சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது.
இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது குடிமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வந்தார். தர்பார் செல்லும் வழியிலுள்ள இராஜ குடும்பத்திற்கான குடியிருப்புகள் மிகவும் அற்புதமாக கட்டப்பட்டிருக்கின்றன.
இந்த அரண்மனை சுவர்களில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் மன்னர் சேதுபதி குடும்பத்தின் இராஜவாழ்க்கையை சித்தரிப்பவையாக உள்ளன. இந்த சுவரோவியங்களில் மராத்தியர்களுடன் செய்யப்பட்ட போர்க் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன.
இந்த சுவரோவியங்கள் ஐரோப்பிய வியாபாரிகளுக்கும், சேதுபதிகளுக்கும் இருந்த வாணிபத் தொடர்பையும் பிரதிபலிப்பதாக உள்ளன. எனவே இந்த சுவரோவியங்கள் கலைகளின் வளர்ச்சியில் முக்கியமானவையாக உள்ளன.
இந்த அளவு சுவரோவியங்கள் வரையப்பட்டிருப்பதும், அவற்றில் காட்டப்பட்டுள்ள காட்சிகளும் இந்த சேதுபதி அரசர்களின் காலத்தில் கலையும், கட்டிடக்கலையும் இருந்த மகோன்னதமான நிலையைக் காட்டுகின்றன.