தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா


ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது.
கிரானைட் கற்கள் இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது.
இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை? தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா?
இந்தியப் பெருமை இல்லையா! (தாஜ்மஹாலுக்கு 500-வது ஆண்டு என்றால் சும்மா இருக்குமா இந்திய அரசு?)தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
இது போதாது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு கலைச் சின்னத்தின் பெருமையை இரு நாள் விழாவில் அடைத்துவிடக் கூடாது.
இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும் ராஜராஜ சோழன் நிறுவிய கடல் கடந்த வெற்றிகள் என அந்தப் பேரரசனின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா ஒரு தொடர்ச்சியான திட்டத்தைக் கொண்டு அமைய வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்படும் என்றால் மட்டுமே தமிழர் பெருமையை உலகம் அறியும். அதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான்.
ராஜராஜ சோழன் தனது அரசை பல பகுதிகளாகப் பிரித்து, நிர்வாகிகளை நியமித்து, சரியான கண்காணிப்பு மற்றும் வரிவசூல் முறைகளை ஏற்படுத்திய அரசன். கிராமங்களில்கூட தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் மக்களாட்சி முறைகண்ட சோழன்.
வேளாண் சாகுபடியை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியும், அதன் நடுவே கோயிலையும், அந்தணர் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்கி அவர்களைக் குடியேற்றியும் கோயில், கல்வி ஆகியவற்றின் தொடர்பு அற்றுப்போகாமல் பார்த்துக்கொண்ட அரசன் ராஜராஜன்.ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான்.
இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது.
“பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்’ என்பதுதான் உண்மைநிலை.எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை.
இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா?
இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?இக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்கும் ஓர் ஆவணப் படத்தைத் தமிழக அரசு தயாரித்து, அவற்றை குறுவட்டுகளாக வெளியிட்டால் தமிழர் அனைவருமே இக் கோயிலின் பெருமையை உணர ஏதுவாக அமையும்.108 கர்ணங்களில் (நாட்டிய அடவுகள்) தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு மேல்தளத்தில் உள்ள புறச்சுவரில் 81 கர்ணங்கள் உள்ளன.
மீதமுள்ள 27 கர்ணங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சிலைகள் முழுமையாக்கப்படவில்லை, ஏன் என்கிற கேள்வி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்களில் சு. சிற்பி திருநாவுக்கரசு, பு. கார்த்திகா இருவராலும் எழுப்பப்பட்டது.
இதற்கான ஆய்வுகள் வேறு உண்மைகளைத் திறக்க உதவக்கூடும்.தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார்.
தைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ராஜராஜ சோழன் குறித்தும், அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்’.
இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்!

thanks to   http://www.dinamani.com ..

This entry was posted in சோழன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *