பாக உள்ளன.பண்டைக்கால மக்களின் கலை உணர்வு காட்டும் அரிய இதனைப் புதுப்பித்துப் பாதுகாக்கவேண்டும். கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் சுற்றுலா செல்பவர்கள் குழுவாகச் சென்றுவரலாம்.

இங்குதான் கங்கைகொண்டசோழபுரத்தின் வட எல்லைக் காளிக்கோயில் உள்ளது.

(பின்பும் விரிவாக எழுதுவேன்.என் படங்கள்,செய்திகளை எடுத்தாளுவோர் முறைப்படி இசைவு பெறுக.பெயர் குறிப்பிடுக)

யானை முகப்பு(வேறொரு தோற்றம்)

யானை முகப்பு

யானையின் பிடிக்குள் அகப்பட்டவன்

யானையின் வடபுறத் தோற்றம்

யானையின் வலப்புறத்தில் இசைக்கலைஞர்கள்

யானையின் முழுத்தோற்றம்(தென்புறம்)

யானையின் தென்புறத் தோற்றம்(சிதைவு)

கழுத்துப் பகுதி வேலைப்பாடு

யானையின் கால் பகுதியில் அழகிய வேலைப்பாடு

யானைக்கழுத்தில் அணிகலன்கள்

அழகர்கோயில் திருக்குளம்


புகழ்பெற்ற காளியின் சிலை(அழகர் கோயில்)

நன்றி :
திரு.சொ.அழகுவேல்,உள்கோட்டை.
முனைவர் மு.இளங்கோவன்.

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *