கோச்செங்கண்ணன்


கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும்.

திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.
நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம்.

செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *