விடுதலைப் போரின் முதல்வன் யார்?

இக்கேள்விக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை.
மாவீரன் பூலித்தேவன் தான் அவர். ஆனால் இதை மறைக்க செய்யப்பட்ட துரோக செயல்களை பட்டியலிடுவது அவசியம் ஆகிறது.
“திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் சின்னஞ்சிறு பாளையப்பட்டார் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்”
“வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்

என்று ம.பொ.சி. அவர்கள் முதல் முழக்கம் என்னும் தமது நூலில்((பக்.11) குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே பக்கத்தில்,

“பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் பாளையக்கார்கள் நிகழ்த்திய போர் இன்று உலகும் போற்றுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே தொடங்கி விட்டதெனலாம்” என்று உண்மையை எடுத்துக் கட்டியுள்ளார்.இது உண்மையானால்…

உலகும் புகழும்(!) வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே விடுதலைப் போரை தொடங்கியது யார்?
அவன் தான் மறத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்.
இதை முழுமையாக இருட்டடிப்பு செய்தது ஏன்?
அடுத்து மற்றொன்றும் கூறுகிறார் ம.பொ.சி. அவர்கள்.
“ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி, இந்தியாவிலேயே முதல் புரட்சியாக கிட்டூர் ராணி சென்னம்மாள் விளங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னோடியாக கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிர்ப்பு கிட்டூரில் தான் உருவாகியது” (பக்.18(1) )
[இவர் போராட்ட காலம் 1830-31]
மேலும்,
“விடுதலை போரில் தியாகம் செய்துள்ளவர்களைஎல்லாம் சதி சமய காழ்ப்பின்றி மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியது எனது கடமையாகிறது” (பக்.6)
அவரின் கடமை நிறைவேற்றப்பட்டதா? இது தான் காழ்ப்பின்றி இளையோர்களுக்கு உண்மை வரலாறு அறிமுகம் செய்யும் கடமையோ? விருப்பு வெறுப்பற்ற ஒரு வரலாற்று ஆய்வெனக் கருதமுடியுமோ?
1798ல் தான் கட்டபொம்மன். 1755லேயே வீர முழக்கம் இட்டவன் தானே மறத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்!

யார் பூலித்தேவன்:

[சிறு குறிப்பு:  தொன்று தொட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்குடி முகவை கிழவன் சேதுபதி அவர்களுக்குப் பிறகு தலைவணங்கா அடலேறு நெற்கட்டான் செவ்வல் குறுநில மன்னன் தென்பாண்டி நாட்டின் தானைத்தலைவன் பூலித்தேவன்.  முகவை ஆப்பநாடு மறவர் சீமை மான மறக்குலத் தலைவர் உயர்திரு. சித்திரபுத்திரத் தேவர் அவர்களுக்கும், சிவஞான நாச்சியார் அவர்களுக்கும் இல் பிறந்தவர் தான். பின்னால் தலைக்காவல் முறையில் நெல்லை மாவட்டம் சென்றார். “இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” – முனைவர் ந. இராசையா  பக்.30 ]
மேலும் ம.பொ.சி.அவர்கள்,
“1767ல் மேஜர் பிராண்டும்,
1783 ல் கர்னல் புல்லர்டனும் பாஞ்சலங்குறிச்சி மீது படையெடுத்தனர்(பக்.42 )”
“பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தளபதி பானர்மேன் தாக்கியது 5 செப்டம்பர் 1798ஆம ஆண்டு தான்(பக்.42)

1755ஆம் ஆண்டு மே திங்கள் மறத்தமிழ் மாமன்னர் மாவீரன் பூலித்தேவன் கோட்டை முதல் வெள்ளைப்படைத் தளபதி கர்னல் ஹெரான் என்பவனால் தாக்கப்பட்டது என்பது தான் ஆவணச் சான்றுடன் கூடிய வரலாறு.
மேலும் மறுக்கமுடியாத சான்றுகள் ஏராளமுண்டு.
நெல்லை மாவட்ட விவரச்சுவடி1917 , பகுதி 1, பக்-70-73, 81-85, 363-387, 389-408, 403ல் விரிவாகக் காணலாம்.
மேலும் அறிஞா  துர்க்காதாஸ் எஸ்.கே. சாமி கூறுகிறார் “தென்பாண்டி நாட்டுத் தமிழ்ப் பாளையங்களைப் பிளந்து அவற்றினூடே புகுத்தப்பட்ட கம்பளப் பாளையங்கள் தமிழத்தின் நிலா, பெருமை ,வருங்காலம் இவைகளைச் சிறிதும் மதியாமல்-தமிழர்களை அன்னியர்களிடமிருந்திலும் ஆதிக்கதாரிடத்திலும் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்” என்று “தமிழ்வீரன் பூலித் தேவர்” என்னும் தமது நூலில்  பக்-32ல்  குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாவீரன் பூலித்தேவனுக்கு 46 ஆண்டுகள் பின்னர் வந்த வீரபாண்டியபுரம் கட்டபொம்மன் முதல் முழக்கம் முழங்கியவன் என்பது ம.பொ.சி. நூலின் பக்-6ல் குறிப்பிடப்பட்டுள்ள செய்திக்கு தெளிவான பதிலடி கொடுப்பதாக மேற்கண்ட பத்தி இருக்கிறது.
அரைநூற்றாண்டு காலம் வெள்ளையருடன் வீரப்போரிட்டு தன்மானத்தை நிலை நிறுத்திய மாவீரன் பூலித்தேவனின் புகழை ஏன் பாழ்படுத்தவேண்டும்? என்ற கேள்வியை படித்தோரிடம்  விபரம் தெரிந்தோரிடம் விட்டு விடுகிறோம்.எனவே, நாட்டின் வீரவணக்கத்திற்குரிய வீரர்களை தவறாக ஒரு சில அரசியல்வாதிகள் விளம்பரப்படுத்திய காரணத்தால், சுயநலக்காரர்கள் வரிக்கொடுமையாலும் கொள்ளையாலும் தமிழர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தவர்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களைப் புகழ்ந்து பேசுவதும், மறத்தமிழ் மாண்பை அழிக்கவேண்டுமேன்றே எழுதப்பட்ட எரிபொருளாகும் என்று எடுத்துக்காட்டியுள்ளனர் அறிஞர் பெருமக்கள்.
“அமெரிக்க விடுதலைப் போருக்கும் (1775–1783), பிரெஞ்சுப் புரட்சிக்கும் (1789–1799) முன்னரே  தென்னக விடுதலைக்காக இரத்தம் சிந்திய தியாகத் தலைவன் பூலித்தேவன் அவர்களே”.
1772ல் சின்ன மறவர் நாடு சிவகங்கை சீமையில் வெள்ளைப்படைத் தளபதி வேல்ஸ், அக்னியூ ஆகியோரை எதிர்த்து போரிட்டாரே அரசர் முத்து வடுக நாதத் தேவர்.
பெயர் என்ன இதற்கு?
வட்டுடை அணிந்து வாளெடுத்து வருபகையை எதிர்த்துச் சென்றாரே மறக்குல மங்கை ராணி வேலுநாச்சியார், ஆங்கிலேயர் பிடித்த பகுதியை மறுபடியும் போரிட்டு வென்ற ஒரே பாரத குல வீரப்பெண், தமிழ்மறத்தி.
இதற்குப் பெயர் என்ன?
1766டிசம்பர் 26ல் கொல்லன்கொண்டான் குறுநில மன்னர் மாவீரன் வாண்டையாத் தேவன் கும்பினி படைத்தளபதி பிளின்ட் என்பவனை எதிர்த்துப் போரிட்டாரே. அதற்குப் பெயர் என்ன? மீண்டும் அவர் 1767 ஏப்ரல் 26ல் இரண்டாவது போர் துவக்கினாரே! அது எத்தனையாவது முழக்கம்?

மான மறக்குல வீராங்கனை இராணி வேலு நாச்சியார் அவர்களுக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் மே திங்கள் தளபதி ஹெரான் என்பவனை தாக்கினானே நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவன். அதற்குப் பெயர் என்ன?

மறத்தமிழ் மக்களின் மகத்தான தியாகங்களை எடுத்துக்காட்டி பெருமிதமும், பெருமையும் அடைய வேண்டுமே தவிர,இருட்டடிப்பு செய்துவிட்டு எடுத்துக்காட்டியுள்ள பகுதி வருமாறு:-
1755க்கும் 44 ஆண்டுகளுக்குப் பின் 1799ல் நாட்டின் சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் தான் விடுதலை இயக்கத்தில் முதல் முதலாக முழங்கியவன் என்று கூறுவதன் உள் நோக்கம் என்ன? சாதரணமாக தவறு நிகழ்ந்து விட்டது எனக்கருத முடியுமோ? தமிழ்க் குலம் தலைகுனிய வேண்டும் என்பதிலே ஆர்வமோ? அல்லது தமிழன் அல்லாத வேறு ஒருவன் என்று வரவேற்கும் பெருமையோ?
அறிஞர்கள் கருத்து:
இந்த தமிழ் துரோகத்தை மறுத்து பல அறிஞர்கள் தம் ஆய்வுக்கருத்துக்களை கூறியுள்ளனர்.
தமிழ்வாணன்
முனைவர். ந.சஞ்சீவி
முனைவர் எஸ்.கதிர்வேல்
எஸ்.கே.சாமி
பேராசிரியர் வானமாமலை
எட்டயபுரம் நா.குருகுகதாசப்பிள்ளை.
சுப்பிரமணியம்.
வ.வேணுகோபால்.
மங்கள முருகேசன்
எஸ். நடராசன் மற்றும் சான்றோர்
பலரது எடுத்துக்காட்டுகள் மலைவிளக்காக காட்சி தருகிறது.
“இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” முனைவர்-ந.இராசையா பக்.18-28ல் தெளிவாகக் காணலாம்.
இவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள். என்றாலும் நம் பெருமையை அடுத்தவர்கள் கூறும் போது தான் நாம் உணரமுடிகிறது.
மேல்நாட்டு அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள்?
திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடி, அறிஞர் பேட்டி, ஐ,சி.எஸ். பக்.70-75, 80-339, 376, 411.
திருநெல்வலி சரிதை, அறிஞர் கால்டுவெல், பக்.92, 376.
இந்துஸ்தான் சரிதை – ராபர்ட் ஓர்ம்ஸ் -பகுதி 1 பக்.400-401, 420, 423, 425 –  பகுதி 2 பக்.100, 109, 112, 116-117, 199-200.
மேலும் அறிஞர் அருட்திரு. கிரான்ஸ், ஏ.ஜே.ஸ்டுவர்ட், எச்.ஆக்பெட் போன்ற மேல்நாட்டு அறிஞர் குறிப்பு – ?
“1799ல் உள்ள ஒருவன் முதன் முதலாக முழங்கியவன் என்று சொல்லுவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறது நாடு?”

இந்தக் கேள்விக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லிதானே ஆகவேண்டும்.
இப்படி எடுத்துக்காட்டிய அறிஞர்கள் ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருப்பதால் தமிழர் கட்சித் தனிப் பெருந்தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஒதுக்கிவிட்டிருக்கலாம்.
என்றாலும் ! மறத்தமிழர் மாவீரன் பூலித்தேவனையும், வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கனையும் சீர்தூக்கிப் பார்த்து, சரியான கோணத்தில் படம் பிடித்துக் கட்டாமல் தமது விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப எழுதி இருக்கின்ற திருப்பணியே தான்:-பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே தலைவனாகப் பட்டம் சூட்டிக்கொண்ட, வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கனைப் போல் குறுகிய எல்லையை வகுத்துக் கொண்டு தான் “முதல் முழக்கம் முழங்கியவன் கட்டபொம்மு தான்” என்று துணிந்து தீட்டியுள்ளார் என்பதை நாம் உறுதியாக கூற முடியுமே தவிர ஆராய்ச்சித் திறன் இல்லாதவர் ம.போ.சி. என்று குறை கூறுவதற்கு நாம் தயாராக இல்லை.
ஆனால்…! உண்மை வரலாறு என்ன? உணர்த்தியாக வேண்டுமல்லவா? தவறான கற்பனைகளை உண்மை போல் சித்தரித்துக் காட்டிய திருப்பணிகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆராய்ச்சித் திறன் அரசியலடிமையாகி விடக்கூடாது.
1798 செப்டம்பர் 5 ல் தான் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை, தளபதி பிளின்ட் என்பவனால் தாக்கப்பட்டது. மீனும் கர்னல் புல்லர்டன் கோட்டையைத் தாக்குகிறான். – “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” – அறிஞர் தமிழ்வாணன் பக்-93.
மாவீரன் மாற்றுருவில் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான்.  கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த வீரபாண்டியன் வீர நடையிட்டான். சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்தான். அந்த இடம் போதுமான பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்த மாவீரன் வேறு வழி நடந்தான்.

புதுக்கோட்டை மன்னரின் ஆட்சிகுட்பட்ட திருக்களம்பூர் முட்புதர்கள் அடர்ந்தகாடு கலியபுரத்தில் பதுங்கி இருந்தான் – “க. கொ” – பக். 208

இறுதியில் கலியபுரத்திலிருந்து கைது ஆனான். தூக்கு மரத்திற்கு அவனைக் கொண்டு வரும் பொது
“வீரநடை போட்டு வந்தான் வீரபாண்டியன்”

அதை ம.போ.சி. அவர்களே தமது நூலின் பக்.56 பகுதி 1 ல்
“கோட்டையை விட்டு வெளியேறாமல் அக்கோட்டையைக் கைப்பற்றும் புனிதப் போரில் வீரமரணம் எய்தாமல் போனேனே.”
என்று வருந்தினானாம் மாவீரன்.வீரபாண்டியானே கோழையாக மரணம் என்பதை எடுத்துக் கூறிய பின்னர் மாவீரன், வீரமரணம் என்ற பட்டம் சூட்டியது விவாதத்திற்கு உரிய ஒரு கருப்பொருளை கொண்டு உருவாகியது. உண்மைக்கு மாறானது.
மாவீரன் பூலித்தேவன் பிறந்தது 1914 ஆம் ஆண்டு. அவன் விடுதலைப் போரை துவக்கியது 1755 மே திங்கள்!. இறுதிக் காலத்தில் கூட அவன் கோழையாக தூக்குக் கயிற்றில் தொங்கி உயிர்விடாதவன். இம் மறத்தமிழ் மாவீரன் வரலாற்றை மறைக்க எந்த தமிழ் மகனும் துணிவு கொள்ள முடியுமோ?
“பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03.01.1760 ஆம் ஆண்டு. அவன் பட்டம் ஏற்ற நாள் 02.02.1790.
அவன் கொலையாகி தூக்கு கயிற்றில் தொங்கிய நாள் 16.10.1799. அவன் போர் தொடங்கிய நாள் 1798 ல் தான்”எப்படியோ “முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்” என்று நாம் பாராட்டி விட்டோம். அதற்கு நாமே இழுக்கு உண்டாக்கக் கூடாது என்பது ம.போ.சியின் பெருந்தன்மையாக இருக்கலாம்.ஆனால்….! அது தம்மை நம்பிப் பின்பற்றும் மக்களுக்கு நெஞ்சார இழைக்கப்படும் வஞ்சம் என்று சொல்லுவது தவறாகாது.
மறவர் மாண்பு:

போர்க்கள மறவர் மாண்பு….?  வெற்றி அல்லது வீரமரணம் அவன்தான் போர் மறவனாவான்.  அவன் களத்திலே சாயும் போது கூட இரு கைகளையும் பிடியளவு மண்ணைத் தமது உள்ளங்கைகளில் அடக்கியவாறே குப்புறச் சாய்வான். எதிரியின் கையில் சிக்கி, விலங்கை சுமந்து தூக்கு கயிற்றில் தொங்கி உயிர்விடுபவன் கோழையே தவிர, வீரனாக மாட்டான்.
அவன் மறவனாக மாட்டான். மறவனாக்குவதும் அறிவுடைய செயலாகாது. “முன்னேற்ற முழக்கம் – தேவர் முரசு” -வி.ஆ. ஆண்டியப்பத் தேவர். (ஆகஸ்ட்) பக். 84 -5-1

மாவீரர்கள்:
வெள்ளையர்களுக்கு திகில் கொடுத்த மாவீரன் பூலித்தேவனை கையில் விலங்கிட்டு செல்ல முடிந்ததோ?
கொல்லங்கொண்டான் மாவீரன் வாண்டையாத் தேவன் அடிச்சுவட்டையாவது வெள்ளையர் காண முடிந்ததா?
சேதுபதி மீது படையெடுத்து வந்த இராமப்பையன் மற்றும் தளபதியார் வாள் சுழற்றி வன்னியத் தேவனை சிறை பிடிக்க முடிந்ததோ?
சின்ன மறவர் நாட்டின் செங்கதிர் மறத்தமிழ் மாமன்னர் பெரிய மருது வெள்ளையரின் வஞ்சகத்திற்குத் துணிந்து வந்தே தூக்குக் கையிற்றை துணையாக்கிக் கொண்டானே தவிர கையில் விலங்கைச் சுமந்து அவன் கோழையாகியது  உண்டோ? கட்டபொம்மு நாயக்கனுக்கு உயிர் பிச்சை அளித்த மாவீரன் வெள்ளையத்தேவன் மார்பிலே வேல் தாங்கி களத்திலே உயிர்விட்டானே தவிர கையில் விலங்கு சுமந்து தூக்குக் கயிற்றில் தொங்கினானா?  இவர்கள் தானே வீரன் , மாவீரன்  என்பதற்கு இலக்கணமானவர்கள். மறத் தமிழ் மக்கள். வரலாற்றுச் சிற்பிகள்.
ஆனால்.
“கோழைகளை எல்லாம் வீரனாக்கியே தீருவேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு பரணிபாடிய ஒரு சிலருக்கு மாவீரன் பூலித்தேவன் உண்மை வரலாறு தெரியாமல் இருக்க முடியாது. சான்றுகள் ஏராளமுண்டு”.
எனவே, தான் செய்த தவற்றை மறைக்க திரும்பத் திரும்பப் பேசியும், எழுதியும் வந்தால் உண்மையாகிவிடலாம் என்ற எண்ணமும் இருக்கக்கூடும்.
உண்மை தியாகத்தையும் உறுதியாக உள்ள வீரவரலாற்றுச் சுவடிகளையும் ஒதுக்கி தள்ளியும், முழுமையாக மறைத்தும், மக்களைக் கொள்ளையடித்து, பொருள் திரட்டி வந்த ஒருவனை

“வீரபாண்டியன் என்று பச்சைக் குத்திக் கொள்வது என்றால் தமிழனுக்குப் பச்சை துரோகம் செய்வதாகும்”
கரும்பு வெட்டியவர் கடித்துண்ண முடியாது கைபிசைந்து கலங்கும் நிலைதானே! எதிகால இளையோர்களும் குருடாகவே இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடையோர் செயலாகாது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே துணிந்து செய்யும் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டோ?

திருச்சி விசாரணை:

கட்டபொம்முவை திருச்சிக்கு கொண்டு வந்து கும்னியர் விசாரணை செய்தனர்.
என்ன சொன்னான் அந்த மாவீரன்(!)?
கூறுகிறது கட்டபொம்முவின் புகழ் பாடிடும் “பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்”  -ஜெகவீரபாண்டியனார் பக்- 130ல் காணலாம்.
அடுத்து:
வீரபாண்டியனின் கழுத்தில் முத்துமாலையை அணிவித்தது யார்?
ஏன் முத்துமாலை பரிசு தந்தனர் கும்பினியர்?
‘கும்பினியாரின் வளர்ப்பு பிள்ளை’ வீரபாண்டியன் என பாராட்டுப் பெற்றது ஏன்?
திரு. எம்.எஸ்.சுப்ரமணிய ஐயர், “வீரபாண்டிய கட்டபொம்மன்” நூலின் பக்.45-46.
ஆசரியர் வி.சே.வீலா அவர்கள்,
“வீரபாண்டிய கட்டபொம்மன்”நூலின் பக்.43, 44
“பாஞ்சாலங்குறிச்சி சரித்திரம்” பக்.132
ஆனால் ம.பொ.சியோ….? என்ன சொல்ல.
வந்தான் ஜாக்சன்:-

ஜாக்சன் இராமநாதபுரத்தில் 1797 மார்ச்சு திங்கள் 10ஆம் நாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்  கொண்டான். வீரபாண்டியனின் நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்தான்.

03.02.1798ல் வரிப்பணம் கேட்டு வீரபாண்டியனுக்கு கடிதம் எழுதினான்.
03.05.1798ல் மீண்டும் கடிதம் எழுதினான்.
23.05.1798ல் பிளைட் என்ற வெள்ளையன் மூலமாக கடிதம் அனுப்பினான்.
18.08.1798ல் கடுமையாக எச்சரிக்கை விடுத்தான் வீரபாண்டியனுக்கு!
என்ன எச்சரிக்கை?
[இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக். 98. நெல்லை மாவட்ட சுவடி பக். 80]
05.09.1798ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்ற ஆணை?என்ன செய்தான் மாவீரன்(!)?
வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? என்று முழக்கமிட்டான? வரிந்துகட்டிக் கொண்டு படை திரட்டினான? பொங்கி எழுந்தானா? போர் முரசும் முழங்கினானா?

மண்டியிட்டான்: “கலெக்டர் ஜாக்சன் செப்டம்பர் 5ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்று ஆணை?”

ஆனால் வீரபாண்டியன் என்ன செய்தான்?
ஜாக்சன் சந்திக்க சொன்ன பலநாட்கள் முன்னதாகவே புறப்பட்டுவிட்டான். அவன் முகாமிட்ட ஊர்கள் தோறும் பின் தொடர்ந்தான். என்பதை தமது நூலின் பக். 46 பகுதி 1 ல்  ம.பொ.சி.அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்சனை சந்திக்க வீரபாண்டியனுக்கு எத்துனை ஆர்வம் ஏன்?
ஏறக்குறைய 23 மைல்கள்
400 நாட்கள்
நாலாயிரம் படைகள் சூழ?[கட்டபொம்மன் பக்.316-317 ந.சஞ்சீவி, இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக். 98. நெல்லை மாவட்ட சுவடி பக். 80]

என்ன உறுதியுடன் நடந்தான்? கையையும் வாளையும் மடக்கி கொண்டு நடந்தது ஏன்?

கொள்ளைக்காரன்:

“இந்த நேரத்தில் கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என்று எவனாவது சொன்னால் அவனைக் குத்தி கிழித்து விடுவார்கள் மக்கள்” என்று “இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” என்னும் தமது நூலின் பக்.19 ல் முனைவர் ந.இராசையா எடுத்துக்காட்டியுள்ளார்.

“கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” என்று அறிஞர் தமிழ்வாணன் பக்.14 ல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் அத்தகைய வெறியர்கள் அல்ல … என்று ஆதாரங்களை அமைதியாகவே எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.
ஆனால் ம.போ.சியோ ? அவரது வரலாற்றுக் குழப்பத்திற்கு காரணம்?
உண்மையிலேயே அவரது நிலை கழிவிரக்கமானது தான். தமது வாதங்கள் தோற்றுப் போகும் போது ஆத்திரம் எழுவது இயல்புதான்.
அதுவும் உண்மையை மறைவின்றி எடுத்துக்காட்டிய அறிஞர் தமிழ்வாணன் மீது ஏற்படாமல் இருக்க முடியுமா?
உண்மை கசப்பானது தான். அதை யார் சொன்னால் என்ன? சாடுவது நியாயமாகவே கருத  முடியும்.
அவர் மீது அனுதாபமே ஏற்படுகிறது.
மேலும் சிந்திக்க தூண்டுகிறதே தவிர, மறைக்கச் செய்ய முடியவில்லை.
ஏன்? இளைய தலைமுறையினர் மத்தியில் தவறான வரலாறு இடம் பெற்று விடக் கூடாது என்பதாகும்.

இராமலிங்க விலாசம்:
“வெள்ளையத் தேவரே என் உறவினர் எல்லோரும் எனக்குப் பகையாகி விட்டனர். நீங்கள் ஒருவர் தான் எனக்குத் துணை! சண்டை வேண்டாம். இப்போது இராமநாதபுரம் சென்று பார்த்துக் கொள்ளலாம் அமைதி வேண்டும்” என்று வெள்ளையத் தேவனிடம் வேண்டியவன் கட்டபொம்மன் தானே?
உண்மையான வரலாறு விளக்கம் சான்றுகளை எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.

கையெழுத்துப் பிரதி அரசு நூல் நிலையத்தில் இருப்பதாக தமது நூலின் பக்கம் 138 ல் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்றான்:

“இராமலிங்க விலாசம் மாடியில் கலெக்டர் ஜாக்சன் முகமலர்ச்சியுடன் கட்டபொம்மனை வரவேற்றான். என்னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து என்னை வந்து பார்த்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லி இருக்கை  கொடுத்தான்.மேலும் கேள்விகளை கேட்கிறான்.
கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு வந்த கட்டபொம்மன், தான் கொண்டுவந்த கப்பப் பணத்தை ஜாக்சன் காலடியில் வைக்கிறான்.
எதிர்பாராத இந்த நிகழ்ச்சியை கண்ட ஜாக்சன் அதிர்ச்சி அடைந்தான்.  ஆயினும் இதை திருச்சிக்கு தெரியப்படுத்துகிறேன். பதில் வர சில நாட்கள் ஆகலாம். அதுவரை இங்கயே தங்குவதற்கு வேண்டியது செய்கிறேன், என்றான்.
இடுக்கிப் பிடியில் அகப்பட்டுக் கொண்ட கட்டபொம்மன் இடத்தை விட்டு, உயிர் தப்பினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். வயிறு வழியாக இருக்கிறது கொள்ளைக்குப் போக வேண்டும் என்றான்.
குறிப்பிட ஒரு இடத்தை அவர்கள் காட்டினர். மாடிப்படியிலிருந்து இறங்கியவன் நேராக வாயில் நோக்கி ஓட்டமெடுத்தான். கூக்குரல் எழுப்பினர் காவலர்கள். வாயிலில் நின்ற லெப்டினன்ட் கிளார்க் ஓடிவந்து தடை செய்தான்.
கூக்குரல் கேட்டதும் கோட்டைக்கு வெளியே தயாராக இருந்த வீரர்கள் பாய்ந்து சென்றனர். கோட்டை வாயில் நோக்கி, தடை செய்த கிளார்க் என்பவனை கைவாள் கொண்டு வீசினான் மாவீரன் வெள்ளையத் தேவன். கட்டபொம்மன் விடுபட்டு வெளியே வந்தான்.
சின்னக் கடை வீதி:

வீரபாண்டிய கட்டபொம்முவுக்கு தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆத்திரம் அடைந்தான். அதை இராமநாதபுரம் கடைவீதிகளில் காட்டினான். வீதியில் சூறை ஆடிய வீர விளையாட்டுக்கள், நடந்த கொள்ளைகள் பற்றிய நாடோடிப் பாடல்கள் ஏராளமுண்டு. ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கட்ட முடியும் என்பதை “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” நூலின் பக்.170-172 ல் விரிவாகக் காணலாம்.
ஆனால் ம.போ.சி. கூறுகிறார்
“வீரபாண்டியன் குதிரைமேல் ஏறி தப்பிவிட்டான்”
என்பது, சின்னக்கடை வீதியின் திருவிளையாடல்களை மறைப்பதற்காகவே  வரலாறு திசை திருப்பிவிடப் பட்டுள்ளது என்ற உண்மையை விளக்கியாக வேண்டும்.
என் தந்தை (மை பதர்)
இராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் ஜாக்சனின் இடுக்கிப் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சியில் பெருவிழா நடத்தினார்.
ஏன்? வீர வெற்றி விழாவா?
சின்னக்கடை வீதியில் தாம் நடத்திய் வீரத் திருவிளையாடல்களின் பூரிப்பு விழாவா?
இல்லை! இல்லை!!
வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு விழா!
கடமையைச் செய்த தளபதிக்கு பாராட்டு விழா ஏன்?
பாராட்டு மட்டுமா, உயர் பட்டமும் வழங்கப்பட்டது ஏன்?
கோட்டை வாசலில் தன்னைத் தாக்க வந்த வெள்ளைப் படையின் துணைத்தளபதி கிளார்க் தலையைக் தமது கைவாள் கொண்டு துண்டித்துத் தமக்கு உயிர்பிச்சை கொடுத்த வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு, அவனது வீரதிர்க்குரிய பட்டம் சூட்டும் விழா தான்.
என்ன பட்டம் சூட்டப்பட்டது? வெள்ளையர்களை, சூழ்நிலையால் எதிர்த்து நின்ற கட்டபொம்மன் டச்சுக்காரர்களிடம் அணுக்கமான உறவு வைத்திருந்தான் என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டின் இக்கட்டுரை விரியும். அவர்களது அடிச்சுவட்டை பின்பற்றினான்.
டச்சுக்காரர்கள் தங்களது மதகுருக்களை ஃபாதர், தலைவன், தந்தை என்று தான் அழைத்து வந்தனர். அதையே கைகொண்டான்.
சின்னக்கடை வீதியின் நிகழ்ச்சியால் வேதனையில் உழன்று கொண்டிருந்த மறவர் வீரர்களைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற தமது நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார் கட்டபொம்மன்.
தன்னுயிரை பாதுகாத்த வீரத் தளபதியை ‘மை ஃபாதர்’, ஏன் தலைவன், ஏன் தந்தை என்று பட்டம் சூட்டினான்,
நன்றி மறவாத செயல் அது மட்டுமல்ல.
இந்த உண்மையைத் தெளிவுபடுத்திக் கொண்ள்ள நெஞ்சழுத்தம் அதிகம் வேண்டும்.
‘மை ஃபாதர்’ என்பது மக்கள் பேச்சு வழக்கில் சாதரணமாக பாதர் வெள்ளை என மாறிவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும்
பாண்டித்தேவன் கொலை:
திருவைகுண்டதிலுள்ள கும்பினியாரின் தாணியக்கிடங்கு கொள்ளையடிக்கப் பட்டது ஏன்?
காவலாரக இருந்த மாவீரன் பண்டியத்தேவனை கொலை செய்தது யார்?
தம்பியின் திருமனதிர்க்கும், தானாபதிப் பிள்ளை மகன் திருமனதிர்க்கும் கும்பினியர் தானியக் கிடங்கு கொள்ளை?
அதைத் தடுத்த திரு. பாண்டியதேவர் கொலையும் ஆகா வேண்டுமோ?
செதூரிளிருந்து கடத்தி வந்த சிவகிரிப் பெயரார் கொலை அனது ஏன்?
இவைகளுக்கெல்லாம் தெளிவான விளக்கம் தேவையாகும்.
இத்தகு செயல்களுக்கு மாவீரன் என்ற பட்டம் சூட்டப்பட்டால், உண்மையான வீரம் தலை குனியத் தான் வேண்டும்.
நடிப்பு தான்:
விடுதலை இயக்கத்திற்கு முதன் முதலாக விட்தொன்றிய மறத்தமிழர் மாமன்னர் பூலித்தேவனின் வீர வரலாற்று அடிச்சுவட்டையே இருட்டடிப்பு செய்துவிட்டும்; சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த கட்டபொம்முவை மாவீரன், முதல் முழக்கமிட்டவன் என்றும் பட்டம் சூட்டிய புதிய கதையாக அமைந்திருக்கலாம்.
ஆனால்…
மறத்தமிழ் மக்களின் மகத்தான தியாகங்களை அழித்துவிட்டு எழுதி இருப்பது உண்மை வரலாறு என்று மக்கள் ஒப்புக் கொள்ள முடியுமோ?
எனவே, அதை மறைப்பதற்கும், கதையை உறுதிப்படுத்தி கொள்ளவும் திரைப்படமாக்கப் பட்டது. வீரப் பரம்பரையில் வந்த ஒருவர், பல பதக்கங்கள் பெற்ற சிவாஜி கணேசன் பயன்படுத்தப்பட்டார்.
அவரது நடிப்பு திறமையால், தவறான ஒரு வரலாறு நாட்டிலே உண்மை போல் சித்தரித்துக் காட்டப்பட்டது. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதர்க்காகவே பிறந்தவன் என்னும் உரிமையும் ஆக்கப்பட்டுவிட்டது.

கோழையை வீரனாக்கிய பெருமை சிவாஜியின் நிடிப்புத் திறமையே.  தவறான திசை திருப்பப்பட்டதே தவிர வரலாறு நாயகனுக்கு அல்ல.
வரலாறு புரட்டு:

கவிஞர் கண்ணதாசன் சொல்லி இருக்கிறார்களே! “சரித்திரத்தை மாற்றுகிறவன் வரலாற்றுப் புரட்டன்” என்று. வரலாற்றுப் புரட்டும், வஞ்சகமும் தமிழர் வரலாற்றுக் காலம் முதற்கொண்டே உடன் பிறந்ததாயிற்றே!
இத்தகு வரலாற்று புரட்டுக்கு அறிவின் முதிர்ச்சி என்று பட்டம் சூட்டுகிறார்களே!   வாய்மையினை   உயிரோடு கொண்ட இளங்கோ அடிகளின் சிறப்புக் கூறியவர், வழி தவறுவது முறையோ? மறத்தமிழன் பூலித்தேவன் வெற்றிகளை எல்லாம் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் மேல் ஏற்றியது ஏன்?
இது ஆழ்ந்து அகன்ற அறிவின் முதிர்ச்சியின் தீர்ப்பு என்று என்ன முடியுமோ? திரிபு வாதத்தின் உச்சகட்டம் ஆகும் என்றால் தவறாகுமோ?
காய்தல் உவர்த்தல் இன்றி வரலாறுகளை, உண்மைகளை நடுநிலை நோக்கோடு ஆய்ந்து வெளியிட வேண்டுவது தாமே வரலாற்று ஆராய்ச்சியாளன் கடமை. அது தானே வரலாறு. வரலாற்று வல்லுனர்களின் கடமையாகும்.
இதில் வரலாற்று ஆசிரியர் ம.போ.சிவஞான கிராமணியார் எந்த வகை? என்று புரிந்து கொள்ள இயலவில்லை.
இத்துணை எதிர்ப்புகளையும், மறுப்பு நூல்களையும் கண்டும், கேட்ட பின்னரும், மௌனம் சாதிப்பது என்றால்…? அதைத் தாங்கி கொள்ளும் தனித்திறன் பாராட்டுக்குரியதாகும்.
அந்தத் திறமையை தந்தை பெரியார் பாராட்டிப் பட்டமும் கொடுத்துள்ளார்கள். “எதிரிகளின் ஒற்றர்” என்ற பண்பாளர் தான் ம.போ.சிவஞான கிராமணியார்.
அரசியலையே விலைச் சரக்காக அடமானம் வைத்து விட்டு தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மந்திரிப் பதவி கிடைக்கிறதோ என்று நாக்கில் எச்சில் சொட்டக் சொட்ட நின்று, நெஞ்சிலே ஈரம் வற்றிப் போன காரணமாக இருக்கலாம் என்று குறை சொல்ல வேண்டும் என்பது எனது (திரு. வி.ஆ.ஆண்டியப்பத் தேவர்) எண்ணம்.
சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைக்க முடியுமோ? நரி நக்கி கடல் வற்றி விடாது. ஈ குடித்து எருமைப்பால் வற்றாது என்று ஒதுக்கி விடலாம்.
என்றாலும் கூட……..!

கலைஞர் கூறுகிறாரே! தமிழினத் தானைத் தலைவன் தன்மானச் செம்மல்!? மூச்சிலும் பேச்சிலும் முத்தமிழ் மனம் கமழச் செய்யும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் எழுதியுள்ளார்களே,  கலங்காமல்  இருக்க முடியுமோ முதுகுடி மக்கள்.
ஆயிரமாயிரம் ஈட்டிகள் அவர்கள் நெஞ்சிலே பாய்வது போலல்லவா இருக்கிறது.
உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் ஒளிவு மறைவின்றி (!) (ஆச்சர்யம் என்னுடையது) உலகிற்கு வெள்ளிடை மலை போல் எடுத்துக்காட்டி வரும் காலக் கண்ணாடியாம் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய குங்குமம் இதழ் “நெஞ்சுக்கு நீதி” என்ற கட்டுரையில் “முதன் முதலாக விடுதலை முழக்கமிட்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற எழுத்தோவியம் வஞ்சமனப்பான்மையில் வழிதவறிச் சொல்லும் வரலாற்றுப் புரட்டர்களும் நெஞ்சு நிமிர்ந்து விடுவார்களே ? சரித்திரக் கொளைஞர்களுக்கும் நெஞ்சுக்கு நீதி புகட்ட வேண்டுவதும், காழ்ப்பு உவர்ப்பின்றி நடுநிலை நோக்கோடு நாலராயும் பண்பையும் எடுத்துக்கட்ட வேண்டுமே  தவிர புரட்டர்களுக்கு ஊன்று கொள்ளகி விடக்கூடாது. மேலும்…!
கலைஞரே எழுதிவிட்டார் என்று வீரம் விளைவித்த மறத்தமிழ் மக்கள் வரலாறுகளை எல்லாம் அளிக்கும் துணிபை வளர்த்துவிடக் கூடும் என்பது தான் மக்களது கவலையாகும்.

(இந்நூலாசிரியர் குங்குமத்தை படித்து விட்டு ஆதங்கப் படுகிறார். ஆனால் நானோ நெற்கட்டான் செவ்வலில் பூலித்தேவன் நினைவிடத்தில் கலைஞர் பொறித்த வசனத்தையும், அதே கலைஞர் சென்னை கோட்டையில்  2008 சுதந்திர தின விழாவில் (தேவர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும் பொழுது) பேசிய பேச்சையும் நேரில் கேட்டவன். அது என்னவென்றால் “இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்டபொம்மன், தீரன் சின்னமலை, .__ __ __ __ பூலித்தேவன் . . . . . . . . .  . . .” என்று. என்ன சொல்ல….?)


ன் எழுதினார்?

“நான் மீண்டும் பிறப்பதற்கே விரும்புகிறேன். அதுவம் தமிழ்நாட்டில்; தமிழ் நாட்டிலேயும் கலைஞருடைய தோழனாக இருந்து, தமிழுக்கு வாழ்வு தேடுகிற நிலையையே விரும்புகிறேன்”
(இன்னொரு முறையுமா??????)

என்று தாம் எழுதிய ஒரு புத்தகத்தில் ம.போ.சி. எழுதி இருக்கிறாரே. அந்த அனுதாப அலைகளாக இருக்குமோ என்று ஐயப்பாடும் நமக்கு எழவில்லை. ஆனால்….!
கற்பனை கட்டுரையில், உணர்ச்சியையும் வீரவேசத்தையும் தூண்டி எழுதினால் மட்டும் உண்மை ததோக் கருவூலமாகி விடுமோ?
கடமை என்ன?

அடையாளம் தெரியாத இடத்தில நாலரை ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் 7 இலட்சம் வெண்பொற்காசுகள்  செலவிட்டு கொட்டை கட்டப்பட்டுள்ளது. (பாஞ்சாலங்குறிச்சியில்)
அதை ஏன் என்று கேட்க நாம் முன்வரவில்லை. மக்கள் வரிப்பணம் தானே! நமது கேள்வி:
மாவீரன் பூலித்தேவன் ஆட்சி செய்த அரண்மனை இருக்கிறது. அவன் அமர்ந்திருந்த கருங்கல் சதுக்கம் இருக்கிறது. இடிபாடுகளுடன் காணப்படும் பெரிய கோட்டைகள் இருக்கிறது. அன்னை ஆவுடை நாயகி கோவிலில் வழிபாடு செய்த அறையும் இருக்கிறது. (1986 ல் கேட்கப் பட்ட கேள்வி இது, இப்பொழுது கட்டப்பட்டு அது பாட்டுக்கு இருக்கிறது!!!)

இத்துணை சான்றுகள் இருக்கின்றன. அதச் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கடமை யாருடையது?”மங்கை சூதகமானால் கண்கியில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால்…! எங்கே பொய் மூழ்குவது? என்ற தெய்வீகத் திருமகனார் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.
துரோகம்:
எழுச்சி பெற வேண்டும்:
எனவே, வீரர்களை அடையாளம் கண்டு வழிபடுதல் வீரர் வழிச் சந்ததினரேயாவர். ஆயிரமாயிரம் அறிய கருத்துக்களை, தியாக வீரர்கள் வரலாறுகளை எல்லாம் தேடிக் கொணர்ந்து தமிழக வரலாற்று உண்மைகளை தூண்டித் துருவி ஆராய்ந்து, நிகழ்ச்சிகளுக்குத் தகுந்தவாறு நினைவாஞ்சலி செய்ய வேண்டும். இனமான உணர்வு பெற வேண்டும்.
அன்று தான்……..!
உண்மை வரலாறுகளை அழிக்க எண்ணித்  திட்டமிட்டு வரலாறு புரட்டர்களை அடையாளம் காணமுடியும். எழுதுங்கள் உண்மை வரலாறு. உடலிலே உதிரம் வற்றும் வரையிலும் ஓயாமல் எழுதுங்கள். தவறினால் தேசிய மக்களது வரலாறுகள் முழுமையாக அளிக்கப்பட்டு விடும் என்பது உறுதி.  அடிச்சுவடு கூடத் தெரியாத நிலையில் இளையோர்கள் அவதிப்பட நேரிடும்.

அன்று மாவீரன் பூலித்தேவரின் , வீர முரசுகள், எழுப்பிய சுதந்திரக்குரல்கள், ஏற்றிவைத்த சுதந்திரச் சுடரொளி நீருபூத்த நெருப்பாக இருந்தது. அது தான் 1947 ஆகஸ்ட் புரட்சி விடிவெள்ளி. ஒவ்வொரு தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் பதிய வைக்க வேண்டியதாகும்.
எனவே விடுதலைக்கு முதல் முழக்கம் முழங்கிய மாவீரன் பூலித்தேவரது வரலாறுகளை பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையிலும் மாணவர்களுக்குப் படமாக்கப் படவேண்டும்.
வாழ்க! வாழ்க!! உத்தம தியாகிகள் புகழ்!!!

…..

This entry was posted in பூலித்தேவன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *