மறத்தமிழர் போர்கலைகள்

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை மன்னர் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.

இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் “கரந்தை” என்றும் அப்பசுக்களை மீட்டல் “வெட்சி” என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை “வஞ்சி” என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் “உழிஞை” எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் “தும்பை” என்பர். இதில் வெற்றி பெறுதல் “வாகை” எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது.

அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது. தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும். பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது; தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.

போரில் வென்ற மன்னன், வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர். அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயின.

தமிழனின் போர்க்கலை அறத்தை அடிப்படையாக்க் கொண்ட ஓர் அருங்கலை. சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். அவர்களது போர்முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடை பெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது. பகைவர் ஆயுதத்தை இழந்த போதும், போரில் தோற்றோடும் போதும் அவர் மேல் படை செலுத்தாத அறநெறி இருந்தது. அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க மறுநாள் போர் செய்தனர். ஓடி ஒளிந்தாரைக் கொல்லாமல் அவர்கள் வரும் வரை காத்திருந்து போர் புரியும் வீரம் இருந்தது. இறந்தோருக்கு இரங்கும் குணம் இருந்தது.
போர் அறிவிப்பு:
ஒருமன்னன் பகைவரோடு போரிடக் கருதுவானாயின் கருதியவுடன் படை எடுக்க மாட்டான்.தனது கருத்தைப் பகைவரது நாட்டார்க்குப் பறையறைந்து தெரியப் படுத்துவான். அப்போது

  • “ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வரைப் பெறாதீரும் எம் அம்பு கடி விடுதும் நும்மரண் சேரும், என்று அறிவிக்கப்படும். இதனால் தமிழர் போர் தொடங்கும் போது அற நெறியுடன் தொடங்கினர் என அறியலாம்.
  • பலிபெறு நன்னகரும் பள்ளியிடனும்

“ஒலிகெழு நான்மறையோர் இல்லும்- நலிவொரீஇப் புல்லா; இரியப் பொருநர் முனை கெடுத்த வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து.”
போர் நடக்கும் நாட்டில் மறவர்கள், பலியிடப்படும் கோவில்களுக்கும், துறவிகள் வாழும் பள்ளிகளுக்கும், வேதவொலி மிக்க அந்தணர்களின் இல்லங்களுக்கும் எந்த நலிவையும் செய்யவில்லை இவை போன்ற தக்கார் உறையும் இடங்களை நீக்கிப் பிற இடங்களில் போரிட்டுப் பகைவரை வென்றுள்ளனர். அவ்வாறு அறநெறிப்படி போரிட்ட மறவர்களுக்கே மன்னனும் சிறப்பு செய்தான். அதுவே அரசியல் அறமாகக் கருதப்பட்டது.
ஆநிரை கவர்தல் :
போர் அறிவிப்பைச் செய்தும் உணர மாட்டாதவை பசுக்களாகும் எனவே பசுக்களைப் பாதுகாக்க விரும்பி ஆநிரைக் கவர்தல் நடைபெறும். அவ்வாறு கவர்ந்து திரும்பும்போது அப்பசுக்ளுக்கு உணவினை வழங்கி, அவற்றிற்கு ஊறு செய்யாமல் ஓட்டிச் செல்வர் .
பூப்புனைதல் :
மறவர் போர் தொடங்கும் போது நிகழ்வுக்கேற்ற அடையாளப் பூவைச் சூடுதல் வழக்கம். ஆநிரை கவரச் செல்வோர் வெட்சிப் பூவையும், ஆநிரையை மீட்கப் போவோர் கரந்தைப் பூவையும், பகைவர் நாட்டின் மீது படை எடுப்போர் வஞ்சிப் பூவையும் , அரணைக் காப்போர் நொச்சிப் பூவையும், அரணத்தை முற்றுகை இடுவோர் உழிஞைப் பூவையும், ஒரு களத்தில் புக்குப் போரிடுவோர் இரு திறத்தாரும் தும்பைப் பூவையும் , போரில் வெற்றி எய்தியோர் வாகைப் பூவையும் சூடுவர். இவ்வாறு பூச்சூடுங்கால் உண்மைப் பூவைச் சூடுவதோடு பொற்பூவைப் புனைதலும் உண்டு. அரசர் மறவர்க்குப் பொற்பூ வழங்கிச் சிறப்பித்தலும் உண்டு. முருகன் கிரவுஞ்ச மலையை வெல்லுங்கால் காந்தட் பூச் சூடினான் என்றும், சிவபெருமான் முப்புரத்தை எரித்த காலத்தில் உழிஞைப் பூச்சூடினான் என்றும் கூறுவர்.
நாட்கோள் :
படை எடுக்க விரும்பும் மன்னர் நன்னாளும் நன்முழுத்தமும் அறிந்து தொடங்குவர். அந்நேரத்தில் அரசனும் உடன் செல்ல முடியாதிருந்தால் தனக்கு மாறாகத் தன் குடையையாவது, வாளையாவது புறவீடு விடுவான். அது நாட்கோள் எனப்படும்.
நெடுமொழியும் வஞ்சினமும் :
படைவீரர்களான மறவர்கள் தம் அரசர் முன்னும் பகை மறவர்களின் முன்னும் நெடுமொழி (தற்பெருமை) கூறிக் கொள்வர். தனது மாமன்னனுக்குத் தன்னுடைய மேம்பாட்டை வீரன் ஒருவன் தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல் எனப்படும். மன்னர்கள் போர் தொடங்கும் முன் வஞ்சினம் மொழிவர். வஞ்சினம் என்பது ‘இன்னது செய்வேன் நான். அவ்வாறு செய்யேனாயின் இன்னன் ஆகுக’ என்று வலிய சினத்தில் கூறும் சொல் ஆகும்.
பகைநாட்டழிவு :
வஞ்சியார் எனப்படும் வஞ்சி மாலை அணிந்த வீரர்கள் பகைவரது நாட்டு எல்லையுள் புகுந்து போருக்கு அடியிடுவர். ஊரை நெருப்பிட்டுக் கொளுத்துவர். ஊர் மனைகளில் கொள்ளையும் இடுவர்.  கரும்பும் நெல்லும் செழித்த வயல்களில் நெருப்பு மூட்டி அழிப்பர். நீர் தேக்கி வைத்த குளம் முதலியவற்றின் கரைகளை உடைத்துவிடுவர். உழிஞை மறவர் பகைவரது கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கிக் கழுதை ஏர் கொண்டு உழுவர்; கவடு விதைப்பர். மற்றொரு வகையில் இரு திறத்து மன்னரும் தும்பைப் பூச்சூடி போருக்குச் செல்லுங்கால் போர் ஊருக்குள் நடைபெறாமல் குறிப்பிட்ட ஒரு போர்க்களத்தில் நடைபெறும். இரு திறத்துப் படைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் இரு திறத்தாருக்குமே மிக்க அழிவு ஏற்படும்.
பாசறை நிலை :
வஞ்சி மறவர்களது படை பகைவர்நாட்டில் புகுந்து ஊர் எல்லையில் தங்கும். அரசன் தங்குவதற்குப் பசிய மூங்கிலால் அறை வகுப்பர். (பசுமை+அறை=பாசறை) அதனைச் சுற்றி மறவர்கள் தங்குவதற்குத் தழைகளை வெட்டி மேற்கூரையாக இட்டுச் சிறுசிறு அறைகள் வகுக்கப்படும். அங்கே ஊரில் வாழ்வது போன்ற எல்லா அமைப்புகளும் இருக்கும். எனவே அது புதிதாகக் கட்டப்பட்ட ஊரைப் போலவே காணப்படும்.இது கட்டூர் எனப்படும். (கட்டு + ஊர் = கட்டூர், பாசறை) ஒரு பக்கம் யானைகள் முழங்கும்; ஒருபக்கம் ஆடல் பாடல் மகளிரின் கூத்து நடக்கும். பாசறையில் தங்கியுள்ள மன்னனுக்குப் பகைவர் திறையளிப்பர். பாசறை மன்னன் தம் மறவர்க்குப் பெருஞ்சோறளித்தலும் உண்டு. போர்க்களம் புகுந்த மறவர் நெடுநாள் பாசறையில் தங்கியிருந்து போரிட்டு வருவர். அப்போது அவர்களுக்கு வழங்கும் உணவு அளவுக்கு உட்பட்டே இருக்கும். அந்நாட்களில் ஒரு நாள் மன்னன் மறவர்க்கு உணர்ச்சி பெருகுதல் வேண்டிக் கறிவிரவிய பெருஞ்சோற்றுத்திரள்களை அளிப்பான் இதுவே பெருஞ்சோறு எனப்படும்.
மகள் மறுத்தல் :
வஞ்சி மன்னன் பகை மன்னர்களிடம் மகள் வேண்டுவான். காஞ்சியார் மகளைக் கொடுக்க முடியாதென மறுத்துப் பேசுவர். உழிஞை மறவன் மகள் வேண்டுவான்;  நொச்சி மன்னன் மகள் தர மறுப்பான். உழிஞை வேந்தன் நொச்சியானது மகளைக் கேட்பான்; நொச்சியான் மகள் தர மறுப்பான். இவ்வாறான காரணங்களுக்காகப் போர் நடைபெறலும் உண்டு.
உயிர் நீத்தல் :
போரில் விழுப்புண்பட்ட மறவன், மீண்டும் உயிர் வாழ விரும்பாமல் தன் புண்ணைத் தானே வேலால் கிழித்துக் கொண்டு உயிர் நீப்பதும் உண்டு. போரில் தனது அரசன் இறந்ததைக் கண்டு தாமும் உடன் இறப்பதற்காகச் சில மறவர்கள் உயிர் வேட்டலும் உண்டு. சில மறவர் செஞ்சோற்றுக் கடன் வாய்ப்பதற்காகத் தமதுயிரை அவியாக (பலியாக) இடுதலும் உண்டு.
முடி புனைதல் :
பகைவரது மதிலை அழித்த மன்னன் தனது வாளைப் புண்ணிய நீராட்டுவான். முடிசூடித் தானும் புண்ணிய நீராடுவான். முடிபுனைந்த நாளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுவான்.
போர்ப்படை :
போரிடுங்கால் யானை, குதிரை, தேர் என்பன கையாளப்படும். மறவர் இவற்றை இயக்கியும் இவற்றின் மீது அமர்ந்து கருவி கொண்டும் போரிடுவர். படையின் முதற்பகுதி தூசிப்படை அல்லது தார் எனப்படும். வில், அம்பு, வாள் , குந்தம், ஆழி, வேல் முதலிய கருவிகள் போரில் பயன்படுத்தப்படும். கருவிகள் தம்மீது பாயாமல் பொருட்டுக் கிடுகு (கேடயம்) கையாளப்படும். கருவிகளில் வேல் என்பதே முதன்மையானது. போரிடுங்கால் துடி, முரசம், வளை, வயிர் போன்ற இசைக்கருவிகள் முழங்கும்.

This entry was posted in மறவர் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *