சமுதாயம், ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர்: ஸ்டாலின்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க பவளவிழா மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை திறந்து வைக்கிறார்
தஞ்சாவூர், ஜூன் 6,2010:  சமுதாயம், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர் என்றார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் முன்னேற்றச் சங்கம் சார்பில், அதன் 75 ஆம் ஆண்டு விழா, தமிழக முதல்வருக்கு நன்றி பாராட்டு விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை திறந்து வைத்து அவர் மேலும் பேசியது:
முக்குலத்தோர் சங்கத்தை கடந்த 75 ஆண்டுகளாக வழிநடத்தியதில் மூக்கையாத் தேவர், ராமநாதபுரம் மன்னர் ராமானுஜ சேதுபதி, கிருஷ்ணசாமி வாண்டையார், சேவகப் பாண்டியன், செல்லபாண்டியன், தியாகராஜ காடுவெட்டியார் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதே சமுதாயத்தில் பிறந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தன் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும் போராடினார். இந்து தாய்க்கு பிறந்து, இஸ்லாமிய பெண்ணால் வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ பாதிரியார்களால் கல்வி பெற்றவர்.
எந்த மதமும் சம்மதம் என்ற உணர்வோடு வாழ்ந்தவர். சாதி வேற்றுமை ஒழிய வேண்டும், சாதி, மத பேதம் கூடாது என்று வலியுறுத்தினார். ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை அடையும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்து பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மறைந்தார்.
ஜமீன்தார் முறை ஒழிப்புக்காக 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றபோதும் ஜமீன்தார் முறை ஒழிப்புச் சட்டத்தை ஆதரித்தார். தேவரைப் போலவே தமிழக முதல்வரும் சாதி, மதம் கடந்து சமுதாய ஒற்றுமையை நிலைநாட்ட பெரியார் பெயரில் சமத்துவபுரங்களை தொடங்கினார். நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியை தொடங்கியபோது தனது கொள்கைகளை பரப்ப அதில் சேர்ந்தார்.
அதன் தமிழக கிளையின் தலைவராக நேதாஜியால் நியமிக்கப்பட்டு, அவராலேயே தென்னகத்தின் போஸ் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து நாட்டுக்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தினார். தன் சமுதாயத்தின் இழிவுக்கு காரணமான குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க வெள்ளை ஆட்சியை எதிர்த்து போராடி வெற்றி பெற்றார்.
ஹரிஜன மக்களின் ஆலயப் பிரவேச போராட்டங்களை நடத்தி தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். 1937 முதல் 1962 வரை நாட்டிலேயே தொடர்ந்து நீண்டகாலம் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் இவரே. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதிகமான வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார்.
இவரது பேச்சாற்றல் அளப்பரியது. பொதுக் கூட்டங்களில் நீண்ட நேரம் மக்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடியவர். தேர்தல் நேரங்களில் இவர் பொதுக் கூட்டங்களில் பேச தடை விதிக்கப்பட்டது. தனது வாழ்நாளில் நான்கில் ஒரு பகுதியை சிறையில் கழித்தவர் பசும்பொன் தேவர். தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கம் சில ஆண்டுகள் வேறு கூட்டணியில் இருந்தது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது அதன் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அந்த கோரிக்கைகளை திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
அதில் ஒன்றுதான் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் இன மக்களுக்கு அவர்கள் வாழும் மாவட்டத்திலேயே சாதி சான்றிதழ் வழங்கலாம் என்ற உத்தரவு. அதேபோல, முக்குலத்தோர் சங்கத்தின் மற்ற கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றித் தருவார் என்றார் ஸ்டாலின்.
This entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *