கரிகால் சோழன்

கரிகால் சோழன்

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

வெண்ணிப்போர் :

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக்கதைகள் :

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

கரிகாலனின் கல்லணை :

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.





இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.



கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.


கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

சமயம் இறப்பு :

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.

..

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *